வெந்தயம் இல்லாத வீடே கிடையாது. வெந்தயம் நிச்சயமாக சமையலறை அஞ்சறைப் பெட்டியில் இடம் பெற்றிருக்கும்.
வெந்தயம் குளிர்ச்சியை கொடுக்க வல்லதாகும். வாய்ப்புண் மற்றும் சூடு அதிகம் வந்து ஏற்படும் கோளாறுகள் அனைத்தையும் வெந்தயம் குணமாக்கிவிடும்.
வெந்தயத்துடன் மிளகாய், கடுகு, துவரம் பருப்பு, கறிவேப்பிலை பெருங்காயம் இவற்றை தக்க அளவு எடுத்து நெய் விட்டு வறுத்து புளியை கரைத்து ஊற்றி உப்பு சேர்த்து பிறகு அதனை அடுப்பில் வைத்து நன்கு மூடி சுண்ட வைக்க வேண்டும். இந்த குழம்பானது அரை பாகமாக நன்றாக சுண்டிய பின் இறக்கி சூட்டுடன் உணவில் கலந்து சாப்பிட மிக சுவையாக இருப்பதுடன் வெப்பத்தால் ஏற்படும் நோய்களையும் தணிக்க வல்லது.
வயிற்றுக் கடுப்புடன் சீதமும் ரத்தமும் போகும்போது வெந்தயத்தை வறுத்து கசாயம் செய்து தேனுடன் கொடுத்தால் குணமாகிவிடும்.
வயிற்றுப்போக்கிற்கு தயிரில் ஊறவைத்த வெந்தயத்தை மறுநாள் அதிகாலையில் தேனுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் குணமாகிவிடும்.
வெந்தயத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது.
தேவையான அளவு வெந்தயத்தையும் கோதுமையும் சமமாக எடுத்து வறுத்துக்கொண்டு, பின்னர் அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். காபி பருகுவதற்கு பதில் அந்த தூளை போட்டு அருந்தலாம் சுவையாக இருக்காது என்று நினைத்து ஒதுக்கினால் வெப்பத்தால் உண்டாகும் நோய்களை கட்டுப்படுத்த இயலாமல் போகும்.
வெந்தயம் ஞாபக சக்தி வளர்க்க வல்லது. ரத்தம் குறைந்து இருப்பவர்களுக்கு இரும்பு சத்து ஊட்டி ரத்த சிவப்பணுக்களை வளர்க்க வல்லது.
தேவையான அளவு வெந்தயத்துடன் கடுகு, பெருங்காயம், மஞ்சள் இந்துப்பு, இவற்றை சமமாக எடுத்து நெய்விட்டு வறுத்து பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். தேவைப்படும்போது முதல் சாதத்தில் இந்த தூளைப் போட்டு பிசைந்து மூன்று நாட்கள் சாப்பிட வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, உதிரச்சிக்கல், ஈரல் வீக்கம் போன்ற நோய்கள் தீரும்.
தேவையான அளவு வெந்தயத்தை எடுத்து அம்மியில் வைத்து நீர் விட்டு அரைத்து அந்த விழுதை தலையில் வைத்து தேய்த்து தலை குளித்து வந்தால் முடி வளரும், முடி உதிர்வது நிற்கும். வழுக்கை தலைகளுக்கு வெந்தயம் நல்ல மருந்தாக பயன்படுகிறது. சீயக்காய் உடன் வெந்தயத்தையும் சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டு, அதனை தேய்த்து குளித்தால் கண்களுக்கு குளிர்ச்சியை தரும்.
தேவையான அளவு வெந்தயத்தை எடுத்து அரைத்து மாவாக்கி களியை போல் கிண்டி எடுத்து பாதிக்கப்பட்ட சரும பகுதிகளில் வைத்து கட்டினால் சருமத்தில் ஏற்பட்ட ரணங்கள் பூச்சி ரோகங்கள் ஆகியவை போய்விடும்.
வெந்தயத்தையும் கோதுமையும் சரிசமமாக எடுத்துக்கொண்டு முதலில் வெந்தயத்தை லேசான சூட்டில் வறுத்துக் கொண்டு பின்னர் கோதுமையையும் வறுத்து இரண்டையும் சேர்த்து இடித்து ஒன்றாக கலந்து காபி போடுவது போல் போட்டு தொடர்ந்து சாப்பிட்டு வரும் பட்சத்தில், நீரழிவு நோய்கள் மற்றும் சிறுநீரக கோளாறுகள், சிறுநீர் அடைப்பு போன்றவை நீங்கிவிடும்.
வெந்தயத்தை பச்சரிசியுடன் கலந்து பொங்கி உப்பு போட்டு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்த விருத்தி உண்டாகும்.
மாதவிடாய் தாமதித்து வெளியாகக்கூடியவர்களும், மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி, இடுப்பு வலி உள்ளவர்களும் தேவையான அளவு வெந்தயத்தை எடுத்து கஷாயமாக செய்து வடிகட்டி தொடர்ந்து மூன்று நாட்கள் அருந்தி வர மாதவிடாய் கோளாறுகள் நீங்கும். அல்லது வெந்தயத்தை மட்டும் தனியே எடுத்து வறுத்து பொடி செய்து கொண்டு அத்துடன் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டாலும் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி இடுப்பு வலி நீங்கும்.
உஷ்ணத்தினால் ஏற்படும் வயிற்றுப்போக்கு வலிக்கு அல்லது நம நம என்று வலிப்பது போல் தோன்றினால் கொஞ்சம் வெந்தயத்தை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு தண்ணீர் அருந்தினாலே போதும் குணமாகிவிடும்.
வெந்தயத்தை வறுத்து பொடி செய்து எலுமிச்சை சாதம் செய்யும் போது போட்டு கிளறினால் சாதம் சுவையாக இருப்பதோடு உடலில் குடலுக்கு நல்லது.
ஆதாரம்: வெந்தயத்தின் அற்புதமான மருத்துவ குணங்கள் என்ற நூல்
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)