தில்லையில் அருள்பாலிக்கும் நடராஜ பெருமானுக்கு உகந்த நட்சத்திரம் திருவாதிரை. சிவபெருமானை ‘ஆதிரையான்’ என்றும் அழைப்பார்கள். சிதம்பரம் திருக்கோயிலில் மார்கழியில் நடைபெறும் திருவாதிரை திருநாள் விழாவை மிகவும் சிறப்பாகக் கொண்டாடுவர். பஞ்சபூத தலங்களில் ஆகாயத் தலமான சிதம்பரத்தில் திருவாதிரை அன்று விசேஷங்கள் நடைபெறும். அன்று ஆருத்ரா தரிசனம் மிகவும் போற்றப்படுகிறது. திருவாதிரை திருநாளில் வெல்லம் கலந்த களி செய்வார்கள். நடராஜ பெருமாளுக்கு களி மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தில்லை நடராஜருக்கு களி மிகவும் பிடித்தது ஏன் தெரியுமா?
சேந்தனார் என்னும் சிவ பக்தர் தில்லையில் வாழ்ந்து வந்தார். விறகு வெட்டி விற்று தனது குடும்பத்தை நடத்தி வந்தாலும் தினமும் சிவ பூஜை செய்யத் தவற மாட்டார். அத்துடன் தன்னை நாடி வரும் சிவனடியார்களுக்கு விருந்தளித்து மகிழ்வார். சிவனடியார்கள் உணவு உண்பது சிவபெருமானே நேரில் வந்து உண்பதாக நினைத்து மகிழ்வார். சிவனடியார்களை உபசரித்த பின்தான் அவர் உண்பது வழக்கம்.
சேந்தனார் பக்தியின் பெருமையை உலகுக்கு உணர்த்த தில்லைவாசன் சேந்தனாரை சோதிக்க ஆரம்பித்தார். திருவாதிரை திருநாளுக்கு முதல் நாள் இரவில் இருந்து கடுமையாக மழை பெய்து கொண்டிருந்தது. தொடர் மழையால் எங்கும் வெளியில் செல்ல முடியாமல் தவித்தார். காட்டிற்கு சென்று விறகு வெட்டிக்கொண்டு அதை விற்று வந்தால்தான் அன்றைய பொழுது ஓடும். வீட்டில் சமைப்பதற்கு எந்த பொருட்களும் இல்லை.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் சிவனடியார் யாராவது வந்தால் என்ன செய்வது என்று அவர் மனைவியும் சேந்தனாரும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவர்கள் வீட்டின் வாசல் முன், ‘திருச்சிற்றம்பலம்…. சம்போ மகாதேவா’ என்று குரல் கேட்டு வெளியே வந்தவர்கள் மழை தூறலில் சிவனடியார் ஒருவர் நின்று கொண்டிருந்ததைக் கண்டதும் அவரை மகிழ்வுடன் வீட்டிற்குள் அழைத்து அவருக்கு ஆசனம் அளித்து பணிவிடை செய்தார்கள்.
சிவனடியாரின் பசியைப் போக்க வீட்டில் சமைப்பதற்கு ஒன்றும் இல்லை என்பதால் சேந்தனாரின் மனைவி வீட்டில் இருந்த சிறிதளவு அரிசி மாவில் வெல்லப்பாகு தயாரித்து கலந்து களி கிளறினாள். சிவனடியாரும் அவர்கள் கொடுத்த களியை உண்டு மகிழ்வுடன் அவர்களிடம் இருந்து விடைபெற்றுச் சென்றார்.
மறுநாள் காலை சேந்தனாரும் அவரது மனைவியும் நடராஜ பெருமானை தரிசிக்கச் சிவாலயம் சென்றனர். அங்கு கோயிலை திறந்த தில்லைவாழ் அந்தணர்கள் இறைவன் சன்னிதியில் களி சிதறிக் கிடப்பதை கண்டு வியந்தனர். சேந்தனாரும் அவர் மனைவியும் இறைவன் முன்பு களி சிதறி கிடப்பதை கண்டு ஆச்சரியம் அடைந்தனர். சேந்தனாரும் தமது வீட்டிற்கு சிவனடியார் ஒருவர் வந்ததையும் அவருக்குக் களி கொடுத்து உபசரித்ததையும் அந்தணர்களிடம் கூற, இது நடராஜ பெருமானின் திருவிளையாடல்தான் என்பதை அறிந்து சேந்தனாரையும் அவரது மனைவியையும் போற்றி மகிழ்ந்தார்கள்.
அன்றிலிருந்து திருவாதிரை திருநாளில் களி செய்து நடராஜ பெருமானுக்கு நெய்வேத்தியம் செய்து வழிபடுவது வழக்கமாய் விட்டது. மார்கழி மாத திருவாதிரையன்று விரதம் இருந்து திருவாதிரை களியை உண்பவர்கள் நரகம் செல்ல மாட்டார்கள் என்பது நம்பிக்கை. திருவாதிரை களி உருவான தலம் தில்லை அம்பலம் எனப்படும் சிதம்பரம்தான்.