வெயிலுக்கேற்ற முத்தான மூன்று கீரை சமையல் வகைகள்!

Three perfect spinach recipes for the hot weather!
summer keerai recipes
Published on

வெயில் காலத்தில் கீரைகளை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் குளிர்ச்சியாக இருக்கும். வயிற்றுக்கு இதம் தரும். நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் உடல் நீர் இழப்பை தடுக்கும். விட்டமின்கள், தாதுக்கள் நிறைந்துள்ள கீரை வகைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

தண்டுக்கீரை சாம்பார்:

தண்டுக்கீரை ஒரு கட்டு

சின்ன வெங்காயம் 10

தக்காளி 2

பச்சை மிளகாய் 2

சாம்பார் பொடி 2 ஸ்பூன்

துவரம் பருப்பு 1/4 கப்

தாளிக்க: கடுகு, வெந்தயம், பூண்டு 2 பல், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள்

துவரம் பருப்பை கழுவி பூண்டு, பெருங்காயத்தூள், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து ரெண்டு விசில் வரும்வரை குக்கரில் வைக்கவும். தண்டுக் கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும். சின்ன வெங்காயத்தை தோலுரித்து அதையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.

வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், கருவேப்பிலை சேர்த்து கடுகு பொரிந்ததும் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நிறம் மாறியதும் நறுக்கிய கீரை, சாம்பார் பொடி, தேவையான உப்பு, தண்ணீர் விட்டு வேகவிடவும். வெந்த பருப்பு கலவையை சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். மிகவும் ருசியான தண்டுக்கீரை சாம்பார் தயார். சூடான சாதத்தில் நெய் விட்டு கீரை போட்டு பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும்.

குறிப்பு: கீரையை மூடி வைக்காமல் திறந்து வைத்து வேகவிட நிறம் மாறாமல் இருக்கும்.

முடக்கத்தான் கீரை ரசம்:

முடக்கத்தான் கீரை 2 கைப்பிடி

மிளகு 1 ஸ்பூன்

சீரகம் 1/2 ஸ்பூன்

பூண்டு 6 பற்கள்

துவரம் பருப்பு 2 ஸ்பூன்

புளி சிறிய எலுமிச்சை அளவு

மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்

உப்பு தேவையானது

இதையும் படியுங்கள்:
தஹி பைங்கன்: கத்தரிக்காய் வச்சு இந்த ரெசிபி செஞ்சு பாருங்க மக்களே!
Three perfect spinach recipes for the hot weather!

தாளிக்க: கடுகு, கறிவேப்பிலை, மிளகாய், நெய்

முடக்கத்தான் கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து நல்லெண்ணெய் விட்டு வதக்கி எடுக்கவும். துவரம் பருப்பு, மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை வெறும் வாணலியில் நன்கு சூடு வர வறுத்து ஆறவிட்டு நைஸாக பொடித்துவிட்டு அத்துடன் முடக்கத்தான் கீரையையும் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்தெடுக்கவும்.

புளியை நீர்க்கக் கரைத்து அதில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து புளி வாசனை போகும்வரை கொதிக்கவிடவும். அதில் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நான்கு கப் தண்ணீர்விட்டு மொச்சு பதம் வந்ததும் இறக்கவும். (கொதிக்க விடவேண்டாம்) வாணலியில் சிறிது நெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, ஒரு காய்ந்த மிளகாய் சேர்த்து கடுகு பொரிந்ததும் ரசத்தில் கொட்டி கலக்கிவிட மிகவும் ருசியான முடக்கத்தான் கீரை ரசம் தயார்.

சிலோன் பசலைக்கீரை பொரியல்:

இதனை 'குத்து பசலைக்கீரை' என்றும் அழைப்பார்கள். வாதம் பித்தம் கபம் போன்றவற்றை நீக்கி கண்ணுக்கும் நன்மை தரும். உடல் வெப்பத்தை தணிக்கும். நீர் சுருக்கு, நீர்க்கட்டு, நீர்க்கடுப்பு போன்றவற்றை சரி செய்யும். வெயில் காலத்துக்கு ஏற்ற கீரை இது.

பசலைக்கீரை ஒரு கட்டு

பெரிய வெங்காயம் 1

தேங்காய்த் துருவல் 1/2 கப்

காய்ந்த மிளகாய் 2

பூண்டு 2 பல்

உப்பு தேவையானது

இதையும் படியுங்கள்:
நாவை சப்புக்கொட்ட வைக்கும் நாலு வகை சப்பாத்திகள்!
Three perfect spinach recipes for the hot weather!

தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, நல்லெண்ணெய்

கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். தேங்காய்த் துருவல், மிளகாய், பூண்டு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு அரை ஸ்பூன், சீரகம் அரை ஸ்பூன், கறிவேப்பிலை சிறிது ஆகியவற்றை நல்லெண்ணெய் விட்டு தாளிக்கவும். கடுகு பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். அதில் பொடியாக நறுக்கிய பசலைக் கீரையை சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் போட்டு ஒரு கை தண்ணீர் தெளித்து வதக்கவும். இரண்டே நிமிடத்தில் சுருள வதங்கிவிடும். அப்பொழுது அரைத்து வைத்த தேங்காய் சேர்த்து கலந்துவிட மிகவும் சத்தான பசலைக்கீரை பொரியல் தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com