
தற்போது வெயில் காலம் என்பதால் தக்காளியின் விலை கூடுவதும் குறைவதுமாக இருக்கிறது. குறைந்து இருக்கையில் தக்காளியில் விதவிதமான ரெசிபிகள் செய்து சமையலை முடிக்கலாம். தக்காளியில் அதிக விட்டமின் சி இருப்பதால் உடல் நலனுக்கும் நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர்வரை அனைவரும் தக்காளியை சேர்த்துக் கொள்ளலாம் தக்காளி ரெசிபிகள் இங்கு பார்க்கலாம்.
தக்காளி குழம்பு
அரை கிலோ நல்ல சிவப்பு நிறமான பெரிய தக்காளி பழம் வாங்கி சுத்தம் செய்து ஒரு பழத்தை நான்கு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். இரண்டு பெரிய வெங்காயத்தை நீளமாக வெட்டி வைக்கவும். மிளகாய் இரண்டு கீறவும். சீரகம் ஒரு தேக்கரண்டி வறுத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் நான்கு கரண்டி ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு வெடித்ததும் வெங்காயம் மிளகாய் போட்டு வதக்கி வெட்டி வைத்திருக்கும் தக்காளி பழம் உப்பு மஞ்சள் போட்டு வற்றல் சீரகம் அரைத்த மசாலா சேர்த்து நன்கு வதக்கி ஓரு கப் தேங்காய் துருவலில் பால் எடுத்து ஊற்றி நன்றாக கொதிக்கவைத்து மல்லி இலை தூவி தேவையான குழம்பு பக்குவத்தில் இறக்கலாம்.
வாசனை சாமான்கள் பிரியப்பட்டால் ஒரு தேக்கரண்டி கரம் மசாலா பொடி சேர்க்கலாம் அல்லது தாளிக்கும் போது சிறிது சோம்பு சேர்த்து பட்டை, கிராம்பு 2 போட்டுக்கொள்ளலாம். அதிக குழம்பு தேவைப் படுமானால் தேங்காய் பாதியை பால் எடுத்து மீதியை ஒரு கரண்டி கசகசாவுடன் விழுதாக அரைத்து குழம்பு தயார் செய்தால் மேலும் சுவையாக இருக்கும்.
தக்காளி உருளைக்கிழங்கு குழம்பு
அரைகிலோ தக்காளி பழத்துடன் 200 கிராம் உருளைக்கிழங்கு பெரிய துண்டாக வெட்டி போட்டு மேலே கூறியபடி குழம்பு தயார் செய்யலாம். அல்லது அதிக குழம்பு வேண்டும் என்பவர்கள் தேங்காயை அரைத்து ஊற்றி தனியாவுடன் மற்ற மசாலா சாமான்களை சேர்த்து வறுத்து அரைத்த தக்காளி குழம்பு வைக்கலாம்.
தக்காளி முருங்கைக்காய் குழம்பு
அரை கிலோ தக்காளி பழத்துடன் இரண்டு முருங்கைக்காய் சேர்த்து மேலே கூறியபடி தயார் செய்யலாம். ஆனால் முருங்கைக்காய் சேர்த்தால் வாசனை சாமான்கள் மற்றும் கசகசா சேர்க்காமல் வைப்பது நல்லது. காரணம் அப்போதுதான் முருங்கைக்காயின் வாசனை தூக்கலாக இருக்கும்.
தக்காளி புளிக்குழம்பு
புளி கரைசலில் தேவையான மசால் உப்பு கலந்து தக்காளி துண்டுகளையும் போட்டு எண்ணெய் ஊற்றி கொதிக்கவைத்து இறக்கலாம் அல்லது நல்லெண்ணெயில் பூண்டு, கறிவேப்பிலை, வெந்தயம் வதக்கி அரைத்த தக்காளி விழுது புளிக்கரைசல் உப்பு சேர்த்து சுண்டியதும் பெருங்காயத்தூள் சேர்த்து எடுத்து வைத்து இரண்டு மூன்று நாட்கள் உபயோகிக்கலாம்.
தக்காளிக்காய் கறி
கால் கிலோ தக்காளிக்காயை சுத்தம் செய்து வெட்டி வைத்துக்கொள்ளவும். வாணலில் இரண்டு கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு தாளித்து வெங்காயம் கருவேப்பிலை போட்டு சிவந்ததும் வெட்டி வைத்திருக்கும் தக்காளி காயைபோட்டு சிறிது நேரம் வதக்கி இரண்டு தேங்காய் சில் அரைத்து பால் எடுத்து அதனுடன் உப்பு, மஞ்சள்தூள் தேவையான மிளகாய்த்தூள் கலந்து காய் வெந்து எண்ணெய் பிரியும்போது இறக்கவும். இது வேறு சுவையைத்தரும்.