Healing spinach...
Keerai special recipes

நோய்தீர்க்கும் கீரை இலைகள் வழங்கும் ஆரோக்கிய சுவைகள்!

Published on

தினமும் நோய்தீர்க்கும் கீரை இலையை உண்பதனால் தாம் கொண்ட நோய் தீரும், நோய் தீர ஆயுள்கூடும்.

கரிசலாங்கண்ணி: “கரிசல்” என்றால் தங்கம் அல்லவா? தங்க மேனி தளதளப்பு _ தந்திடுமாம் இது மினுமினுப்பு. கரிசனமாக காக்க வேண்டிய கீரை.

வெள்ளை கரிசலாங்கண்ணி கசப்புத்தன்மை மிக்கது. பக்குவமாய் பாகம் செய்தால் உணவுக்கு தக்கது. மஞ்சளில் கசப்பு குறைவு இதுவே உணவுக்கு நிறைவு. இந்த மூலிகை கீரையை பச்சையாகவும், துவரம் பருப்புடன் சேர்த்து கூட்டாகவும் உண்ணலாம். எலுமிச்சைப் பழத்துடன் சேர்த்துப் பச்சடியாகவும், துவையலாகவும் பக்குவம் செய்தும் உணவாக்கலாம்.

கோவைக்கீரை: கோதையரின் இதழ்களை, “கொவ்வைக் கனியிதழாள்” என்று கவிஞர்கள் வருணிப்பர். அத்தனை சுவையுடடையது. குங்கும நிறம் கொண்ட கோவைப் பழத்தைப் போலவே கோவைக் கீரையும் சுவையுடடையது.

கோவைக் கீரையில் கைப்புத் தன்மை உண்டு. எனவே மற்ற கீரைகளுடன் சேர்த்து சமைப்பது நல்லது. இதை துவரம் பருப்பு சேர்த்து கூட்டு வைத்து உண்ணலாம். பாசிப் பயறு, தட்டப் பயறு போன்ற பயறு வகை தானியங்களையும் இக்கீரையை போட்டு கிளறி இறங்கினால் நாவிற்கு நல்ல சுவை கொடுக்கும். கோவைக்காயில் சாம்பாரும் வைக்கலாம், பொரிக்கவும் செய்யலாம்.

தூதுவளை கீரை: வேளை அறிந்து இக்கீரையை உண்பதால், வாழ்வில் வெற்றி உண்டு என்பதால் என்னவோ தூதுவளை என்று பெயரிட்டுள்ளனர். தூதுவளை, தூதுளை என்பதெல்லாம் இதன் மாற்றுப் பெயர்கள். “தூதுளம் என்பது இதன் இலக்கியப் பெயர் என்று குறிப்பர். “ஞானக்கீரை என்றும் வழங்குவர்.

இதையும் படியுங்கள்:
கோடைக்கேற்ற ஸ்மூதி செய்யலாம் எளிதாக..!
Healing spinach...

இதன் தழைகள், பூ, காய்கள், கொடியாவுமே சமையலுக்கு சால்பானவைதான். இதன் இலைகளை முட்கள் நீக்கி, ஆய்ந்தெடுத்து நல்லெண்ணெயில் வதக்க வேண்டும். வெங்காயமும், உப்பும் கூட்டுப் பொருளாக சேர்த்து வதக்கிச் சுடு சோற்றில் உண்ணச்சுவை மிகும். அரிசிமாவு அடை செய்து உண்ணவும் இது உகந்ததாகும். மேலும் கூட்டு, பச்சடி, துவையல் முதலிய பாகங்கள் செய்தும் உண்ணும் பழக்கம் தொன்று தொட்டே நம் தமிழ் நாட்டில் இருந்து வருகிறது.

முள்ளங்கி கீரை: கிழங்கினக்கீரை வகைகளில் மிகச்சிறந்த உணவு வகைகளைத் தருவது முள்ளங்கி கீரை ஆகும்.

முள்ளங்கி கீரையானது, கால்நடைகளுக்கு ஏற்ற தீவனமாகும். கோழிகளுக்கும் சிறந்த உணவாகும். தேங்காய் துருவல், பருப்பு இவற்றோடு நெய்யூற்றி பொரியல் செய்து உட்கொண்டால் மிகுந்த சுவை உண்டாகும். இந்த கீரை பச்சையாக உண்பதற்கும் உகந்தது. காரட், பீட்ரூட் இவற்றோடு இக் கீரையை சேர்த்து எலுமிச்சைச்சாறும், சிறிது உப்பும் கலந்து பச்சையாக உண்ண மிகுந்த பலன் உண்டாகும்.

தவசிக் கீரை: தவ வலிமைக்குத் தகுந்த சத்துக்கள் நிரம்ப இக் கீரையில் அடங்கியுள்ளன. அன்றியும், கிடைத்தற்கரிய பொருளை தவமிருந்து பெற்ற தென்று சொன்னால் மிகையாகாது. ஏனெனில் ஏனைய கீரைகளை விட வைட்டமின் சத்துக்கள் மிகுந்த சிறப்பைக் கொடுக்கின்றன. “வைட்டமின் கீரை” என்ற சிறப்பு பெயர் இதனை உறுதி செய்கிறது.

தவசிக் கீரையின் இளம் தண்டுகளையும், தழைகளையும் சமைத்தும், பச்சையாகவும் உண்ணலாம். பாசிப்பயறு மற்றும் துவரம் பருப்புடன் இக்கீரையைச் சேர்த்துக் கூட்டும் வைக்கலாம். கடையலும் செய்யலாம். தனியாகப் பொரிக்கலாம். தயிர் சேர்த்து அவிக்கலாம். முட்டைக்கோசு கீரையுடன் சேர்த்துத் தாளித்தும் சுவைக்கலாம். இவ்வித சுவைகளின் மூலம் இக்கீரையின் உயிர்ச் சத்துக்களையும், தாதுப்புக்களையும், முழுமையாக நாம் பெற்று உடல் உரம் பெறலாம்.

இதையும் படியுங்கள்:
வேற லெவல் சுவையில்... தாபா ஸ்டைல் பனீர் புர்ஜி - மசாலா சுண்டல் !
Healing spinach...
logo
Kalki Online
kalkionline.com