
ரவை உப்புமா செய்வதற்கு முன்னர் ரவையில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றிப் பிசிறி வைத்து, பிறகு உப்புமா செய்து பாருங்கள். கட்டி தட்டாமல் நன்கு உதிரியாக வரும்.
சிவப்பு முட்டைக்கோஸ் சமைக்கும்போது நீல நிறமாக மாறாமல் இருக்க, வேகவைக்கும் தண்ணீரில் அரை டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு கலந்துகொண்டால் போதும்.
தேங்காய் சட்னி அரைக்கும்போது புளிக்காத தயிர் சேர்த்து அரைத்தால் வெண்மை நிறமும், மணமும் நிறைந்த சுவையான சட்னி ரெடி.
ரவா லட்டு செய்யும்போது ரவையை வறுத்த பின் மிக்ஸியில் பொடி செய்யும்போது இரண்டு டீஸ்பூன் பால் பவுடர் கலந்தால் ருசி மிகுந்து இருக்கும்.
மோர்க்குழம்பு தயாரிக்கும்போது, இரண்டு மோர்மிளகாய் வற்றலை வறுத்துக் குழம்பில் சேர்த்தால் மோர்க் குழம்பு வாசனையே அலாதிதான்.
குக்கரில் எண்ணெய், தக்காளி, பூண்டு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், பெருங்காயம், மல்லித்தூள் மற்றும் உப்பு சேர்த்து இரண்டு விசில் வரும்வரை வைத்து எடுத்து அரைத்தால் சுவையான தக்காளித்தொக்கு ரெடி.
வெண்டைக்காயைப் பொடியாக நறுக்கி லேசாக எண்ணெயில் வதக்கி சாட் மசாலா, சில்லி பவுடர், உப்பு ஆகியவற்றை சேர்த்து புதுவிதமான ரைத்தா தயார் செய்யலாம்.
வெண்ணைய் வாங்கி வந்ததும் அப்படியே ஃ ப்ரிட்ஜூக்குள் வைத்துவிடாமல் சிறு துண்டுகளாக்கி வைக்கவும். பிரட்டுக்குத் தடவ, பட்டர் தோசை சுட, பட்சண வகைகள் என பல்வேறு சமயங்களில் தேவையான துண்டுகளை மட்டும் எடுத்துக்கொண்டால், மீதி வெண்ணைய் அப்படியே ஃ ப்ரிட்ஜில் பல நாட்கள் வரை கெட்டுப் போகாமலிருக்கும்.
அடைக்கு மாவு அரைக்கும்போது, அரிசி, பருப்பு, இஞ்சி, பெருங்காயம், கறிவேப்பிலை, உப்பு இவற்றுடன் வெங்காயத்துண்டுகளையும் சேர்த்தால் செய்யும் அடை சுவை மிகுந்து இருக்கும்.
இனிப்புகள் தயாரிக்க பாலை திரிக்கும்போது எலுமிச்சைக்குப் பதிலாக வினீகர் சேர்த்துக்கொண்டால் அதிக புளிப்பு தட்டாது.
கட்லெட் செய்யும்போது உருளைக்கிழங்கு மசாலா கலவையை சிறிது நேரம் ஃ ப்ரிட்ஜில் வைத்துவிட்டுச் செய்தால் கட்லெட் மொறு மொறுப்பாக இருக்கும்.
பச்சரிசி ஒரு பங்கு, அரைப்பங்கு புழுங்கல் அரிசி, உளுந்து, வெந்தயம் தலா கால் பங்கு என்ற அளவில் சேர்த்து ஊறவைத்து ஒரு கப் தேங்காய்ப்பால் சேர்த்து அரைத்தால் செய்யும் ஆப்பம் சுவையாக இருக்கும்.