சமோசா என்றால் உள்ளே இருக்கும் மசாலாக்கு மட்டும் பெயர்போனது அல்ல, அதன் மேல் ஓடு மொறுமொறுப்பாக இருப்பதுதான் அசல் அடையாளம். கடைகளில் சமோசா அவ்வளவு கிரிஸ்பியாக இருப்பதற்கு காரணம், அவர்கள் மாவு பிசையும்போது செய்யும் சில விஷயங்கள்தான். இதில், நெய் அல்லது எண்ணெய் சேர்ப்பது மற்றும் சரியான பதம் ஆகிய இரண்டும் முக்கியம்.
சமோசா இன்று பலருக்கும் பிடித்தமான ஒரு ஸ்நாக்ஸ். என்னத்தான் பார்த்து பார்த்து செய்தாலும், இறுதியில் அதன் முக்கியமான விஷயமான அதன் மேல் ஓட்டின் மொறு மொறுப்புத் தன்மை வீட்டில் செய்யும்போது இல்லாமல் போய்விடுகிறது. ஆனால், கடைகளில் மட்டும் அந்த மொறுமொறுப்பு தன்மை எப்போதும் தனி ருசியாக இருக்கிறது. இதற்கு அவர்கள் என்ன சீக்ரெட் பயன்படுத்துகிறார்கள் என்பதை இப்பதிவில் பார்ப்போம்.
மைதா மாவுடன் எண்ணெய் அல்லது நெய் சேர்ப்பது, சமோசாவின் சுவைக்காக அல்ல, அதன் 'மொறுமொறுப்புத் தன்மை' மற்றும் அதன் பதம் மாறாமல் இருக்கத்தான். இந்தச் செயல்முறைக்கு 'மோயன்' (Moyan) என்று பெயர்.
மைதா மாவில் உள்ள பசைத்தன்மை தான் மாவை இழுக்க வைக்கிறது. நாம் நெய் அல்லது எண்ணெயைச் சேர்க்கும்போது, அது அந்தப் பசையைச் சுற்றி ஒரு படலத்தை உருவாக்குகிறது.
இதனால், மாவு மிகக் கடினமாவதைத் தவிர்த்து, சமோசா எண்ணெயில் பொரிக்கும்போது தண்ணீர் ஆவியாகி, மாவு உடைந்து விடாமல் ஒரு சீரான மொறுமொறுப்பை நீண்ட நேரம் கொடுக்கிறது.
சரியான அளவு நெய்யைச் சேர்க்க, மாவை உள்ளங்கைக்குள் வைத்து அழுத்தும்போது, அது உடைந்து விடாமல் ஒரு உருண்டையாகப் பிடிக்க வேண்டும். இதுதான் சரியான 'மோயன்' அளவு.
மாவு பிசைய வேண்டிய சரியான பதம்..
சமோசாவின் கிரிஸ்பினஸை முடிவு செய்வது மாவு பிசையும் பதம் தான்.
சமோசாவுக்கு மாவைப் பிசையும்போது, தண்ணீரை மிகக் குறைவாகச் சேர்த்து, சப்பாத்தி மாவை விட இன்னும் சற்று கெட்டியாகப் பிசைய வேண்டும். மாவு மிகவும் மிருதுவாக (Soft) இருக்கக் கூடாது.
மாவு மிருதுவாக இருந்தால், அது பொரிக்கும்போது அதிக எண்ணெயைக் குடித்து, 'பப்ஸ்' போல உப்பிவிடும் அல்லது கடினமாகிவிடும். கெட்டியான மாவுதான் மிருதுவான ஓடுகளைத் தந்து, சமோசாவைப் பக்குவப்படுத்தும்.
மாவைப் பிசைந்த பிறகு, கட்டாயம் 20 முதல் 30 நிமிடங்கள் ஈரத் துணியால் மூடி வைக்க வேண்டும். இதனால் மாவு சரியான பதத்திற்கு வந்து, சுலபமாக உருட்ட முடியும்.
இந்த இரண்டு நுட்பங்களையும் சரியாகப் பின்பற்றினால், உங்கள் வீட்டில் செய்யும் சமோசாவும் கடை சமோசாவைப் போலவே நீண்ட நேரம் மொறுமொறுப்புடன் இருக்கும்.