
இந்த ரசம் ரொம்ப மைல்டாகவும் ருசியாகவும் இருப்பதால் இதனை சூப் போல் அப்படியே குடிக்கலாம். மிளகு சீரக வாசனை தூக்கலாக இருப்பதால் நன்கு பசியைத் தூண்டும். குணம், மணம் நிறைந்த ரசத்தை பொரித்த அப்பளம் அல்லது சிப்ஸுடன் சேர்த்து சாப்பிட ஆஹா என்ன பொருத்தம் என தோன்றும்.
புளி சின்ன எலுமிச்சை அளவு
தக்காளி 2
உப்பு தேவையானது
வறுத்து பொடிக்க:
தனியா ஒரு ஸ்பூன்
மிளகாய் ஒன்று
மிளகு ஒரு ஸ்பூன்
சீரகம் அரை ஸ்பூன்
துவரம் பருப்பு 2 ஸ்பூன்
வெறும் வாணலியில் தனியா ஒரு ஸ்பூன், மிளகாய் ஒன்று, மிளகு ஒரு ஸ்பூன், சீரகம் அரை ஸ்பூன், துவரம் பருப்பு இரண்டு ஸ்பூன் சேர்த்து நன்கு வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு நைஸாக பொடித்து கொள்ளவும்.
புளியை நான்கு கப் தண்ணீர் விட்டு நன்கு கரைத்து வடிகட்டி எடுக்கவும். அதில் பொடியாக நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் புளி வாசனை போக கொதிக்க விட்டு அரைத்த பொடியை தண்ணீர் விட்டு கலந்து கொதிக்கும் புளித் தண்ணீரில் விட்டு தேவையான அளவு நீர் சேர்த்து விளாவவும்.
மேலாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை யை தூவி இறக்க ரசம் வசனை தூக்கும். வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு கடுகு, சீரகம், கருவேப்பிலை தாளித்துக் கொட்ட மிகவும் ருசியான ரசம் தயார்.
Multi purpose Thokku:
சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை மட்டும் அல்லாமல் சூடான சாதத்திலும் பிசைந்து சாப்பிட ருசியான தொக்கு செய்யலாம்.
சின்ன வெங்காயம் கால் கிலோ
உப்பு தேவையான அளவு
கருவேப்பிலை ஒரு கைப்பிடி
புளி கோலி அளவு
வெல்லம் சிறு துண்டு
மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன்
நல்லெண்ணெய் கால் கப்
வறுத்து பொடிக்க:
கடுகு 1ஸ்பூன்
வெந்தயம் 1/2 ஸ்பூன்
மிளகாய் 10
சீரகம் கால் ஸ்பூன்
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், மிளகாய், சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை சிறிது நல்லெண்ணெய் விட்டு நன்கு வதக்கி மிக்ஸியில் பொடிக்கவும்.
வாணலியில் கால் கப் நல்லெண்ணெய் விட்டு கடுகு, சிறிது கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். கடுகு வெடித்ததும் தோல் எடுத்து பொடியாக நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை உப்பு சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கி கண்ணாடி போல் ஆனதும் அதில் தேவையான அளவு மஞ்சள் தூள், புளி கரைசல் கரைத்து விட்டு கிளறவும். சுருண்டு வரும் சமயம் பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து சின்ன துண்டு வெல்லமும் போட்டு கிளறி இறக்க சூப்பரான, சுவையான தொக்கு ரெடி.