

இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் நல்ல கொழுப்பு நிறைந்த எள்ளை வைத்து, நாம் பெரும்பாலும் எள்ளுப் பொடி, எள்ளுருண்டை தான் செய்திருப்போம். ஆனால், சுடச்சுட சாதத்தில் பிசைந்து சாப்பிட ஒரு அருமையான காரசாரமான ‘எள்ளு குழம்பு’ செய்தால் எப்படி இருக்கும்?
வத்தக்குழம்பு, பூண்டு குழம்பை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு அலாதியான சுவையும், வீடே மணக்கும் வாசனையும் கொண்ட பாரம்பரிய எள்ளு குழம்பை எப்படிச் செய்வது என்று பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
வறுத்து அரைக்க:
கருப்பு எள் - 3 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
குழம்புக்கு:
புளி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம் - 15
பூண்டு - 10 பற்கள்
தக்காளி - 1
நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
கடுகு, வெந்தயம் - தலா 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை!
எள்ளு குழம்பின் சுவையே நாம் அரைக்கும் அந்தப் பொடியில்தான் இருக்கிறது. அடுப்பில் ஒரு வெறும் கடாயை வைத்து, முதலில் கருப்பு எள்ளை மட்டும் சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும். எள் படபடவென வெடித்து மணம் வரும்போது, கருகிவிடாமல் உடனடியாக அதை ஒரு தட்டிற்கு மாற்றி விடுங்கள்.
அதே கடாயில் ஒரு சொட்டு நல்லெண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம் ஆகியவற்றைச் சேர்த்துப் பொன்னிறமாக வறுக்க வேண்டும். இவை அனைத்தும் நன்றாக ஆறிய பிறகு, மிக்ஸியில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி, ரொம்பவும் நைஸாக இல்லாமல் சற்று கொரகொரப்பான விழுது பதத்திற்கு அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
இப்போது ஒரு அடிகனமான கடாயில் அல்லது மண்சட்டியில் தாராளமாக நல்லெண்ணெய் ஊற்றுங்கள். இந்த ரெசிபிக்கு நல்லெண்ணெய் தான் அசல் சுவையைக் கொடுக்கும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை தாளிக்கவும்.
வெந்தயம் லேசாகச் சிவந்ததும், முழு சின்ன வெங்காயம் மற்றும் பூண்டுப் பற்களைச் சேர்த்து எண்ணெயிலேயே நன்றாக வதக்குங்கள். வெங்காயம் கண்ணாடிப் பதத்திற்கு வதங்கியவுடன், நறுக்கிய தக்காளியைச் சேர்த்து கரண்டியால் மசித்து விடுங்கள்.
தக்காளி நன்கு குழைந்ததும், கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை ஊற்றி, மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து கொதிக்க விடவும்.
புளியின் பச்சை வாசனை முழுமையாகப் போய், குழம்பு லேசாகக் கொதித்து வரும்போது, நாம் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள எள்ளு மசாலாவை இதில் சேர்த்துக் கிளறுங்கள். எள்ளு விழுது சேர்த்தவுடன் குழம்பு சற்று கெட்டியாகத் தொடங்கும்.
அடுப்பை முற்றிலும் மிதமான தீயில் வைத்துவிட்டு, ஒரு மூடியால் மூடி சுமார் 5 முதல் 7 நிமிடங்கள் வரை பொறுமையாகக் கொதிக்க விடுங்கள். குழம்பின் ஓரங்களில் எண்ணெய் பிரிந்து மிதந்து வரும்போது அடுப்பை அணைத்துவிடலாம்.
அவ்வளவுதான், கமகமக்கும் சுவையான எள்ளு குழம்பு தயார். இதைச் சுடச்சுட சாதத்தில் ஊற்றிப் பிசைந்து, தொட்டுக்கொள்ள ஒரு அப்பளத்தோடு சாப்பிட்டுப் பாருங்கள். அமிர்தம் தோற்றுப்போகும் இதன் சுவையிடம்!