
பொங்கல் பண்டிகைக்கு வாங்கிய கரும்பு வீட்டில் நிறைய இருக்கும். அதை என்ன செய்வதென்று தெரியாமல் இருப்பவர்களுக்கு இதோ சூப்பரான ரெசிபி.
தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் திருவிழா முன்னோர்களால் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தைத்திருநாளான இந்த நாளில் விவசாயிகள் அறுவடை செய்து சூரியனுக்கு படைப்பார்கள். இது நாளடைவில் விழாவாக மாறி சூரியனுக்கு பொங்கல் படைக்கும் நாளாக மாறியது. இது வட இந்தியாவில் மகர சங்கராந்தியாக கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவில் அனைவரும் கரும்பு உண்ணுவது வழக்கம். தற்போது ரேஷன் கடைகளிலேயே கரும்பு விநியோகிக்கப்படுகிறது. பொங்கல் வைத்தவுடனே அனைவரும் கரும்பு கடித்து சாப்பிடுவார்கள். என்னதான் கரும்பு பிரியராக இருந்தாலும் கூட ஒரு கரும்பு தான் சாப்பிட முடியும். அப்படி பொங்கல் பண்டிகை முடிந்த நிலையில், பலரது வீடுகளில் கரும்பு மிஞ்சியிருக்கும். அது காய்ந்த பிறகு குப்பைக்கு போடுவதற்கு பதிலாக இது போன்று அல்வாவாக செய்து ருசித்து சாப்பிடலாம். அதன் ருசி அட்டகாசமாக இருக்கும். கரும்பில் அல்வா செய்யமுடியுமா என்றுதானே நினைக்கிறீர்கள். நிச்சயம் முடியும் அது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கரும்பு
வெல்லம் - தேவையான அளவு
முந்திரி, உலர் திராட்சை - தேவையான அளவு
கோதுமை மாவு - 1 கப்
கார்ன் ப்ளவர் மாவு - 1 கப்
செய்முறை:
வீட்டில் இருக்கும் கரும்புகளை சாறாக எடுத்து கொள்ளவும். பீஸ் பீஸாக வெட்டி மிக்ஸியில் போட்டு அரைத்தால் கூட சாறு கிடைத்துவிடும். இதை தொடர்ந்து வெல்லத்தை வானலியில் போட்டு கொதிக்க விட வேண்டும். அது தண்ணீராக மாறிய பிறகு தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும். கரைந்தால் மட்டும் போதும். பிசுபிசு தன்மை வரை காத்திருக்க தேவையில்லை.
பிறகு நெய்யில் முந்திரி, உலர் திராட்சை போட்டு வதக்கி கொள்ளவும். அதை தனியாக எடுத்து வைத்துவிட்டு அதில், கரும்பு சாறை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். அது கொதித்து கொண்டு இருக்கும் போதே, கோதுமை மாவையும், கார்ன் ப்ளவர் மாவையும் சேர்த்து கட்டி கட்டியாகாமல் கரைக்க வேண்டும்.
நன்றாக கரைந்து கூல் பதத்திற்கு வந்த பிறகு வெல்ல பாகுவை ஊற்றி நன்கு கிளற வேண்டும். அது அல்வா பதத்திற்கு வந்த பிறகு கடைசியாக வறுத்து வைத்திருக்கும் முந்திரி, திராட்சையை போட்டு கிளறினால் டேஸ்டியான கரும்பு அல்வா ரெடி. சூடாக சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.