
நாம் நம் காலை அல்லது இரவு உணவுக்கு சப்பாத்தி செய்யும்போது சப்பாத்தி மற்றும் சைடு டிஷ் தனித் தனியாக செய்வதற்குப் பதில் ஸ்டஃப்ட் சப்பாத்தி செய்துவிட்டால் வேலையும் சுலபம். வித்யாசமாகவும் இருக்கும். இதோ, ஒரு சிம்பிள் ரெசிபி!
உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா ஸ்டஃப்ட் சப்பாத்தி ரெசிபி
தேவையான பொருட்கள்:
1.கோதுமை மாவு 2 கப்
2.உருளைக் கிழங்கு 2
3.பச்சைப் பட்டாணி ½ கப்
4.துருவிய கேரட் 1 டேபிள் ஸ்பூன்
5.இஞ்சி பூண்டு பேஸ்ட் 1½ டீஸ்பூன்
6.பச்சை மிளகாய் 2
7.பெரிய வெங்காயம் 1
8.தக்காளி 1
9.கொத்தமல்லி இலை 1 கைப்பிடி
10.பெருஞ்சீரகத் தூள் ½ டீஸ்பூன்
11.சீரகத் தூள் ½ டீஸ்பூன்
12.சிவப்பு மிளகாய்த் தூள் ½ டீஸ்பூன்
13.கரம் மசாலாத் தூள் ½ டீஸ்பூன்
14.உப்பு தேவையான அளவு
15.எண்ணெய் தேவையான அளவு
16.பட்டர் 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவைப் போட்டு, அதனுடன் தேவையான உப்பு மற்றும் பட்டரை சேர்க்கவும். பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவை பிசைந்து தனியே வைக்கவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலை உரித்துக் கொள்ளவும். பட்டாணியை கொதிக்கும் நீரில் போட்டு 7 நிமிடம் வேகவைத்து எடுக்கவும். பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பொடிசா நறுக்கிக்கொள்ளவும். உருளைக்கிழங்கையும் பட்டாணியையும் ஒரு பாத்திரத்தில் போட்டு பொட்டட்டோ மாஷெர் (Masher) வைத்து நன்கு ஒரு சேர மசிக்கவும். அதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி, துருவிய கேரட், இஞ்சி பூண்டு பேஸ்ட், கொத்தமல்லி இலை, உப்பு மற்றும் பிற மசாலா தூள்களையும் (Sl. No.10 முதல் 13 வரை) சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து கொள்ளவும்.
பின் சப்பாத்தி மாவை, வழக்கமான சப்பாத்திக்கு எடுப்பதை விட சிறிது பெரிதான உருண்டைகளாக செய்து கொள்ளவும். ரோலிங் பின் வைத்து ஒவ்வொரு உருண்டையையும் வட்ட வடிவில் உருட்டிக்கொள்ளவும்.
நடுவில், தயாராய் உள்ள மசாலா கலவையிலிருந்து தேவையான அளவு எடுத்து வைத்து, விரலால் பரத்திவிடவும். பின் சப்பாத்தியின் ஓரங்களை மடித்து சதுரம் அல்லது முக்கோண வடிவில், மசாலா வெளியில் தெரியாமல், ஸ்டஃப்ட் சப்பாத்திகளை வடிவமைக்கவும்.
பிறகு ஒரு தவ்வாவை அடுப்பில் வைத்து, எண்ணெய் தடவி ஒவ்வொரு சப்பாத்தியாக பொன்னிறத்தில் சுட்டெடுக்கவும்.
கெட்டித் தயிர் தொட்டு, சூடாக உட்கொள்ள சுவை அள்ளும்!