

நன்கு புளித்த தயிரில் ரவையை ஊறவைத்து அதில் இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி இலைகளை சேர்த்துத்தட்டி வடைகளாக எண்ணெயில் போட்டு எடுங்கள். இந்த ரவை வடை சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.
பஜ்ஜிக்கு பெரிய வெங்காயம் நறுக்கும்போது வழுக்கிக்கொண்டுபோகும். ஆகையால் தோல் உரிக்காமல் வில்லையாக்கி விட்டு பிறகு தோல் நீக்கினால் பிரச்னை இருக்காது.
போளி, பூரணம் மற்றும் கொழுக்கட்டை பூரணம் மீதமாகிவிட்டால், அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, இட்லி மாவில் போட்டு எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சுகியன் போன்று இருப்பதுடன் மாறுதலான சுவையுடனும் இருக்கும்.
சமையலுக்கான காய்கறிகள் வதக்கும்போது தேவைக்கேற்ப டேபிள் சால்ட் போட்டு வதக்கினால் வாணலியில் எண்ணெய் குறைவாக விட்டால் போதும் என்பதுடன் அடி தீயாமல் சீக்கிரம் வதங்கவும் செய்யும்.
பீட்ரூட், தக்காளி போன்றவற்றில் இனிப்பு பச்சடி செய்யும்போது வெறும் சர்க்கரையோ, வெறும் வெல்லமோ போட்டுச் செய்தால் இனிப்பு வராது. எனவே 2/3 பாகம் வெல்லமும், மீதி சர்க்கரையும் சேர்த்தால் சுவையும் கூடும், செலவும் குறையும். இதை தோசை, இட்லி, சப்பாத்தி, பூரி போன்ற பலகாரங்களுக்கு தொட்டுக் கொள்ளலாம்.
நாம் வழக்கமாக செய்யும் பருப்பு அடையில் இரண்டு உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துப் போட்டுக் கலந்து அடை செய்தால் அடை மிருதுவாக இருப்பதுடன் சுவை மிகுந்தும் இருக்கும்.
இட்லிமாவு அரைத்தவுடன் அதில் மிளகு, சீரகம் போட்டு, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, உப்பு, தேவையான அளவு போட்டு எண்ணெயில் போண்டா போல செய்து எடுக்கலாம்.
புளி அவல் செய்யும்போது புளியைக் கரைத்து செய்வதற்கு பதில், தேவையான அளவு நீரில் ஊறவைத்தபின் ரெடிமிக்ஸ் புளியோதரைப் பவுடரை வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் போட்டு, ஊறவைத்த அவலையும் சேர்த்துக் கலக்கினால் சூப்பர் டேஸ்டாக இருக்கும்.
வரமிளகாய், புளி, உப்புடன் வெங்காய வடகத்தை சிறிது எண்ணெயில் வதக்கி இதனுடன் சேர்த்து அரைக்க சுவையான வடாம் துவையல் ரெடி.
கூட்டு, கறி இவற்றை ஒன்றாக வதக்கி மைதாமாவின் நடுவில் வைத்து சுவையான வெஜிடபிள் போளி செய்யலாம்.
மோர்மிளகாயை வறுப்பதற்கு வாணலியைப் பயன் படுத்தாமல் தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு வறுத்தால் எண்ணெய் கொஞ்சமாகத்தான் தேவை வரும்.
மாகாளிக்கிழங்கு ஊறுகாயை சிறிது தேங்காய்த்துருவல் வைத்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றினால் சூப்பர் சுவையில் உப்பு உறைப்பான சட்னி தயார்.