
தமிழ்நாட்டின் பிரதான உணவாக இட்லி, தோசை பார்க்கப்படுகிறது. எளிமையான உணவாகவும், அடிக்கடி செய்யப்படும் உணவாகவும் இந்த டிஷ் இடம்பெறுகிறது. பலரது வீடுகளில் வாரத்தின் 5 நாட்களும் தோசை, இட்லி தான். சிலர் 7 நாட்களும் இதை உண்பதை காணலாம். சட்னி, சாம்பார் என சைட் டிஷ் மட்டுமே மாற்றப்படும்.
பொதுவாகவே ஒரு வீட்டில் உணவு செய்யும் போது அதிகமாகவே செய்வார்கள். ஏனென்றால் வயிற்றுக்கு பத்தாமல் போய்விடக்கூடாது என்பதற்காக தான். இதனால் சிலர் வீடுகளில் தோசை, இட்லி மிஞ்சும். பெரும்பாலோனோர் தோசையை தேவைக்கேற்ப ஊற்றி சுடச்சுட சாப்பிடுவார்கள். இன்னும் சிலர் ஹார்ட் பாக்ஸில் ஊற்றி வைத்து மொத்தமாக சாப்பிடுவார்கள். இப்படி இருக்கையில் தோசை மிஞ்ச வாய்ப்புள்ளது. பொதுவாக வீடுகளில் இட்லி மிஞ்சினால் இட்லி உப்புமா, சில்லி இட்லி செய்வார்கள். சூர்யா வம்சம் படத்திற்கு பிறகு இட்லி உப்மா மிகவும் பேமஸ் என்றே சொல்லலாம். ஆனால் தோசை சில மணி நேரத்திற்குள் சாப்பிடவில்லை என்றால் காய்ந்துவிடும். இதனால் பலரும் தோசை மிஞ்சினால் குப்பை தொட்டியில் தான் போடுவார்கள்.
ஆனால் இனி அந்த கவலை வேண்டாம். மிஞ்சிய தோசையை வைத்து மொறுமொறுவென வடகம் பொறிக்கலாம் என்றால் நம்ப முடியுமா. வாங்க அதன் ரெசிபியை பார்க்கலாம்.
தோசையின் நன்மைகள்:
தோசை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். தோசையில் நல்ல அளவு புரோபயாடிக் நுண்ணுயிரிகள் உள்ளன. இது செரிமானத்தை மேம்படுத்தவும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. ஏனெனில், தோசையில் உள்ள ஹை புரோபயாடிக்குகள் நமது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கும் என்பதால் வயிறு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
அரிசி மற்றும் உளுத்தம் பருப்பில் செய்யப்பட்ட தோசை மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடும். இது செரிமானத்திற்கு தேவையான நார்ச்சத்தை உடலுக்கு வழங்குகிறது. அடிக்கடி சோர்வாகவும் பலவீனமாகவும் உணரும் மக்களுக்கும் தோசை பயனுள்ளதாக இருக்கும். இதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது.
உளுத்தம்பருப்பில் நல்ல அளவு கால்சியம் உள்ளது. எனவே, தோசை எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது.
தோசை குறைந்த கிளைசெமிக் குறியீட்டில் கணக்கிடப்படுகிறது, இது உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கும் தோசையை உட்கொள்வது நன்மை பயக்கும்.
செய்முறை:
மிஞ்சிய தோசையை வடகம் அளவிற்கு சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்துவிடவேண்டும். இது மறுநாள் காலை தாளிப்பு வடகம் போல் காய்ந்து இருக்கும். ஒரு வானலியில் தேவையான எண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு இந்த தோசை துண்டுகளை போட்டு பொரித்தெடுத்தால் மொறுமொறுவென வடகம் தயாராகிவிடும். நீங்கள் சாப்பாட்டிற்கு வைத்து இதை சாப்பிடலாம். அட்டகாசமான டேஸ்டில் இருக்கும்.