
வெயில் காலத்தில் நமக்கு திட உணவை விட திரவ உணவுகளைத்தான் தேடுவோம். அலுவலகம், பள்ளிக்கு செல்வோர்க்கு திரவ உணவுக்கு பதில் ஸ்மூதியாக காய்கறிகள், பழங்கள், உலர்ந்த பழங்கள், விதைகளை கொண்டு செய்ய சுவையோடு சத்தும் சேரும்.
எளிதான ஸ்மூதியாக வாழைப்பழம், தேன் சேர்த்து மிக்ஸியில் விட்டு விட்டு அரைத்து அப்படியே அல்லது குளிரவைத்து பருகிட எளிதான, ஆரோக்கியமான பானமாக இருக்கும்.
குழந்தைகளுக்கு நட்ஸ், பேரீச்சம்பழம், ஆப்பிள் சேர்த்து அரைத்து அதனுடன் ரோஸ் சிரப் சேர்த்து சாப்பிட கொடுக்கலாம். ஆப்பிள் ஸ்மூதியை, வேறு பழங்களுடனோ, எ சாறோ சேர்த்து கலந்து வெரைட்டியாக மேலாக பாதாம், பிஸ்தா பருப்பை சீவி தூவி கொடுக்கலாம்.
கேரட், பீட்ரூட் சின்ன துண்டு, வெள்ளரிக்காய் சேர்த்து உப்பு, மிளகுத்தூள் சேர்த்து ஸ்மூதியாக அருந்த நல்ல எனர்ஜியைக் கொடுக்கும்.
ஸ்மூதி செய்ய எளிதாக இருப்பதுடன் பழங்கள், காய்கறிகளின் முழு சத்தையும் ஈசியாக கிடைக்கச் செய்யலாம். ஸ்மூதியாக சாப்பிட நார்ச்சத்து, மற்ற சத்துக்கள் குறையாமல் கிடைப்பதால் மலச்சிக்கல் நீங்கும்.
நெஞ்செரிச்சல், வயிற்று புண்ணை ஆற்றும். தொடர்ந்து ஸ்மூதியை எடுத்துக்கொள்ள கோடையில் ஏற்படும் நாவறட்சி, தாகம் ஏற்படாது. பசியை கட்டுப்படுத்துவதால் நீண்ட நேரம் பயணம் செய்யும் முன் ஸ்மூதியாக செய்து சாப்பிட்டு விட்டு செல்லலாம்.
சத்துக்கள் வீணாகாமல் கிடைப்பதால் உடலுக்கு சேரவேண்டிய சத்துக்கள் சேர்ந்து தோல், உடல் உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பைனாப்பிள் ஸ்மூதி கோடைக்கால வியர்க்குரு, கட்டிகளை போக்கும். செய்ய எளிமையான ஆரோக்கியத்தை காக்கும் ஸ்மூதியை அடிக்கடி எடுத்துக்கொண்டு கோடைக்கால நோய்களிலிருந்து நம்மை காத்துக்கொள்வோம்.
ஊறுகாய் ருசிக்க சில குறிப்புகள்:
சாதத்திற்கு வேறு சைட் டிஷ் இல்லையென்றாலும் ஊறுகாய் இருந்தாலே போதுமானதாய் இருக்கும். இந்த சீசனில் ஊறுகாய் போட்டு வைத்துக்கொள்ள சில குறிப்புகள் இதோ இந்த பதிவில்...
பலவிதமான காய்களில் ஊறுகாய் போடுவது போல சில வகை பழங்களிலும் போடலாம்.நீண்ட நாட்களுக்கு வைத்துக் கொள்ள வேண்டுமெனில் பிரிஷர்வேட்டிவ் சேர்த்து செய்ய கெட்டுப்போகாது நீண்ட நாள் இருக்கும்.
ஆவக்காய் ஊறுகாய்க்கு மாங்காய் ஃ ஃப்ரெஷ்ஷாக இருக்க வேண்டும். அப்போதுதான் பறித்த காயெனில் உடனே நறுக்கிபோட சுவையோடு நீண்ட நாட்கள் இருக்கும். கொஞ்சம் பழைய காயெனில் தண்ணீரில் போட்டு வைக்க, காய் மேலும் வாங்காமல், தோல் சுருங்காமல் இருக்கும்.
எந்தெந்த ஊறுகாய்க்கு எண்ணெயயை சூடாக்கி ஊற்ற வேண்டும். எவற்றிக்கு அப்படியே ஊற்றவேண்டும் என தெரிந்து தயாரிக்க, சுவையாய் இருக்கும்.
வடுமாங்காய்க்கு மாங்காய் உருண்டை வடிவத்தில் இருக்க வேண்டும். நீள வடிவ மாங்காய் துவர்க்கும்.
உப்பை சரியாகப்போட ஊறுகாய் நல்ல ருசியாய் இருப்பதோடு நீண்ட நாள் கெடாமல் இருக்கும். ஒரு சிட்டிகை சோடியம் பென்சோயெட் சேர்க்க சுவை நன்றாக இருப்பதோடு அளவும் சரியாக இருக்கும்.
புளியும், மிளகாயும் புதியதாக பளிச்சென்று இருந்தால்தான் ஊறுகாயும் நல்ல நிறத்தில் இருக்கும். காஷ்மீரி மிளகாய்தூள் சேர்க்க கலர் ரிச்சாக இருக்கும்.
ஊறுகாய் கங்கு மேல் எண்ணெய் நிற்குமாறு தயாரித்து வைக்க பூஞ்சை வராது. மரக்கரண்டி உபயோகிக்க ஊறுகாயின் சுவை மாறாமல் இருக்கும்.
சைவ ஊறுகாய் போலவே, அசைவ ஊறுகாய் தயாரித்து வைத்துக் கொள்ள சாதத்தில் போட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.
நல்ல எண்ணையை பயன்படுத்தி ஊறுகாய் போட காரல் வராமல் இருக்கும். கடுகு எண்ணெய் ஊற்றி செய்ய நன்றாக இருக்கும். கல் உப்பை பயன்படுத்துவதுபோல இந்துப்பு சேர்த்து செய்ய நன்றாக இருக்கும்.