
இலை முழுக்க சாப்பாடு குழம்பு ரசம் என்று இருந்தாலும் அது தொட்டுக்கொள்ள வைக்கும் கெட்டி சட்னிகள்தான் உணவை சாப்பிட்ட திருப்தியை தருகிறது. அந்த வகையில் சில வித்தியாசமான சட்னிகளை இங்கே பார்ப்போம்.
சீரக சட்னி
தேவை:
சீரகம் -50 கிராம்
பூண்டு- 5 பற்கள்
மிளகாய் வற்றல் - 4
பெரிய வெங்காயம்- 3
நல்லெண்ணெய்- 100 கிராம்
புளி -தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு -தேவைக்கு
தாளிக்க - கடுகு ,உளுந்து, கறிவேப்பிலை
செய்முறை:
சீரகம், மிளகாய் வற்றல், புளி ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். வெங்காயத்தையயும் பூண்டையும் நறுக்கி ஒன்று இரண்டாக தட்டி அதில் சேர்த்து தேவையான உப்பு மஞ்சள்தூள் கலந்து கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணையை ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை போட்டுத் தாளித்து அரைத்து வைத்துள்ள சீரகத் கலவையை அதில் ஊற்றி நன்றாக வெந்து எண்ணெய் பிரிந்து கெட்டியானதும் இறக்கவும். இந்த ஜீரக சட்னி வயிற்று உபாதைகளுக்கு மிகவும் நல்லது.
கேரட் சட்னி
தேவை:
கேரட் - 3
பெரிய வெங்காயம்- 2
பூண்டு - 3 பற்கள்
இஞ்சி - சிறிது
பச்சை மிளகாய் - 7
தேங்காய்த்துருவல் - 1 ஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
உப்பு - தேவைக்கு
நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
செய்முறை:
ஒரு இரும்பு சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு போட்டு சிவக்க வறுத்து பெருங்காயம் சேர்த்து துருவிய கேரட், நறுக்கிய வெங்காயம், உரித்த பூண்டு, கீறிய மிளகாய், இஞ்சி, தேங்காய் துருவல், கருவேப்பிலை போட்டு நன்றாக வதக்கி உப்பு மஞ்சள் தூள் சேர்க்கவும். நீர் வற்றி நன்றாக வதங்கியதும் நன்கு அரைத்து எடுத்து மீதி எண்ணெயை கரண்டியில் காய வைத்து கடுகு தாளித்து அரைத்த விழுதுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். சட்னி கெட்டியாக வந்ததும் இறக்கவும்.
காலிஃப்ளவர் சட்னி
தேவை:
காலிபிளவர்- 1
தேங்காய் - ஒரு கப் துருவியது
இஞ்சி- ஒரு சிறிய துண்டு
சோம்பு - 1 ஸ்பூன்
ஏலக்காய்- 2
வற்றல் மிளகாய் - 5
பூண்டு -5 பற்கள்
கசகசா- ஒரு டேஸ்பூன்
கிராம்பு - 2
பட்டை -சிறு துண்டு
சிறிய வெங்காயம் - 20
தக்காளி- 1.
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 10
செய்முறை:
காலிஃப்ளவரை சுடுநீரில் இட்டு சுத்தம் செய்து பொடி பொடியாக நறுக்கவும். இஞ்சி, பூண்டு, ஏலம், சோம்பு, கிராம்பு, பச்சை மிளகாய், கசகசா, தேங்காய், முந்திரி எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலி வைத்து அதில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், தக்காளி போட்டு வதங்கியதும் காலிஃப்ளவரை வதக்கி அரைத்த மசாலா ஊற்றி உப்பு சேர்த்து நன்றாக கொதி வந்து வெந்து கெட்டியான பின் இறக்கவும் . இது சப்பாத்தி இட்லிக்கு தொட்டும் தொட்டுக்கொள்ள ஏற்ற சத்துள்ள சட்னி ஆகும்.
எள் சட்னி
தேவை:
எள்- 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய் - 1/2 மூடி
வற்றல் - 4
புளி மற்றும் உப்பு – தேவைக்கு
செய்முறை:
எள்ளை சுத்தம் செய்து அடுப்பில் வெறும் சட்டியை காயவைத்து காய்ந்ததும் எள்ளைப்போட்டு பொரித்து எடுத்து அத்துடன் தேங்காய் துருவல் வற்றல் தேவையான உப்பு புளி சேர்த்து நன்றாக அரைத்து ஒரு கரண்டியில் நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, உளுந்து கருவேப்பிலை போட்டு பொரித்து சட்னியில் சேர்த்து பரிமாறலாம்.