
டோல் பூரி மொரிஷியஸில் மிகவும் பிரபலமான உணவாகும். தெருக்களில் நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருந்து டோல் பூரியை வாங்கிச் செல்கின்றனர். இங்கு இந்த உணவை எந்த நேரத்திலும் விரும்பி சாப்பிடுகிறார்கள். டோல் பூரி எந்த நேரத்திலும் எதனுடனும் சேர்த்து சாப்பிடக்கூடிய வகையில் தனித்துவமானது.
இந்த உணவின் தோற்றம் இந்தியாவிலிருந்து வந்திருக்கலாம் என்று சிலர் நம்புகிறார்கள். மொரிஷியஸுக்கு குடிபெயர்ந்த போஜ்புரி மொழி பேசும் இந்திய தொழிலாளர்கள் இந்த உணவை 100 ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப் படுத்தியிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
மொரீஷியஸின் தெருக்களில் இந்த டோல் பூரி எடுத்துச்செல்ல வசதியாக ஒரு காகிதத்தில் சுற்றப்பட்டு சோடாவுடன் விற்கப்படுகிறது. அவற்றை அப்படியே சாப்பிடலாம் அல்லது பலவிதமான காய்கறிகள் அல்லது ஊறுகாய் மற்றும் சட்னி வகைகளுடன் சேர்த்தும் சுவைக்கலாம்.. இங்கு சில இடங்களில் கீர் அல்லது அல்வா போன்ற இனிப்பு உணவுகளுடன் சேர்த்து டோல் பூரி பரிமாறப்படுகிறது. மொரிஷியஸின் பிரபல உணவான டேஸ்டியான டோல் பூரி செய்முறையைப் பார்ப்போம்.
டோல் பூரி செய்முறை:
தேவை:
மைதா மாவு - 3 கப்
கடலைப்பருப்பு - 250 கிராம்
மஞ்சள் பொடி - 1 ஸ்பூன்
சீரகப்பொடி - 1 ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
கடலைப் பருப்பை சுத்தம் செய்த பின் தண்ணீரில் 30 நிமிடம் ஊற வைக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவைத்து அதில் பருப்பை போட்டு கிள்ளு பதமாக வேக வைத்து வடிகட்டவும். வடிகட்டிய நீரை மாவு பிசையும்போது சேர்த்துக்கொள்ளலாம். வெந்த பருப்பு கையினால் நசுக்கினால் நசுங்க வேண்டும். பின் அதை ஒரு துணியில் பரத்தி நன்றாக ஆறவிடவும். ஆறியதும் சீரகம், உப்பு சேர்த்து நன்றாக மைய அரைக்கவும். இந்தக் கலவையை எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். கடலைப் பருப்புக்கு பதிலாக உடைத்த பட்டாணியையும் உபயோகிக்கலாம்.
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கலக்கவும். அதில் பருப்பு வடிகட்டிய தண்ணீர் மற்றும் எண்ணெய் விட்டு சப்பாத்தி மாவு போல மிகவும் மிருதுவாகப் பிசையவும். நெகிழ்வாக இருக்கவேண்டும். பிசைந்த மாவை மூடி 20 நிமிடங்கள் ஊறவிடவும்.. மாவை மீண்டும் நன்கு பிசைந்து பருப்ப உருண்டையின் அதே அளவு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
உருட்டிய மாவை கைகளால் தட்டையாக்கி பின் பருப்பு உருண்டைகளை மாவினுள் வைத்து மூடி பராத்தா போல ஆனால் மிகவும் மெல்லியதாகத் தேய்க்கவும். தேய்த்த ரொட்டியை சூடான தவாவில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு மிதமான தீயில் வேகவைத்து எடுக்கவும். சிவக்க வேண்டாம். இந்த டோல் பூரி மிகவும் மிருதுவாக இருக்கும்.
மொரிஷியஸில் டோல் பூரியில் பட்டாணி, கேரட், முட்டைக்கோஸ் சேர்த்த கார மசாலா கறியை வைத்து ஒரு பேப்பரில் சுற்றித்தருகிறார்கள். மிகவும் சுவையாக இருந்தது. மொரிஷியஸ் தெருக்களில் விற்கப்படும் டோல் பூரியை இங்கு வருகை தரும் சுற்றுலா. பயணிகளும் விரும்பி சாப்பிடுகிறார்கள்.