
பச்சைப் பயறு பருப்புசிலி:
பச்சைபயறு 200 கிராம்
துவரம்பருப்பு 1/2 கப்
கடலைப்பருப்பு 1/2 கப்
உளுத்தம் பருப்பு 1/4 கப்
மிளகாய் வற்றல் 10
தேங்காய் துருவல் 1 கப்
இஞ்சி ஒரு துண்டு
பெருங்காயத்தூள் சிறிது
உப்பு தேவையானது
தாளிக்க: கடுகு, சீரகம், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் 6
பச்சைப்பயறு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கழுவி ஒருமணி நேரம் ஊற விடவும். பிறகு உப்பு, மிளகாய் வற்றல், இஞ்சித்துண்டு சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். அரைத்த மாவை இட்லி தட்டில் வேகவிடவும். கை பொறுக்கும் சூட்டிற்கு ஆறியதும் கையால் நன்கு உதிர்த்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கி கடுகு பொரிந்ததும் உதிர்த்து வைத்துள்ள பருப்புக் கலவையை சேர்த்துக்கிளறவும். கடைசியாக தேங்காய்த் துருவலும், சுவையைக் கூட்ட ஒரு ஸ்பூன் சர்க்கரையை சேர்த்து கிளறி இறக்க புரதச்சத்து மிகுந்த பச்சைப் பயறு பருப்புசிலி காலை உணவுக்கு தயார்.
சுட்ட மிளகாய் பச்ச புளிக்குழம்பு:
புளி சிறிய எலுமிச்சை அளவு
மிளகாய் வற்றல் 6
சின்ன வெங்காயம் 4
உப்பு தேவையானது
சீரகத்தூள் 1/2 ஸ்பூன்
தனியா தூள் 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது
புளியை சிறிது நீர்க்க கரைத்துக்கொள்ளவும். மிளகாயை அடுப்பில் கருகாமல் சுட்டெடுக்கவும். புளிக்கரைசலில் சுட்ட மிளகாய் நசுக்கி சேர்த்து அத்துடன் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், சீரகத்தூள், தனியா தூள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து கலந்துவிட மிகவும் ருசியான பச்ச புளிக்குழம்பு தயார். இதனை சூடான சாதத்தில் விட்டு பிசைந்து சுட்ட அப்பளத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். புளியா தோசைக்கும் தொட்டுக்கொள்ள ருசியாக இருக்கும்.
புளியா தோசை என்பது தோசைக்கு அரைத்ததும் (not fermented) புளிக்கவிடாமல் உடனடியாக தயாரிக்கப்படும் தோசை.
வாழைத்தண்டு கடலைக் கூட்டு:
வாழைத்தண்டு 1
பயத்தம் பருப்பு 1/2 கப்
பச்சை வேர்கடலை 1/4 கப்
பச்சை மிளகாய் 2
தேங்காய்த் துருவல் 1/2 கப்
சீரகம் 1/2 ஸ்பூன்
உப்பு தேவையானது
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
தாளிக்க: கடுகு, கருவேப்பிலை, உளுத்தம் பருப்பு, தேங்காய் எண்ணெய்
வாழைத்தண்டை நார் எடுத்து சின்னத் துண்டுகளாக நறுக்கவும். பயத்தம் பருப்பை குழையாமல் மலர வேகவிடவும். தேங்காய், பச்சை மிளகாய், சீரகத்தை மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.
வாணலியில் கடுகு, கருவேப்பிலை, உளுத்தம் பருப்பு தாளித்து கடுகு பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு, பச்சை வேர்க்கடலை சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் போட்டு தேவையான தண்ணீர் விட்டு வேகவிடவும். நன்கு வெந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய், மிளகாய், சீரகம் விழுதை சேர்த்து, வெந்த பயத்தம் பருப்பையும் போட்டு இரண்டு கொதிவிட்டதும் இறக்கி விடவும். மிகவும் ருசியான வாழைத்தண்டு கடலைக் கூட்டு தயார்.
பொதுவாக இந்தக்கூட்டு எந்த வகையான துவையல் சாதத்துடனும் பொருத்தமாக இருக்கும். குறிப்பாக கறிவேப்பிலை துவையல் சாதத்திற்கு இந்த வாழைத்தண்டு கடலைக்கூட்டு சேர்த்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.