

மொறுமொறுப்பான கார அடையை செய்ய அரிசி, பருப்பு ஆகியவற்றை ஊறவைத்து அரைத்து செய்யவேண்டும். ஆனால், அதேபோன்ற, அதைவிட சுவை மிகுந்த
பொட்டேட்டோ சில்லா எனப்படும் உருளைக்கிழங்கு அடையை செய்ய, எதையும் ஊறவைக்க தேவையில்லை. இதன் மொறு மொறுப்பான தன்மையும் சுவையும் உங்களை அடிக்கடி செய்யத் தூண்டும். வேலையும் குறைவு என்பதால், மாலை நேர சிற்றுண்டியாக செய்து அசத்தலாம்.
தேவையான பொருட்கள்:
1.உருளைக்கிழங்கு - 2 பெரியது
2.கடலை மாவு - 1 மேசைக் கரண்டி
3.ரவை - 3 தேக்கரண்டி
4. நறுக்கிய வெங்காயம் - 1 கப்
5. பச்சை மிளகாய் -2 (பொடியாக நறுக்கியது)
6. கேரட் - பொடியாக நறுக்கியது கால் கப்
7. பச்சை பட்டாணி - 2 தேக்கரண்டி
8. இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி 9.சீரகம் - அரை தேக்கரண்டி
10. மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
11. சிவப்பு மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
12. கரம் மசாலா - அரை தேக்கரண்டி
13. எண்ணெய் - 1 மேசைக் கரண்டி
14. கொத்தமல்லி தழைகள் - 1 கைப்பிடி
15. கார்ன் மாவு - 2 தேக்கரண்டி
16. உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
உருளைக்கிழங்கை தோலை உரித்து, நன்கு துருவிக் கொள்ளவும். சிறிது நேரம் தண்ணீரில் துருவலை ஊறவைத்துவிட்டு, பின்னர் ஒரு துணியில் கட்டி பிழிந்து எடுத்துக்கொள்ளவும். இந்த துருவலில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கேரட், பச்சைப் பட்டாணி, இஞ்சி பூண்டு விழுது மற்றும் கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து கிளறிவிடவும்.
இந்தக் கலவையுடன் கடலை மாவு, கார்ன் மாவு, சீரகம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும்.
இந்த செய்முறையில் தண்ணீர் அதிகம் தேவைப்படாது. உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் ஆகியவற்றில் இயற்கையாகவே தண்ணீர் அதிகம் உள்ளதால், கலவையில் தண்ணீர் சேர்க்க தேவையில்லை. கிளறிய கலவையை அப்படியே அரைமணி நேரம் பாத்திரத்தில் மூடிவைக்கவும். இப்போது காய்கறிகளில் இருந்த தண்ணீர் எல்லாம் வெளியேறி மாவுக்கு போதுமான ஈரப்பதத்தை தந்திருக்கும்.
இப்போது பாத்திரத்தில் உள்ள கலவையை பிசைந்து அடைக்கு தேவையான பதத்திற்கு கொண்டு வரவும். இந்த கலவையை லேசாக உருட்டி, சூடான தோசைக்கல்லில் இட்டு அடை போல தட்டிக் கொள்ளவும். அதிக கனமாகவோ, மிகவும் மெல்லியதாகவோ இல்லாமல் மீடியமாக தட்டவும். தட்டிய பின்னர் அடையை சுற்றி ஒரு தேக்கரண்டி அளவிற்கு எண்ணெயை விடவும். மொறுமொறுப்பாக வேகும் வரை பார்த்து, அடையை திருப்பி போட்டு மறுபுறமும் வேகவிடவும்.
உருளைக்கிழங்கு மற்றும் காய்கறிகள் வேக சில நிமிடங்கள் ஆகும். இந்த அடை வேகமாக வேகவேண்டும் என்றால், ஆரம்பத்தில் உருளைக் கழங்கை துருவுவதற்கு பதிலாக வேகவைத்து மசித்தும் செய்யலாம். வெந்த பொட்டேட்டோ சில்லாவை சூடாக எடுத்து, தக்காளி சாஸ் மற்றும் புதினா சட்னியுடன் சேர்த்து பரிமாறலாம். இந்த சில்லா சாப்பிட சுவையாகவும் மொறு மொறுப்பாகவும் இருக்கும்.