

பருப்பு சேர்க்காத, குளிர்ச்சி தரும் சுரைக்காய் கூட்டு ரெசிபி
தேவையான பொருட்கள்:
1.தோல் சீவி, விதை நீக்கி நறுக்கிய சுரைக்காய் 200 கிராம்
2.எண்ணெய் 1¼ டேபிள் ஸ்பூன்
3.கடுகு ¾ டீஸ்பூன்
4.உளுத்தம் பருப்பு ¾ டீஸ்பூன்
5.சீரகம் 1 டீஸ்பூன்
6.தேங்காய் துருவல் ¼ கப்
7.கொத்தமல்லி இலைகள் 1 டேபிள் ஸ்பூன்
8.தக்காளி 2 (பொடிசா நறுக்கிக் கொள்ளவும்)
9.பெரிய வெங்காயம் 1(பொடிசா நறுக்கிக் கொள்ளவும்)
10.உப்பு தேவையான அளவு
11.மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
12.ரெட் சில்லி பவுடர் 1½ டீஸ்பூன்
13.தனியா தூள் 2 டீஸ்பூன்
14.கறிவேப்பிலை 1 இணுக்கு
செய்முறை:
தேங்காயுடன் அரை டீஸ்பூன் சீரகம் மற்றும் கொத்தமல்லி இலைகள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்தில் அரைத்துக்கொள்ளவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றவும். சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, அரை டீஸ்பூன் சீரகம் சேர்க்கவும். அவை சிவந்ததும் கறிவேப்பிலை சேர்க்கவும். பின் வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
பிறகு தக்காளி சேர்த்து, அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்க்கவும். அனைத்தும் நீர் சத்து குன்றி சுருண்டு வரும்போது சுரைக்காய் துண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டி விட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து சுரைக்காய் பஞ்சு போல் வேகும் வரை மீடியம் தீயில் வைத்திருக்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட்டை ஊற்றி, கொதிக்க ஆரம்பித்ததும் நன்கு கலந்துவிட்டு அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். சுவை மிக்க சுரைக்காய் கூட்டு, சூடான சாதத்தில் பிசைந்து உண்ண ரெடி!
காரைக்குடி ஸ்பெஷல் வெண்டைக்காய் புளி பச்சடி ரெசிபி
தேவையான பொருட்கள்:
1.வெண்டைக்காய் ¼ கிலோ
2.நல்லெண்ணெய் 1 டீஸ்பூன்
3.கடுகு ½ டீஸ்பூன்
4.கடலைப் பருப்பு ½ டீஸ்பூன்
5.புளி ஒரு நெல்லிக்காய் அளவு
6.சாம்பார் பொடி 1 டீஸ்பூன்
7.அரிசி மாவு 1 டீஸ்பூன்
8.சிவப்பு மிளகாய் 2
9.பச்சை மிளகாய் 2
10.மஞ்சள் தூள் ¼ டீஸ்பூன்
11.பெருங்காயம் ¼ டீஸ்பூன்
12.வெல்லம் ஒரு சிறு துண்டு
13.உப்பு தேவையான அளவு
செய்முறை:
வெண்டைக்காயை கழுவி சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். புளியை வெது வெதுப்பான நீரில் ஊறவைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் கடுகு, கடலைப் பருப்பு, சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய் தாளித்து, பின் வெண்டைக்காயையும் சேர்த்து வதக்கவும். பின்னர் புளியை கரைத்து வடிகட்டி அந்த நீரை வெண்டைக்காயில் ஊற்றவும். அதனுடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
அதன் பின் அரிசி மாவை சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து பச்சடியில் ஊற்றவும். கடைசியாக வெல்லம் மற்றும் பெருங்காயம் சேர்த்துக் கலந்து இறக்கவும். அட்டகாசமான காரைக்குடி ஸ்பெஷல் வெண்டைக்காய் புளி பச்சடி ரெடி. சாப்பிடும்போது சைடு டிஷ்ஷாக வைத்து உண்ண சுவையான டிஷ்!