
காபி என்பது தேவபானம். ஜீவாமிர்தம் என்று கூட கூறலாம். நல்ல காபியின் சுவை நம்மை கிறங்கடித்து விடும். சிலருக்கு சாப்பாடு கூட இரண்டாம் பட்சம்தான். அதுவும் ஃபில்டர் காபியின் சுவை அபாரம். நல்ல காப்பி குடித்தால் 2 மணி நேரத்திற்கு பசி எடுக்காது. ஸ்ட்ராங்கா, ருசியா, மணமா போடுவது என்பது சில பேருக்கே கைவந்த கலை.
தளதளவென வெந்நீரை கொதிக்கவிட்டு பில்டரில் விட்டால்தான் குழம்புபோல திக்காக இறங்கும். அதற்கு முதலில் காபி பில்டரின் மேல்பகுதியில் சிறிதும் ஈரம் இல்லாமல் துடைத்து விட்டு அதை லேசாக அடுப்பில் காட்ட வேண்டும். அடைப்பு இருந்தால் சரியாக இறங்காது. பின்னர் காபித்தூளை வேண்டுமளவுக்கு போட்டு ஃபில்டருடன் வரும் குடை போன்ற ப்ளெட்ஜரை வைத்து லேசாக குழந்தையின் கன்னத்தை வருடுவது போல் மென்மையாக அழுத்தி விடவும். ரொம்ப அழுத்திவிட்டால் டிகாஷன் லேசில் இறங்காது.
தளதளவென கொதிக்கும் வெந்நீரை ஃபில்டரில் விட வேண்டும். சிறிது நேரத்தில் வீடே மணக்கும் "டிகாஷன்" தயார். இப்பொழுது பாலில் சிறிதும் தண்ணீர் கலக்காமல், கிராமப்புறத்தில் என்றால் நல்ல பசும்பால் வாங்கி சிறிதும் தண்ணீர் கலக்காமல் அடுப்பில் வைத்து காய்ச்சவும்.
டபரா டம்ளரை எடுத்து பித்தளை டபரா டம்ளர் என்றால் கூடுதல் சிறப்பு. அதில் தேவையான அளவு டிகாஷன் ஊற்றி சர்க்கரையை சேர்த்து டிகாஷனை மட்டும் பொங்கி நுரைத்து வரும் வரை ஆற்ற வேண்டும். இப்பொழுது அதில் தேவையான அளவு பாலை விட்டுக் கலந்து சந்தனக் குழம்புபோல் இருக்கும் காபியை சூடு ஆறும் முன் பருக வேண்டும். அடடா என்ன ஒரு ருசி! மணம், குணம் நிறைந்த காபியை நின்று நிதானமாக ருசித்து பருகவும். தொண்டையில் இறங்கும் பொழுது தேவாமிர்தம் போல் இருக்கும்.
ஃபில்டர் காபிக்கு ஈடு இணை எதுவும் கிடையாது. இன்னொன்று சொல்ல மறந்து விட்டேனே. குடித்த காபியின் சுவை நாக்கை விட்டு அரை மணிநேரம் நகராது. அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு பசியா? அப்படி என்றால் என்ன என்று கேட்கத் தோன்றும்!
கும்பகோணம் டிகிரி காபி என்கிறார்களே அது இதுதான். பாலில் தண்ணீர் கலக்கக்கூடாது. காபி பொடியின் தரம் முக்கியம். அதற்கு பிளான்டேசன் A, பீபிரி காபி கொட்டைகள் இரண்டும் சரிசமமாக கலந்து வறுத்து அரைக்கப்படும் காபித் தூளில் அதிகம் இல்லை ஜென்டில்மேன் கொஞ்சமே கொஞ்சம் (500 கிராமுக்கு 50 கிராம்) சிக்கிரி கலந்து டிகாஷன் இறக்க சூப்பரோ சூப்பர்.
அதிகமாக காபி குடித்தால் என்னாகும் தெரியுமா? என்று கேட்பவர்களிடம் சீக்கிரம் காப்பி பொடி தீர்ந்து போகும்! விற்பனை செய்பவருக்கு லாபம் கிடைக்கும் என்று சொல்லுங்கள்! காபி பிரியர்களுக்கு நல்ல ஸ்ட்ராங்கான காபி கொடுத்து நம் காரியத்தை சாதித்துக் கொள்ளலாம். என்ன நான் சொல்வது சரிதானே!
என்ன காபி குடிக்க கிளம்பி விட்டீர்களா?