

பிரபல ஆங்கிலக் கவிஞரான ஷெல்லி ஒரு சைவ உணவுக்காரர். அசைவ உணவில் உள்ள மிருகங்களின் மாமிசங்கள் புத்தியை மந்தமாக்கிவிடும் என்பது அவரது நம்பிக்கை. அவருக்கு மிகவும் பிடித்தமானது ப்ரெட் (ரொட்டி) தான். அவருக்கு பசி எடுக்கும்போது அவசரம் அவசரமாக ஒரு ப்ரெட் கடைக்கு ஓடுவார். ஒரு ப்ரெட்டை வாங்கிக்கொண்டு அதைத் துண்டுகளாக்கி கடித்துச் சாப்பிட்டுக் கொண்டே வருவார்.
பிரபல ஆங்கில நாடக ஆசிரியரான பெர்னார்ட் ஷாவும் ஒரு சைவ உணவுப் பிரியர்தான். ஒரு சமயம் லண்டனில் அவர் ஒரு டின்னர் பார்ட்டியில் கலந்துகொண்டார். அவருக்கென்றே சில கீரை வகைகளும் எண்ணெய் வகைகளும் அவர் முன் வைக்கப்பட்டிருந்தன.
ஸர் ஜேம்ஸ் பாரி என்ற பெர்னார்ட் ஷாவின் அண்டைவீட்டுக்காரர் டேபிளுக்கு வந்து உட்கார்ந்தார். ஷாவுக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த இலை தழைகளைப் பார்த்தார். பிறகு மெதுவான குரலில் ஷாவிடம், “ஷா! நீங்கள் சாப்பிடப் போகிறீர்களா, அல்லது சாப்பிட்டு முடித்து விட்டீர்களா?” என்று கேட்டார்.
அமிதாப்பச்சன், கங்கணா, சோனம் கபூர்,, அமீர் கான் சோனாக்ஷி சின்ஹா, மாதவன், கரீனா கபூர், அனுஷ்கா சர்மா உள்ளிட்ட நடிக, நடிகையர், ஹாலிவுட் நடிகர் ப்ராட் பிட், அமெரிக்காவை நிறுவிய ஸ்தாகபகர்களுள் ஒருவரான் பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் என்று இப்படி சைவ உணவுக்காரர்களின் பட்டியல் மிக நீண்ட ஒன்று.
அசைவ உணவில் சத்து அதிகம் இருக்கிறது என்று சொல்பவர்களுக்கு இன்றைய அறிவியல் ஆய்வுகள் தக்க பதிலைத்தருகின்றன.
மனிதனுக்குத் தேவையான சத்துணவு சைவ உணவில் இருப்பதற்கான ஆதாரங்களை அறிவியல் இதழ்கள் வெளியிட்டுக்கொண்டே இருக்கின்றன. சைவ உணவு மட்டும் சாப்பிடுவோருக்கு இதய சம்பந்தமான வியாதிகள் மிகவும் குறைவு.
மிருகங்களை வேட்டையாடுவது நிறுத்தப்படுகிறது. காடுகள் அழியாமல் பாதுகாக்கப்படுகின்றன. புவி வெப்பமயமாதல் தடுக்கப்படுகிறது.
சைவ உணவின் மேன்மையை சுருக்கமாகக் கீழே பார்க்கலாம்:
ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. உடலின் எடையைச் சீராக்குகிறது. கூடுதல் எடை கொண்டவர்களின் எடையை பழ உணவுகள் குறைக்கின்றன.
சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. பொட்டாசியம் அதிகம் உள்ள சைவ உணவை மேற்கொள்வதால் இது சாத்தியமாகிறது.
பொடாசியம் அதிகம் உள்ள பீட் மற்றும் கீரை வகைகள் இரத்த அழுத்தத்தைச் சீராக்குகிறது. அதிக சோடியம் உள்ள உணவைத் தவிர்க்க வகை செய்கிறது.
சைவ உணவுகளில் உள்ள ல்யூடின் மற்றும் ஜெயக்ஸாந்தின் (Lutein and Zeaxanthin) கண்களைப் பாதுகாக்கிறது. வயதாவதால் வரும் குறைகளைத் தவிர்க்கிறது.
பொதுவாக அனைத்து கறிகாய் உணவு வகைகளுமே கான்ஸர் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை சைவ உணவு வகைகளில் உள்ள விடமின் சி அதிகரிக்கிறது.
உங்கள் மூளையை இளமையாகவும் சுறுசுறுப்பாகவும் வைக்கிறது. இதற்கான முக்கிய காரணம் கீரை வகைகளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்டுகளே! தோலைப் பளபளப்பாக்குகிறது. தக்காளியில் உள்ள லிகோபீன் (Lycopene) வெயில் எரிச்சலைத் தவிர்க்க வைத்து தோலை மிருதுவாகவும் பளபளப்பாகவும் ஆக்குகிறது.
Folate, copper, Magnesium, Zinc, Phosphorous Selenium, Potassium, Vitamin A,C,E and K ஆகியவை அனைத்தும் சைவ உணவில் இருப்பதால் உடல் அங்கங்கள் அனைத்தையும் பாதுகாத்து நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தருகிறது.
இவை போதாதா என்ன, சொல்லுங்கள்!