உயிர் வாழ உணவு மிகவும் அவசியம். அந்த உணவை நாமே சமைத்து சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமாகவும் வாழலாம். பணமும் கணிசமாக மிச்சமாகும். வேலை நிமித்தமாக நகரங்களில் தனியாக அறை எடுத்து தங்கி வாழ்பவர்கள் ஓய்வு நேரங்களில் தாங்களே சமைக்கக் கற்றுக் கொண்டு சமைக்கலாம். சமைப்பது என்பது மிகவும் எளிமையாக ஒரு கலை. மனதிற்கு மகிழ்ச்சி தரும் கலை.
சமைக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் மட்டும் போதும். புதிதாக சமைக்கத் தொடங்கும் போது தொடக்கத்தில் சில சிக்கல்கள் வரும். சரியாகவும் வராது. ஆனால் மனம்தளராமல் தினந்தோறும் சமைப்பதன் மூலம் குறுகிய காலத்திலேயே சுவையாக பிரமாதமாக சமைக்கும் அளவிற்கு நிபுணத்துவம் பெற்று விடலாம். இனி வரும் பதிவுகளில் எளிமையாக சுவையாக சமைக்கும் ரெசிபிகளைப் பார்க்கலாம். இன்றைய பதிவில் அரைமணி நேரத்தில் சுவையான வடகறி செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் வடகறி என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒரு துணை உணவு. நாஷ்டா அதாவது டிபனுக்குத் தொட்டுக் கொள்ள ஒரு சுவையான உணவு வடகறி. வடகறி முதன்முதலில் சென்னையில் சைதாப்பேட்டையில் கண்டுபிடிக்கப்பட்டது என்பது ஒரு முக்கியமான தகவல். தற்போது சென்னை, செங்கற்பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல ஓட்டல்களில் வடகறி கிடைக்கிறது. இட்லி, தோசை, கல்தோசை, சப்பாத்தி, பரோட்டா முதலானவற்றுடன் வடகறியைச் சேர்த்து சாப்பிடும் போது கிடைக்கும் சுவை அலாதியானது.
வடகறியை செய்வது மிகவும் கடினம் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வடகறி என்பது மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு உணவு என்பதை இந்த பதிவின் மூலம் நீங்கள் தெரிந்துக் கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் மசால்வடை கிடைக்காத இடங்களே இல்லை என்று சொல்லலாம். மிகவும் பிரபலமான ஒரு உணவு மசால்வடை.
உங்கள் பகுதியில் கடைகளில் கிடைக்கும் மசால்வடை மூன்றை வாங்கிக் கொள்ளுங்கள்.
இரண்டு வெங்காயம், இரண்டு தக்காளி, நான்கு பூண்டுப்பல் இவற்றை எடுத்து பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். கடுகு, சோம்பு, மூன்று கிராம்பு, சிறிதளவு பட்டை, சிறு பிரிஞ்சி இலை, பச்சைமிளகாய் இரண்டு, இஞ்சி சிறிதளவு, மிளகாய்த் தூள் சிறிதளவு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், உப்பு, கறிவேப்பிலை, கொத்துமல்லி முதலானவற்றை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு அகலமான பாத்திரத்தில் இரண்டு கரண்டி எண்ணெயை விட்டு காய்ந்ததும், அதில் கடுகு, சோம்பு, கிராம்பு, பட்டை, பிரிஞ்சி இலை முதலானவற்றைப் போட்டு வதக்கிக் கொள்ளுங்கள்.
பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, பூண்டு முதலானவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு வதக்கி பின்பு பச்சைமிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி, ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் போட்டு நன்றாக வதக்கி மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாகக் கொதிக்க வையுங்கள்.
தண்ணீர் நன்றாக கொதித்த பின்பு வாங்கி வைத்துள்ள மசால்வடையை உதிர்த்து அதில் போட்டு நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
சிறிது நேரம் கழித்து அதில் உப்பு, கறிவேப்பிலை மற்றும் பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்துமல்லி முதலானவற்றைப் போட்டு நன்றாக சிறிது நேரம் கொதிக்க வைத்து தண்ணீர் சுண்டியதும் இறக்கி விடுங்கள்.
இப்போது வடகறி ரெடி. இதைச் செய்ய அதிகபட்சம் அரைமணி நேரம்தான் ஆகும்.
சப்பாத்தி, கல் தோசை, இட்லி, பரோட்டா முதலான டிபன்களோடு தொட்டுக் கொண்டு சாப்பிட வடகறி பிரமாதமாக இருக்கும். ரசித்து ருசித்து சாப்பிடுங்கள்.