
இன்றைய அவசர உலகில் உணவை சமைத்து ஃப்ரிட்ஜில் வைத்து பின்னர் சூடுபடுத்தி சாப்பிடுவது சாதாரண நிகழ்வாகிவிட்டது .அப்படி செய்யும்போது சில உணவுகள் விஷமாக மாறி உடலுக்கு தீங்கு விளைவிக்கின்றன. அந்த வகையில் உணவின் ஊட்டச்சத்தை பராமரித்து சூடுபடுத்தும் 5 முறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்
1. சரியான பாத்திரத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
உணவை சூடுபடுத்த முதலில் சரியான பாத்திரத்தை தேர்ந்தெடுத்து சூடுபடுத்த வேண்டும். மைக்ரோவேவ் ஓவனில் உணவை சூடுபடுத்தும்போது பாதுகாப்பான கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரங்களை பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் கொள்கலன்கள் மைக்ரேவேவ் ஓவனுக்கு பாதுகாப்பானவையாக இருக்காது. ஏனெனில் பிளாஸ்டிக் பாத்திரத்தில் சூடாக்கும் போது ரசாயனங்கள் கசிந்து உணவு தீங்காக மாறிவிடும் என்பதால் இவற்றை தவிர்க்கவேண்டும். மேலும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் அலுமினிய பாத்திரங்களையும் மைக்ரோவேவில் வைக்கக்கூடாது.
2. உணவை மீண்டும் மீண்டும் சூடுபடுத்துவதைத் தவிர்க்கவும்.
உணவுப் பொருட்களை மீண்டும் மீண்டும் சூடு படுத்துவதால் அதிலுள்ள ஊட்டச்சத்துக்களான விட்டமின்கள் புரதங்கள் அழிக்கப்படும் என்பதால் இந்த செயலை தவிர்க்க வேண்டும். பிரிட்ஜில் இருந்து எடுக்கும் போது நீங்கள் சாப்பிடப்போகும் அளவுக்கான உணவை மட்டும் எடுத்து, சூடாக்கி, மீதமுள்ள உணவை உடனடியாக குளிர்சாதன பெட்டியில் வைத்து 24-48 மணி நேரத்திற்குள் பயன்படுத்தவும். நீண்ட காலமாக உணவை சேமித்து வைக்க கூடாது.
3. மூடிவைத்து சூடாக வைக்கவும்.
உணவை சூடாக்கும் போது மூடி வைத்து சூடாக்குவதால் உணவு சரிசமமாக சூடாவதுடன் ஈரப்பதத்துடன் பராமரிக்கப்படுகிறது. மைக்ரோவேவில் சூடாக்கும் போது பாதுகாப்பான மூடியை பயன்படுத்தவும் மேலும் நீராவி வெளியேற அனுமதிக்க ஒரு சிறிய துளை விடவும். கேஸ்ஸில் உணவை சூடாக்கும்போது மூடியை பயன்படுத்தி மிதமான சுடரை வைப்பது உணவை கரியாமல் பாதுகாக்க உதவும் .
4. மீண்டும் சூடுபடுத்தக்கூடாத சில உணவுகள்
முட்டையை மீண்டும் சூடுபடுத்தும்போது ரப்பர் போல மாறிவிடும் .அரிசியை சூடாக்கும்போது பாக்டீரியாக்கள் வளரும் அபாயம் உண்டு. பச்சை காய்கறிகளை சூடு படுத்தும்போது ஊட்டச்சத்துக்கள் அழிக்கப்படும் என்பதால் முட்டை, அரிசி, பச்சை இலை காய்கறிகளை மீண்டும் மீண்டும் சூடாக்கும்போது கவனமாக இருக்க வேண்டும்.
5. சீராக சூடுபடுத்துவது நல்லது
சீரற்ற வெப்பம் ஊட்டச்சத்துக்கள் அழிய வழிவகுக்கும் என்பதால் உணவை சூடாக்கும்போது, ஒரு கரண்டியின் உதவியுடன் நன்றாகக் கிளறி, வெப்பநிலையைச் சரிபார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.
மேற்கூறிய ஐந்து வழிமுறைகளில் உணவுகளை சூடாக்கி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நலன் பயக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக சூடு படுத்தாமல் புதிதாக செய்த உணவுகளை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த பயன் அளிக்கும்.