பொதுவாக, சாப்பிட்டு முடித்தவுடன் சிலருக்கு புகைப்பிடிப்பது, காபி குடிப்பது, அதிகமாகத் தண்ணீர் குடிப்பது போன்ற பழக்கங்கள் இருக்கும். ஆனால், இரவு சாப்பிட்டு முடித்தவுடன் செய்யக்கூடாத சில விஷயங்கள் இருக்கிறது. அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. இரவு சாப்பிட்டு முடித்ததும் குளிக்கும் பழக்கம் சிலருக்கு இருக்கும். ஆனால், அவ்வாறு சாப்பிட்ட பிறகு குளிப்பது உடல் நலத்திற்கு நல்லதல்ல. அது செரிமான பிரச்னையை உண்டாக்கும். வயிற்றுப் பகுதியில் இருக்கும் இரத்தம் குளிக்கும்போது மற்ற பாகங்களுக்கு செல்வதால் செரிமானம் தடைப்படும். அதைப்போல, இரவு சாப்பிட்ட பிறகு அதிகமாக உடற்பயிற்சி செய்வதும் நல்லதல்ல என்று சொல்லப்படுகிறது.
2. இரவு நேரங்களில் சாப்பிட்டு முடித்த பிறகு சிலர் பழங்கள் சாப்பிடுவது வழக்கம். இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று எண்ணினாலும் சிலருக்கு இரவில் பழம் சாப்பிடுவதால் நச்சுத்தன்மை உண்டாகும். பழம் சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் உணவுக்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்போ அல்லது பின்போ எடுத்துக்கொள்வது சிறந்தது.
3. இரவு உணவு சாப்பிட்டு முடித்த உடனே அதிகமாகத் தண்ணீரை எடுத்துக்கொள்ள கூடாது. இரவு உணவிற்குப் பிறகு உடனேயே டீ அல்லது காபி குடிப்பதைத் தவிர்த்து விடுவது நல்லது. இது வயிற்றில் அமிலத்தன்மையை அதிகரித்து வாயு பிரச்னையை ஏற்படுத்தும். மேலும், உணவு எடுத்துக்கொண்ட உடனேயே டீ குடிப்பது, உடலில் இரும்புச்சத்தை உறிஞ்சுவதை தடுப்பதாக சொல்லப்படுகிறது.
4. இரவு சாப்பிட்ட உடனேயே தூங்கக் கூடாது. உணவு எடுத்துக்கொண்ட பிறகு குறைந்தது முப்பது நிமிடம் இடைவேளைக்கு பிறகுதான் தூங்க வேண்டும். உணவு எடுத்துக்கொண்ட உடனேயே தூங்கி விட்டால், வயிற்றில் செரிமானம் சரியாக நடைபெறாது.
5. இரவு உணவு எடுத்துக்கொண்ட உடனேயே புகைப்பிடிப்பது பத்து சிகரட் குடித்ததற்கு சமம் என்று சொல்லப்படுகிறது. எனவே, சிகரட் பிடிக்கும் பழக்கம் ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கும் என்பதால், அதை முற்றிலும் நிறுத்தி விடுவது சிறந்தது.
6. இரவு சாப்பிட்டு முடித்த உடனேயே பல் துலக்குவது நல்லதல்ல. குறிப்பாக, அமிலத்தன்மை கொண்ட உணவுகளை எடுத்துக்கொண்ட பிறகு பல் துலக்குவது பற்களில் உள்ள Enamelஐ பாதிக்கும். எனவே, குறைந்தது 30 நிமிடமாவது பொறுத்திருந்து பிறகு பல் துலக்குவது சிறந்ததாகும். இனி இரவு உணவு எடுத்துக்கொண்ட பிறகு இந்த குறிப்புகளை பின்பற்றி ஆரோக்கியமாக வாழுங்கள்.