
ரவா தோசை செய்யப் போறீங்களா? ஒரு நிமிஷம். ரவையை நன்றாக வறுத்துப் பிறகு ஊறவைத்து சிறிது மைதாமாவுடன் கலந்து, மற்றப் பொருட்களையும் சேர்த்து தோசை வார்த்தால் ரவா தோசையின் சுவையே அலாதிதான்.
உப்புமா, வெண்பொங்கல் போன்றவை சமைத்த நேரத்திலேயே கெட்டியாகி விடும். இதைத் தவிர்க்க அரை டம்ளர் சூடான பாலை அதில் ஊற்றிக்கிளறிவிட்டால் நன்கு இளகிவிடும். சுவையும் பிரமாதமாக இருக்கும்.
அவரைக்காய் பொரியல் செய்யும்போது அத்துடன் சிறிது பால் சேர்த்தால் பொரியலின் சுவை அதிகரிக்கும் பொங்கலில் தண்ணீர் அதிகமாகிவிட்டதா? கவலையை விடுங்கள்.
சிறிதளவு ரவையை வறுத்துப் பொங்கலோடு சேர்த்துக் கிளறினால் பொங்கல் சீக்கிரமாகவே கெட்டியாகிவிடும்.
பஜ்ஜி மாவு மிச்சம் வந்துவிட்டதா? சாம்பார் செய்யும்போது இந்த பஜ்ஜி மாவில் ஒரு ஸ்பூன் எடுத்து குளிர்ந்த நீரில் கரைத்து கொதிக்கும் சாம்பாரில் ஊற்றினால் சாம்பார் சுவையோ சுவை.
தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க வேண்டுமா? இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.
லட்டுக்கு பூந்தி தயாரிக்கும்போது, கடலை மாவுடன் சிறிது அரிசி மாவையும் கலந்துகொண்டால் பூந்தி முத்து முத்தாக வரும்.
சோளமாவை தவிர்த்து சத்து மாவைச் சேர்த்தால் சூப்பின் ருசியே அலாதிதான் என்று மட்டுமல்லாமல் உடம்புக்கும் சத்து கிடைக்கும்.
மிளகாய் பஜ்ஜி செய்யும்போது மிளகாயை நீளவாக்கில் கீறி அதனுள் சிறிது உப்பு, ஒரு சொட்டு எலுமிச்சைச்சாறு விடவும். பிறகு எண்ணெயில் போட்டுப் பொரித்தால் பஜ்ஜி சுவை மிகுந்து இருக்கும்.
துவரம் பருப்பு வேகவைக்கும்போது வெண்ணெய் போல குழைந்து வரவேண்டுமா? பருப்பில் கொஞ்சம் நெய் சேர்த்தால் போதும்.
பஜ்ஜி மாவுடன் மிளகாய்த்தூள், இஞ்சி, பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து பஜ்ஜி சுட்டெடுத்தால் பஜ்ஜி உப்பி வருவதுடன் நல்ல சுவையாகவும் இருக்கும்.
மோர்க்குழம்பு சுவையாக இருக்க, மோர்க்குழம்பு செய்து இறக்கியதும் பொரித்த உளுந்து அப்பளம் இரண்டை நொறுக்கி மோர்க்குழம்பில் போட்டு மூடி வைத்தால் போதும்.