
சிலர் சோம்பிக் கிடப்பார்கள். அவர்களைப் பார்த்து ஏதாவது வேலை பார்க்கலாமே என்று கூறினால் எனக்கு சந்தர்ப்பம் அமையவில்லை. நான் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. அந்த சந்தர்ப்பத்துக்காக காத்துக்கொண்டிருக்கிறேன். அது கிடைத்து விட்டால் ஜாம் ஜனமென்று ஜெயித்துக் காட்டுவேன் என்று கூறுவார்கள்.
சந்தர்ப்பம் வரும் என்று காத்துக்கிடப்பது சரியான செயல் அல்ல. சந்தர்ப்பம் என்பது ஒவ்வொரு மனிதனின் செயலிலும் இருக்கிறது. தேடிப்பார்த்தால் அவனது காலடியில் கூட சந்தர்ப்பம் கைகட்டி காத்து கிடக்கும். அதை விடுத்து சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பதும், சந்தர்ப்பம் வாய்க்கவில்லை என்று தமது வறுமை நிலைக்கு சமாதானம் கூறிக் கொள்வதும், சந்தர்ப்பம் தேடி வரட்டும் சகலத்தையும் வெற்றிக் கொள்ளலாம் என எதிர்பார்த்து இருப்பதும் 'இல்லாத ஊருக்குப் போகாத பாதையில் பயணிப்பதற்குச் சமமாகும்.
பறவையைக் கண்டான் விமானம் படைத்தான் என்று கண்ணதாசன் பாடல் உண்டு. ரைட் சகோதரர்களுக்கு ஊக்க சக்தியை கொடுத்தது பறவைகள்தானே! அவர்கள் விமானத்தை கண்டுபிடித்து பறந்து காட்டவில்லையா?
தொங்கவிடப்பட்ட ஒரு கனப்பொருளை அசைத்ததால் சிறிது நேரம் அங்கும் இங்கும் ஆடிவிட்டு ஓர் இடத்தில் நிலை கொள்வதை கண்டு சிறுவன் கலிலியோவுக்கு பெண்டுலத்தின் தத்துவத்தைக் கண்டுபிடிக்கும் சந்தர்ப்பம் கிட்டவில்லையா?
மரத்திலிருந்து விழுந்த ஒரு ஆப்பிள் பழம் மண்ணை நோக்கி வருவதைக் கண்டு இளைஞன் நியூட்டனுக்கு புவி ஈர்ப்பு சக்தி புரிவதற்கு சந்தர்ப்பம் கை கொடுத்ததா இல்லையா?
சந்திரனும் சூரியனும் உருண்டையாக இருப்பதைக் கண்டும், சிறிது தூரம் சென்றதும் கப்பல் மறைந்து விடுவதைக்கண்டும் கொலம்பஸுக்கு பூமியும் உருண்டையாகத்தான் இருக்கும் என்ற முடிவுக்கு வர சந்தர்ப்பம் அமைந்ததா இல்லையா?
இவையெல்லாம்தான் சின்னஞ்சிறு சந்தர்ப்பங்களின் வழியாக கிடைத்த சாதனைகள் என்பது. மற்றவர்களுக்கு சாதாரணமாகத் தோன்றும் விஷயங்கள் மேதைகளுக்கு அசாதாரணமாகத் தோன்றி அற்புதங்களை நிகழ்த்திகாட்ட அடித்தளமிட்டிருக்கிறது. இதுபோன்ற சாதனைகளை மேற்கொள்ள இளைஞர்கள் துணியவேண்டும்.
ஏன் இளைஞர்கள்தான் துணியவேண்டுமா? மற்றவர்கள் துணிய கூடாதா? என்று கேட்பது காதில் விழுகிறது. துடிப்புமிக்க 100 இளைஞர்களை கொடுங்கள் நாட்டைச் சீர் திருத்திக் காட்டுகிறேன் என்று கூறினார் விவேகானந்தர். அவர் கூறியதன் காரணம் இளைஞர்களுக்குத்தான் துடிப்பும்,ஆர்வமும், அதை முயன்று செய்யும் மனகிளர்ச்சியும் இருந்து கொண்டிருக்கும். சோர்வு இல்லாமல் உழைப்பதற்கு அந்த வயது இடம் கொடுக்கும் என்பதால் தான் அப்படிச் சொன்னார்.
மற்றபடி எதையும் செய்ய வயது ஒரு தடை இல்லை என்பதால் எல்லா வயதினரும் புதிய முயற்சிகளில் இறங்க, ஆராய்ச்சி செய்து வெற்றி காண புதிய பாதையில் தடம் பதிக்கலாம்.
சந்தர்ப்பங்கள்தானே வரும் என்று எதிர்பார்த்து காத்துக்கிடப்பதை விட, நாமே சந்தர்ப்பங்களை உருவாக்கிக்கொண்டு ஜெயித்துக் காட்டுவதுதான் வெற்றிக்கு அழகு! கண்டுபிடிப்புகளுக்கும் பெருமை. செய்வோம்; அவற்றினால் சிறப்படைவோம்!