மிளகாயை சமையலுக்கு பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டிய குறிப்புகள்!

When using chilies for cooking
Samayal tips!
Published on

ச்சை மிளகாய், வர மிளகாய், குண்டு வர மிளகாய், வத்தல் போடும் மிளகாய், கேப்சிகம், கேரளத்து நெய் மிளகாய் என்று பல்வேறு விதமான மிளகாய் வகைகளை நாம் சமையலுக்குப் பயன்படுத்தி வருகிறோம். அவற்றை பொடிக்கும் பொழுதும், ஃப்ரிட்ஜில் வைக்கும் பொழுதும், சமைக்கும் பொழுதும் நாம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன என்பதை இப்பதிவில் காண்போம். 

சாதாரணமாக பச்சை மிளகாய்களை வாங்கியவுடன் அதன் காம்புகளை ஆய்ந்துவிட்டு சிறிது மஞ்சள்தூள் போட்டு குலுக்கி வைத்தால் பழுக்காமல் இருக்கும். அதை ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். 

மேலும் கேப்ஸிகம் மற்றும் ஊறுகாய் போட வாங்கிய மிளகாய்கள் போன்றவற்றை அழுத்தமான பிளாஸ்டிக் கவரில் ஆங்காங்கே சிறிய துளைபோட்டு அதில் இந்த ரக பச்சை மிளகாய்களை போட்டு ஃப்ரிட்ஜில் வைத்தால் கெடாமல் இருக்கும். 

பச்சை மிளகாயை சிறிது நேரம் சுடுதண்ணீரில்  போட்டு எடுத்து சமைத்தால் அல்சர் வராது. 

அதிகமாக பச்சை மிளகாய்களை நறுக்க கத்திரிக்கோலை பயன்படுத்தலாம். இதனால் கை எரிச்சல் தவிர்க்கப்படும். சமயத்தில் அதிகமாக நறுக்கி கையெரிந்தால் கையில் கொஞ்சம் நல்லெண்ணெய் தேய்த்துக்கொண்டால் எரிச்சல் போய்விடும்.

வீட்டில் விளைந்த கேரளத்து பெரிய நெய் மிளகாயை சமைப்பதாக இருந்தால் முதலில் சமைக்கும்பொழுது அதில் சிறியதாக சமைத்து பாருங்கள். இல்லையேல் பெரியதாக சமைத்தால் அதில் பாதியை மட்டும் போட்டு பாருங்கள். காரம் பயங்கரமாக இருக்கும். முதல் முதலில் மற்றவர்கள் சொன்னால் பொய் சொல்கிறார்கள் என்று எண்ணுவோம். நாமாக சமைக்கும் பொழுதுதான் அதன் கார நெடியை உணரமுடியும். 

மிளகாய் முதலான மசாலா பொருட்களை நன்கு வறுத்துவிட்டு பாட்டிலில் போட்டு வைக்கலாம். எடுத்து சமைக்க எளிதாக இருக்கும். 

மிளகாய்களை சமைப்பதற்கு எடுக்கும் பொழுது அதில் உள்ள விதையையும், காம்பையும் நீக்கி விடுவோம். அவற்றை சேமித்து வைத்தால் மிளகாய்ப்பொடி அரைக்கும் பொழுது சேர்த்து அரைக்கலாம். இதனால் நார்ச்சத்துடைய மிளகாய் பொடி கிடைக்கும்.

அந்த விதைகளில் சிறிதளவை தோட்டத்தில் தெளித்து வைத்தால்  செடி வளர்ந்து கொத்து கொத்தாக மிளகாயை கொடுக்க ஆரம்பிக்கும். தேவையான பொழுது பச்சை மிளகாயை பறித்துக் கொள்ளலாம். 

மிளகாய்களை வறுக்கும்பொழுது கொஞ்சம் நல்லெண்ணெய் சேர்த்து வதைக்கினாலும் நெடி வராது. 

மிளகாயை அரைப்பதற்கு வறுக்கும் பொழுது சில கல் உப்பை போட்டு வறுக்கலாம். நெடியேறாது. மிளகாய் அரைக்கும் பொழுதும் கைப்பிடி உப்பை போட்டு அரைத்து வைத்தால் வண்டுபிடிக்காது. நீண்ட நாள் கெடாமல் இருக்கும். 

இதையும் படியுங்கள்:
பிரட் கார்ன் போண்டாவும் ஹெல்தி கார்ன் சூப்பும் செய்வோமா?
When using chilies for cooking

இப்படி பக்குவமாக அரைத்த மிளகாய்த்தூளை கண்ணாடி பாட்டிலில் காற்று புகாமல் வைத்தால் காரம் குறையாமல் இருக்கும். மேலும் கட்டித்தட்டாமலும் இருக்கும். 

மிக்ஸியில் மிளகாய்களை பொடியாக்க வேண்டுமானால் சிறிது உப்பு போட்டு தூளாக்க வேண்டும். அப்பொழுது திப்பி திப்பியாக இல்லாமல் மிளகாய் நன்றாக தூளாகிவிடும். 

மிளகாய்த்தூள் கொட்டி வைக்கும் பாட்டிலில் சிறு துண்டு பெருங்காயத்தைப் போட்டு வைத்தாலும் தூள் கெடாமல் இருக்கும். 

மிளகாயை நன்றாக காயவைத்து தூள் செய்துவிட்டு பிறகும் நல்ல வெயிலில் காயவைத்து எடுத்து வைத்தால் கெட்டுப் போகாமல் இருக்கும். இதில் ஒரு பகுதியை ஜிப் லாக் பையில் போட்டு ஃப்ரிட்ஜில் எடுத்து வைத்தாலும் நீண்ட நாள் காரம் குறையாமல் சமைக்கலாம். 

சப்பாத்தி தோசை போன்றவற்றை செய்து முடித்த தவாக்கள் சூடாக இருக்கும் பொழுது மிளகாய்களை அதில் பரப்பிவிட்டு அந்த மிளகாய்களை எடுத்து சில்லி ஃப்ளேக்ஸ் செய்தால் ஒரே சீரான அளவில் ஃப்ளேக்ஸ் கிடைக்கும். கருகாமலும் இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com