
சென்னா பச்சைப் பயறு கூட்டு
தேவை:
சென்னா, பச்சைப்பயறு - தலா அரை கப்
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 1
சைவ கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
சீரகம் - 1 ஸ்பூன்
உப்பு, எண்ணெய்- தேவைக்கேற்ப
செய்முறை:
சென்னா, பச்சைப் பயறு இரண்டையும் எட்டு மணிநேரம் நீரில் ஊற வைக்கவும். பிறகு நீரை வடித்து விட்டு, வேறு நீர் சேர்த்து வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, சீரகம், பெருங்காயத்தூள் தாளித்து வெங்காயம், தக்காளியை நறுக்கி வதக்கவும். பச்சை மிளகாயை நீள வாக்கில் கீறிப்போட்டு வதக்கவும். அதில் சைவ கரம் மசாலா தூள், வெந்த சென்னா, பச்சைப்பயறு, உப்பு கலந்து கிளறவும். தேவைக்கேற்ப நீர் சேர்த்து, கொதித்ததும் இறக்கி வைக்கவும். சுவையான சென்னா, பச்சை பயறு கூட்டு தயார்.
பாசிப்பருப்பு சாம்பார்
தேவை:
பாசிப்பருப்பு - அரை கப்
தக்காளி - 2
உருளைக்கிழங்கு, கத்தரிக்காய் - தலா 1
நறுக்கிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 4
தாளிக்க - கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், வற மிளகாய் 2
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
பாசிப்பருப்பு, உருளைக்கிழங்கு, கத்தரிக்காய் ஆகியவற்றை தனித்தனியே வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்தம் பருப்பு, வர மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கி போட்டு வதக்கவும். பின்னர் அதில் வெந்த பாசிப்பருப்பு, உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், உப்பு, தேவைக்கேற்ப நீர் கலந்து கொதித்ததும் இறக்கி வைக்கவும். சுவையான புளி இல்லா பாசிப்பருப்பு சாம்பார் தயார்.
குடைமிளகாய் பொரித்த குழம்பு
தேவை:
குடைமிளகாய் - 2
பாசிப் பருப்பு அரை கப்
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
வர மிளகாய் - 5
மிளகு - 2 ஸ்பூன்
தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்
தாளிக்க சீரகம், நெய் தலா ஒரு ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
குடைமிளகாயை நறுக்கி சிறிது நீர் விட்டு வேகவைக்கவும். பாசிப்பருப்பையும் வேகவைக்கவும். இரண்டையும் சேர்க்கவும். உளுந்தம் பருப்பு வரமிளகாய், மிளகு, தேங்காய் துருவல் இவற்றை அரைத்து வைக்கவும். வாணலியில் சிறிது நெய் விட்டு, அரைத்த கலவையை போட்டு, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி வைத்தால் சுவையான புளி இல்லா பொரித்த குழம்பு தயார்.
ஆரஞ்சு ரசம்
தேவை:
ஆரஞ்சு பழச்சாறு – அரை கப்,
துவரம் பருப்பு - 3 டேபிள்ஸ்பூன்
மிளகு சீரகத்தூள் - 1 ஸ்பூன்
தாளிக்க – கடுகு, நெய், கறிவேப்பிலை. பெருங்காயத்தூள்
மல்லித்தழை – சிறிது,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
துவரம் பருப்பை குழைய வேகவைக்கவும். வெந்த பருப்பில், உப்பு, மிளகு சீரகத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து, கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, இறக்கி ஆரஞ்சு பழச்சாறை கலந்து, மல்லித்தழை தூவினால், சுவையான மணமான ஆரஞ்சு ரசம் தயார்.