

காலை நேரத்தில் சமையலுக்கு நேரம் குறைவாக இருக்கும் இல்லத்தரசிகளுக்கு இந்த இன்ஸ்டன்ட் மசாலா கலவை ஒரு அருமையான உதவியாக இருக்கும். ஒருமுறை தயார் செய்து ஃபிரிட்ஜில் வைத்துக் கொண்டால், தேவையான நேரத்தில் காய்கறிகளுடன் இந்த மசாலாவைச் சேர்த்து சில நிமிடங்களில் சுவையான குழம்பு, மசாலா என எளிதாகத் தயாரித்துவிடலாம். அதிலும் தேங்காய் மசாலாவைத் தனியாகத் தயார் செய்து வைத்துக் கொண்டால், தேங்காய் சேர்க்க வேண்டிய உணவுகளுக்கும் தேவையில்லாத உணவுகளுக்கும் தனித்தனியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒருமுறை தயார் செய்தால் வாரம் முழுவதும் சமையல் வேலையை எளிதாக்கும் இந்த மசாலா கலவையை எப்படி செய்வது என்று பார்க்கலாம்!
இன்ஸ்டன்ட் மசாலா கலவை
தேவையான பொருட்கள்:
நல்ல காரமுள்ள, காம்பு நீக்கிய காய்ந்த மிளகாய் – ¼ கிலோ
சீரகம் – 1 கப்
கொத்தமல்லி விதைகள் – 1½ கப்
மிளகு – 1 கப்
கறிவேப்பிலை – 1 பெரிய கொத்து
வெந்தயம் – ¼ கப்
கல் உப்பு – 2 ஸ்பூன்
பட்டை – 10
கிராம்பு – 10
ஏலக்காய் – 10
சோம்பு – ½ கப்
கசகசா – ¼ கப்
உரித்த பூண்டு – 25 பல்
சின்ன வெங்காயம் – ½ கிலோ
இஞ்சி – 1 துண்டு
தக்காளி – 10
நல்லெண்ணெய் – 1 கப்
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் மிதமான தீயில் கடாயை வைத்து, மிளகு, சீரகம், கொத்தமல்லி விதைகள், பாதி அளவு பட்டை, கசகசா, சோம்பு, கிராம்பு, ஏலக்காய், சேர்த்து அதனுடன் வெந்தயம் மற்றும் காய்ந்த மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு மணம் வரும் வரை வறுக்கவும்.
அதே கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலையைச் சேர்க்கவும். அது நன்கு பொரிந்ததும் பூண்டு, சின்ன வெங்காயம், இஞ்சி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
வதக்கிய வெங்காயக் கலவையை வேறு பாத்திரத்திற்கு மாற்றி வைக்கவும். அதே கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பழுத்த தக்காளிகளை கத்தியால் லேசாகக் கீறி அதில் போட்டு மூடி வைக்கவும்.
ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு கரண்டியால் புரட்டி விட்டு, தக்காளி முழுவதும் எண்ணெயில் நன்கு வதங்கும் வரை மூடி வைக்கவும். வறுத்த பொருட்கள் ஆறியதும், அவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு, ஒரு ஸ்பூன் கல் உப்பு சேர்த்து நன்கு பொடிக்கவும்.
அதனுடன் வதக்கிய வெங்காயம், பூண்டு மற்றும் தக்காளியைச் சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் நன்கு மையாக அரைத்து எடுக்கவும். மிதமான தீயில் கடாயை வைத்து, மீதமுள்ள எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் அரைத்த விழுதைச் சேர்த்து நன்கு கிளறி வதக்கவும்.
விழுது நன்கு வதங்கி எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை அணைத்து, மசாலாவை ஆற விடவும். முழுமையாக ஆறிய பிறகு காற்றுப் புகாத டப்பாவில் போட்டு ஃபிரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம்.
இன்ஸ்டன்ட் தேங்காய் மசாலா
தேவையான பொருட்கள்:
மீதம் உள்ள பட்டை, கசகசா, சோம்பு, கிராம்பு, ஏலக்காய்
தேங்காய் துருவல் – 1 கப்
கொத்தமல்லித்தழை – 1 கப்
பொட்டுக்கடலை – 1 கப்
கல் உப்பு – 1 ஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
செய்முறை
ஒரு கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கசகசா, சோம்பு, கிராம்பு, ஏலக்காய் மற்றும் பொட்டுக்கடலையைச் சேர்த்து நன்கு வறுத்து எடுத்து ஆற விடவும். அதே கடாயில் தேங்காய் துருவலைச் சேர்த்து நன்கு கிளறி வதக்கவும்.
இறுதியாக கொத்தமல்லித்தழையைச் சேர்த்து, அதன் பச்சை நிறம் மாறாமல் லேசாக வதக்கி எடுக்கவும். வதக்கிய பொருட்கள் ஆறியதும், ஒரு ஸ்பூன் கல் உப்பு சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைக்கவும். தண்ணீர் அதிகமாகச் சேர்க்காமல், சிறிதளவு தண்ணீரைத் தெளித்து அரைக்கவும்.
அரைத்த கலவையை ஏர்டைட் டப்பாவில் போட்டு ஃபிரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும் போது ஈரமில்லாத கரண்டியால் தேவையான அளவு எடுத்து உபயோகித்துக் கொள்ளலாம்.
காய்கறிகளைத் தாளித்து விட்டு, இந்த மசாலா கலவையைச் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டால் சுவையான குழம்பு ரெடி!
இந்தக் கலவையில் கொஞ்சம் உப்பு சேர்த்துச் இருப்பதால் குழம்பிற்கு உப்பு சேர்க்கும்போது கவனமாக பார்த்து சேர்த்துக் கொள்ள வேண்டும். தேங்காயைத் தனியாக அரைப்பதன் காரணம்: சில குழம்புகளுக்கு தேங்காய் சேர்க்கத் தேவையில்லை. எனவே, விரும்பும்போது எடுத்துப் பயன்படுத்துவதற்காக தேங்காய் மசாலாவைத் தனியாக அரைத்து வைத்துக் கொள்ளலாம்.
சப்பாத்தி, பூரி போன்றவற்றுக்கான மசாலா தயாரிக்க தேங்காய் மசாலாவை மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த மசாலா கலவைகளை வார இறுதி நாட்களில் ஒருமுறை தயார் செய்து வைப்பதன் மூலம், வேலை நாட்களில் காலை நேரத்தில் சமையலறையில் செலவிடும் நேரத்தை பாதியாகக் குறைக்கலாம். அவசர காலங்களிலும் எவ்வித சிரமமுமின்றி சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவை நிமிடங்களில் தயார் செய்து அசத்த முடியும்.