
சமீபத்தில் நாங்கள் 5-6 ஃப்ரெண்ட்ஸ் சேர்ந்து மும்பை நகரின் வெளியே இருக்கும் இடத்திற்கு ஒருநாள் பிக்னிக் சென்றிருந்தோம். குஜராத்தி சிநேகிதி கல்பனாஷா கொண்டு வந்திருந்த டோக்ளா பார்க்க கலர்ஃபுல்லாகவும், சாப்பிட சுவையாகவும் இருந்தது. அதன் பெயரைக் கேட்கையில், ஹெல்த்தியான "காகடி-காஜர் ஸ்பெஷல் டோக்ளா" என்றாள். அதன் செய்முறையைக் கேட்க, அவள் விபரமாக கூறியது இதோ...
காகடி-காஜர் ஸ்பெஷல் டோக்ளா
தேவை:
* காகடி (வெள்ளரிக்காய்) 2
* காஜர் (கேரட்) 2
* நல்ல தயிர் 1 கப்
* சலித்த ரவை 1 கப்
* அரைத்த இஞ்சி-பச்சைமிளகாய் பேஸ்ட் 1 1/2 டீஸ்பூன்
* ரீஃபைன்டு ஆயில் 2 டீஸ்பூன்
* உப்பு தேவையானது
* தண்ணீர் தேவையானது
* ஈனோ ஃப்ரூட் சால்ட் 1 டீஸ்பூன்
தாளிக்க:
* தேங்காய் எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு 1 டீஸ்பூன்
* வெள்ளை எள் 1 டீஸ்பூன்
* சீரகம் 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் மெல்லிசாக கீறியது 3
* கறிவேப்பிலை கொஞ்சம்
* பச்சை கொத்தமல்லி இலை நறுக்கியது -- கொஞ்சம்
செய்முறை:
முதலில் காகடி மற்றும் காஜரை தோல் சீவி தனித்தனியாக துருவி வைத்துக்கொள்ளவும்.
வாயகன்ற ஃபௌலில், சலித்த ரவை, துருவிய காகடி - காஜர், இஞ்சி-பச்சை மிளகாய் பேஸ்ட், எண்ணெய், தேவையான உப்பு, தயிர் ஆகியவைகளை போட்டு கலந்த பின், போதுமான தண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்துக்கொள்ள வேண்டும்.
டோக்ளா ட்ரே அல்லது தட்டில் பரவலாக எண்ணெய் தடவவும்.
கரைத்து வைத்திருக்கும் கலவையில், ஈனோ ஃப்ரூட் சால்ட்டைப் போட்டு ஒரு கலக்கு கலக்கி, உடனே டோக்ளா ட்ரேயில் கொஞ்சம் பரவலாக அரை இன்ஞ் கனத்தில் விடவும்.
குக்கரில், சிறிது தண்ணீர்விட்டு அடுப்பில் வைத்து, உள்ளே ஒரு ஸ்டாண்ட் வைத்து அதன் மேல் டோக்ளா ட்ரேயை வைத்து மூடிவிடவும்.
மிதமான சூட்டில் சுமார் 15 நிமிடங்கள் வேகவிடவும். குக்கர் லிட் மீது விசில் போடவேண்டாம்.
பின்னர் மெதுவாக திறந்து, டூத்பிக் அல்லது மெல்லிய குச்சியால் வெந்திருக்கிறதா எனப் பார்த்து வெளியே எடுத்து ஆறவிடவும்.
ஆறியதை செவ்வக வடிவில் கட் செய்யவும். இப்போது, காகடி-காஜர் ஸ்பெஷல் டோக்ளா ரெடி.
வாணலியை அடுப்பில் வைத்து, தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, சீரகம், வெள்ளை எள், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து, காகடி-காஜர் டோக்ளா மீது பரவலாகப் போடவும். நறுக்கிய. கொத்தமல்லி இலையை மேலாகத் தூவிவிடவும்.
கலர்ஃபுல்லாக, ஹெல்த்தியாக, சுவையாக இருக்கும் இந்த "காகடி-காஜர் ஸ்பெஷல் டோக்ளாவை" அப்படியே சாப்பிடலாம். தேவைப்பட்டால், இனிப்பு-புளிப்பு சட்னி, பச்சை மிளகாய் சட்னி தொட்டுக்கொள்ளலாம்.