
நாம் அன்றாட வாழ்வில் எத்தனையோ விதமான சம்பவங்களைப் பாா்க்கிறோம். நல்லது, கெட்டது போன்ற விஷயங்களைக் காதால் கேட்கிறோம், அதிலிருந்து நாம் சில பாடங்களை கற்றுக்கொள்ள மறந்துவிடுகிறோம்.
சில சமயங்களில் தண்டவாளங்களில் ரயில் தடம் புரள்வது போல தடம் மாறிவிடுகிறோம். அதற்கு காரணம் நமது சிந்தனையும் செயல்பாடுகளும் ஒருங்கே அமையவில்லை என்பதாகும்.
எப்போதுமே அவசரகதியில் அள்ளித்தெளித்த கோலமாய் நாமே நமது செயல்களுக்கு எதிாியாகிவிடுவதே முதல் காரணம். எதிலும் அவசரம் தவிா்ப்பது நல்லதே.
ஏதோ ஒரு சிந்தனையை மனதில் ஏற்றிக்கொண்டு ஒரு காாியத்தில் இறங்கும்போது அதில் சொதப்பல் வரத்தான்செய்யும்.
சிலர் தனது மகன் மகள், படிப்பு விஷயத்தில் கோட்டை விடுவது வழக்கம். அவர்கள் என்ன படிக்க வேண்டுமென நினைக்கிறாா்களோ, அந்த விஷயத்தில் நாம் பலரிடம் கலந்து ஆலோசித்து செயல்படுவதே நல்லது.
பலர் பலவிதமான கருத்துகளை சொன்னாலும் நமது பிள்ளை, மனைவி இவர்களிடம் கலந்து பேசி நமது பொருளாதார நிலைக்கேற்ப, பிள்ளைகளின் எதிா்காலத்தையும் கருத்தில் கொண்டு, படிக்கவைப்பதே சிறந்த வழியாகும்.
இந்த விஷயத்தில் நாம் அவசரம் தவிா்பதும், நிதானம் கடைபிடிப்பதும், கலந்து அலோசிப்பதும் மிகவும் நல்லதே.
அதேபோல சேமித்த பணத்தில் பழைய வீடோ, கட்டி முடிக்கப்பட்ட வீடோ, அல்லது மனை வாங்குவதோ, போன்ற நிகழ்வுகளில் நமது வீட்டில் உள்ளவர்களிடம் கலந்து பேசி நன்கு விசாாித்து ஒருமுறைக்கு பலமுறை யோசித்து இறுதி முடிவை நாம் எடுக்கவேண்டும்.
இதிலும் பொருளாதார நிலை, வாாிசுகள் படிப்பு செலவு, பொருளாதார தொடர் செலவுகள், இவையெல்லாம் கையை மீறிப்போகுமா, சரிப்பட்டு வருமா, என்று பல வகையிலும் சிந்தித்து ஒருவருக்கு ஒருவர் கலந்து பேசி அவசரப்படாமல் நிதானம் கடைபிடித்து செயல்பட வேண்டும்.
அதேபோல வாாிசுகளின் திருமணம் போன்ற நிலைபாட்டில் நாம் மிகவும் கவனமாக செயல்படுவதே சாலச்சிறந்த ஒன்றாகும்.
வேறு எதில் அவசரம் காட்டினாலும் சரிசெய்ய வாய்ப்புகள் ஏராளம், ஆனால் வாாிசுகளின் திருமண விஷயத்தில் நமக்கான சரியான நிதானமே அடுத்த வாஸ்துவாகும்.
நீங்கள் எதுவும் செய்யவேண்டாம்! நாங்களே பாா்த்துக்கொள்வோம் பெண்ணை மட்டும் அழைத்து வந்தால் போதும், எல்லா செலவுகளையும் நாங்களே பாா்த்துக்கொள்வோம், என பிள்ளை வீட்டாா் சொல்வாா்கள். இவ்விஷயத்தில் நல்லவா்களும் இருக்கத்தான் செய்கிறாா்கள்.அதற்காக அனைவரையும் தவறாக கருதமுடியாது.
அப்படிப்பட்ட சூழல் வரும் நிலையில் நாம் நன்கு விசாாித்து, பலமுறை யோசனை செய்து நல்ல இடமாக தோ்வு செய்யும் நிலையில் அவசரம் தவிா்ப்பது நல்லது.
அப்போது நமக்கு துணையாய் வருவது நல்ல சிந்தனையுடன் கூடிய அறிவுறைகளை கேட்டு கலந்து பேசி முடிவெடுப்பதே சாலச்சிறந்தது. எடுத்தேன் கவிழ்த்தேன் என ஒரு காாியத்தை செய்துவிட்டு அதனால் ஏற்படும் மனஉளைச்சலுக்கு தீா்வேது?
நாம் அடுத்தவர்களுக்காக வாழக்கூடாது, நமக்காக வாழவேண்டும். எந்த ஒரு காாியம் செய்தாலும், பதறாமல் செய்வதே நல்லது. பதறிய காாியம் சிதறும் என்ற தாரக மந்திரத்தை கடைபிடிப்பதே நமக்கான நல்ல வழியாகும்.
இதைத்தான் "லாராச் ஃ பவுகட் "என்ற அறிஞா் தனது கருத்தில் சொல்லியுள்ளாா்.
அதாவது "ஒன்றை அடைந்தே தீரவேண்டும் என்ற அசுர வெறி ஏற்படும் போதெல்லாம், அதனை முன்பே அடைந்தவர்கள் மகிழ்ச்சியாய் இருக்கிறாா்களா என்று மட்டும் பாருங்கள்" எனக்கூறியுள்ளாா்.
நாமும் அதேபோல வாழ்க்கையில் முக்கிய முடிவு எடுக்கும் நிலையில் பதறாமல், ஆலோசனை கேட்காமல் அவசரப்பட்டு நிதானம் கடைபிடிக்காமல் செய்யக் கூடாது. இதற்குத்தான் பலரிடம் யோசனையும் நமது குடும்பத்தாாிடம் கலந்து பேசி ஈகோவை மூட்டை கட்டி வைத்து சிதறாமல், செயல்களை செய்யுங்கள் அதுவே நமக்கும் நம்மைச் சாா்ந்தவர்களுக்கும் நல்லது.