
பச்சைத் தக்காளிக்காய் சட்னி (Tomato chutney and gravy)
தேவையான பொருட்கள்:
பச்சைத் தக்காளிக்காய் – 3
பூண்டு – 6 பல்
சிவப்பு மிளகாய் வற்றல் – 6
கடலைப்பருப்பு – 2 ஸ்பூன்
கருப்பு உளுத்தம் பருப்பு – 2 ஸ்பூன்
சீரகம், மிளகு – தலா 1 டீஸ்பூன்
இஞ்சி – ஒரு துண்டு
புளி – ஒரு நெல்லிக்காய் அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
நல்லெண்ணெய் – 150 ml
தாளிக்க:
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கொத்தமல்லி தழை – சிறிதளவு
செய்முறை:
முதலில் தக்காளிக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். அடுப்பில் மிதமான தீயில் வாணலியை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி, சூடானதும் முதலில் பருப்புகளை போட்டு வறுக்கவும்.
பிறகு மிளகு, சீரகம், மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து வறுத்து எடுத்து ஆறவிடவும்.
பிறகு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி தக்காளிக்காய் துண்டுகள், புளி, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். மிக்சியில் முதலில் பொரித்த பருப்புக் கலவையை போட்டு இரண்டு சுற்று அரைத்த பிறகு, வதக்கிய தக்காளிக்காயைப் போட்டு உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். பிறகு அரைத்த விழுதை சேர்த்து நன்கு கிளறி, எண்ணெய் பிரிந்து வரும்போது கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
பச்சைத் தக்காளிக்காய் சட்னி தயார். சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட அவையாக இருக்கும்.
ரசசாதம்,தயிர் சாதம் போன்ற கலவை சாதங்களுடனும் சாப்பிடலாம்.
பச்சைத் தக்காளிக்காய் குழம்பு
தேவையான பொருட்கள்:
பச்சைத் தக்காளிக்காய் – 3
பூண்டு – 6 பல்
சிவப்பு மிளகாய் வற்றல் – 6
கடலைப்பருப்பு – 2 ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 2
தக்காளிப் பழம் – 1
தேங்காய் துருவல் – 1 கப்
கசகசா – ½ டீஸ்பூன்
பட்டை – 1
கிராம்பு – 2
சோம்பு – 1 டீஸ்பூன்
சீரகம், மிளகு – தலா 1 டீஸ்பூன்
இஞ்சி – ஒரு துண்டு
மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
மல்லித் தூள் – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப
நல்லெண்ணெய் – 50 ml
தாளிக்க:
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா 1 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல், பட்டை, கிராம்பு, சோம்பு, கசகசா சேர்த்து வறுக்கவும். பிறகு சீரகம், மிளகு, பூண்டு, வெங்காயம், தக்காளிப் பழம் சேர்த்து நன்கு வதக்கவும்.
அதனுடன் கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மல்லித்தூள், தேங்காய் துருவல், கசகசா சேர்த்து நன்கு கிளறி ஆறவிடவும். ஆறிய பிறகு மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பச்சைத் தக்காளிக்காயை நான்காக கீறி, அதில் சேர்த்து நன்கு. பச்சை வாசனை போகும் வரை வதக்கவேண்டும்.
பின்னர் அரைத்த விழுதை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொதிக்கவிடவும். இறுதியில் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
இட்லி, தோசை, அடை போன்றவற்றுடன் தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.
குறிப்பு:
தேவைக்கேற்ப எண்ணெய் அளவை குறைக்கலாம். கசகசாவை வறுக்கும்போது கருகிவிடாமல் கவனிக்க வேண்டும்.