

எந்தவித சிப்ஸ் பொரிப்பதற்கு எண்ணைக் காயவைக்கும் போது அதனுடன் நெய் அல்லது தேங்காய் எண்ணையை ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்து பின் பொரிக்க சுவை நன்றாக இருக்கும்.
சப்பாத்தி செய்யும்போது உடனே சாப்பிடுவதற்கு எனில் ஸ்டஃப்டு சப்பாத்தியாக போடலாம். பள்ளி, அலுவலகத்திற்கு எனில் சப்பாத்தி மேல் வெண்ணெய் அல்லது நெய் தடவி மாவைமூடி பின் அதை சப்பாத்தியாக போட சாஃப்ட் ஆக இருக்கும்.
பில்டர் காஃபி போடுவதுபோல டீத்தூள் போட்டு டீ டிகாஷன் தயாரிக்கலாம்.காபி மேக்கரிலும் டீடிகாஷன் தயாரிக்கலாம்.
ஹெர்பல் டீ, செம்பருத்தி, மசாலா டீ என எந்தவித டீ தயாரிக்கும் போதும் பால் சேர்க்காமல் அருந்த அசல் சுவையோடு நன்றாக இருக்கும்.
டீ பேக்ஐ டிப் பண்ணுவது போல, ஒரு சின்ன முடிச்சாக ஹெர்பல், மசாலா பொருட்களை போட்டு, பின் பாலிலோ, தண்ணீரிலோ கொதிக்கவைக்க, கொதித்ததும் தனியாக எடுத்துவிட்டு பின் அருந்த தெளிவாக, சுவையாக இருக்கும்.
சமையலை விரைவாக, சுலபமாக முடிக்க வேண்டுமெனில் காயை கட்டரிலோ, ஸ்லைஸரிலோ துருவி வேகவிட, நறுக்கவும், சமைக்கவும் எளிதாக இருக்கும்.
தணலில் வேப்பிலை பொடி,நொச்சி இலை பொடியை சாம்பிராணி புகை போடுவது போல போட பூச்சிகள், கொசுக்கள் போன்றவை வராது.
தட்டைப் பயறு, மொச்சை போன்ற தானியங்களில் குழம்பு வைக்கும்போது கத்தரிக்காய், முருங்கைக்காய் போன்ற காய்களை சேர்த்து செய்ய சுவை சூப்பராக இருக்கும்.
பிரியாணி மட்டுமன்றி புலாவ், தக்காளி சாதம் நெய் சாதம் போன்றவற்றையும் தம் போட்டு தயாரிக்க சுவை சூப்பராக இருக்கும்.
சிகப்பு முட்டைக்கோஸ், புரோக்கோலி போன்ற கலர் காய்கறிகளை சமைக்கையில் தேங்காய் துருவல் அதிகமாக சேர்த்து செய்ய பார்க்கவும், சுவைக்கவும் நன்றாக இருக்கும்.
அப்பளம் பொரிக்கையில் அப்பளத்தின்மீது நெய் தடவி விட்டு அதன் மேல் நூடுல்ஸ் பொடியையோ, பெப்பர் பொடியையோ வேறு பொடியையோ தடவி பொரிக்க வித்தியாசமாக, சுவையோடு நன்றாக இருக்கும்.
பனங்கிழங்கை சுட்டு வெந்ததும் இனிப்பு புட்டாக தேங்காய் துருவல் சேர்த்து கலந்து செய்ய சுவை நன்றாக இருக்கும்.
சுண்டல், முளை கட்டிய தானியங்கள் வேகவிட்டு சுண்டல் பண்ணும் போது சோயா உருண்டைகளை சேர்த்து செய்ய சுவையாக இருக்கும்.
கீரை வகைகளை பொரியல், கடையல், கூட்டு என செய்வது போல் கீரையைக் கொண்டு சாலட்,ஜுஸ் என தயாரித்து பெப்பரோடு சேர்த்து கலந்து சுவைக்க நன்றாக இருக்கும்.
திருவாதிரை களி அரிசி வரையில் செய்வதுபோல் கோதுமை ரவை, சிறுதானிய வரையிலும் செய்ய சுவை சூப்பராக இருக்கும்.
இவை யாவும் நான் வழக்கமாக வீட்டில் செய்து கொடுத்து சுவைத்தது ட்ரை பண்ணிப்பாருங்களேன்.