
வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள், நமது உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பல காய்கறிகள், பழங்கள் கடைகளில் பார்ப்பதற்கு ஃப்ரெஷாக இருந்தாலும், அதில் கண்ணுக்கு தெரியாத கிருமிகள் நிறைய இருக்கும். இரசாயன பூச்சி கொல்லி மருந்துகளை தெளிப்பது மூலம் மனிதர்களுக்கு நுரையீரல் நோய்கள், கண் எரிச்சல், வாந்தி, நரம்பியல் சம்பந்தமான நோய்கள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவு, கருவில் உள்ள குழந்தைக்கு பாதிப்பு, புற்றுநோய் ஆபத்து போன்றவை ஏற்படுகிறது என்கிறார்கள் உயிரியல் ஆராய்ச்சியாளர்கள்.
இந்த கிருமிகள் சமையலின் கொதிநிலையில், இறந்துவிடும் என்ற பொதுக்கருத்து நிலவினாலும் நீரில் நன்கு கழுவி சுத்தம் செய்த பின்னர் அவற்றை உபயோகிப்பதே ஆரோக்கியமானது என்று கூறுகிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள். ஆனால் அதை கழுவதிலும் சில கவனம் தேவைப்படுகிறது. அவை என்னென்ன? பார்க்கலாம்...
காய்கறிகளையும் பழங்களையும் பாத்திரத்தில் கழுவுவதை விட, ஓடும் நீரில் கழுவுவது சிறந்தது. ஓடும் நீரிலேயே கிருமிகள் எளிதில் சென்றுவிடும்.சாதாரண நீரைவிடவும் வெந்நீரில் கழுவுவது சிறந்தது. இப்படி கழுவிய பின்னர் துடைத்தபின், சேமித்து வைக்கலாம். ஈரத்தோடு வைக்கும்போது அதில் பாக்டீரியாக்கள் அதிகளவில் பெருகுவதற்கு வாய்ப்புண்டு. கீரை வகைகளை சுத்தம் செய்யும்போது உப்பு, மஞ்சள்தூள் கலந்த நீரில் அலசலாம். கீரைகள் சமைக்கும் போது அதில் நீர் சேர்க்க வேண்டியது இல்லை.அவற்றை மூடி வைத்தே சமைக்க வேண்டும்.
மற்ற காய்கறிகளைப்போல காளான்களை கழுவக்கூடாது. ஏனெனில் நேரடியாக தண்ணீரில் கழுவது அவற்றை சுத்தம் செய்வதை கடினமாக்குகிறது. எனவே, ஈரமான துணியால் துடைப்பதே சிறந்த வழி. தடிமனான தோல்களைக் கொண்ட காய்கறிகளையும் பழங்களையும் அதற்கென உள்ள ஸ்கரப்பர்களை பயன்படுத்தி துடைப்பது நல்லது.
காலிஃபிளவரை ஊறவைக்கப் பயன்படும் தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்துக் கொள்வது இந்தியப் பழக்கம்; இந்த இரண்டு பொருட்களும் ஒரு பயனுள்ள ஆண்டிமைக்ரோபியல் விளைவைக் கொண்டுள்ளன. கேரட், வெள்ளரி, ஆப்பிள் போன்றவற்றை தோலுரித்து சாப்பிடக்கூடாது. ஆப்பிள், வெள்ளரி போன்றவற்றின் பேற்பரப்பில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காகவும், பாதுகாக்கும் வகையிலும் மேற்பரப்பில் மெழுகுப்பொருளின் அடுக்குகள் இருக்கும். ஆகவே இதை வெந்நீரில் கழிவ வேண்டும். அப்படி செய்தால் மேற்பூச்சு நீங்கிவிடும்.
காய்கறிகளை உப்பு நீரில் கழுவுவதும் சிறந்தது. 98 சதவீதம் நீர், 2 சதவீதம் உப்பு கலந்து 15 நிமிடங்கள் ஊறவைத்துவிட்டு கழுவி பயன்படுத்த வேண்டும். சேமிக்க நினைப்பவர்கள், நல்ல துணியால் அதை துடைத்துவிட்டு சேமிக்கவேண்டும். இதன் மூலம் காய்கறிகளில் படிந்திருக்கும் 80 சதவீத பூச்சிக்கொல்லிகள் நீங்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
சமையலுக்கு பிரஷான காய்கறிகளை பயன் படுத்துங்கள். அவற்றை சமைக்கும்போது எலுமிச்சை, தயிர் , வினிகர் என ஏதேனும் ஒன்றை உடன் சேர்த்து சமையுங்கள் அதன் மூலம் சமைக்கும்போது வைட்டமின் சி வீணாவதை தவிர்க்கலாம், சமையலுக்கு காய்கறிகளை மிகவும் பொடிப்பொடியாக வெட்டாதீர்கள். இதனால் சத்து குறைவாக கிடைக்கும். வெட்டிய காய்கறிகளை நீண்ட நேரம் சமைக்காமல் வைக்காதீர்கள். சமைக்கும்போது சோடா உப்பு சேர்த்து சமைக்காதீர்கள் அது காய்கறிகளில் உள்ள வைட்டமின்" பி" யை அழித்துவிடும்.
முடிந்தளவுக்கு குறைந்த அளவு தண்ணீரில் காய்கறிகளை வேகவைக்கவும். மீதப்படும் நீரை சூப் அல்லது பருப்புகளை வேகவைக்கப் பயன்படுத்தினால் பருப்பின் சுவையும், சத்தும் கூடும். காய்கறிகளை அதிக நேரம் வேக வைக்காதீர்கள். காய்கறிகளின் தோல்களை உரிக்காமல் பயன்படுத்துங்கள். அதில்தான் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளது. பச்சை காய்கறிகளை விரைவாக சமைத்தால் அதன் சத்தும் நிறமும் குறையாது. காளான் கூட்டு வைத்தால் அதில் அதிக நீர் சேர்க்க வேண்டியதில்லை அதில் இருக்கும் நீர் போதுமானது. கொட்டை மற்றும் பருப்புகளை சமைப்பதாக இருந்தால் அவற்றை இரவில் நீரில் ஊறவைத்து மறுநாள் சமைத்தால் அவற்றின் நச்சுப் பொருட்கள் வெளியே போய்விடும்.