

கொள்ளு மசியல் தேவை:
கொள்ளு - 200 கிராம்
சீரகம் - 1 டீஸ்பூன்
தனியா - 1 டீஸ்பூன்
தக்காளி - 2
காய்ந்த மிளகாய் - 4
பூண்டு - 5 பல்
சின்ன வெங்காயம் - 10
புளி - கோலி குண்டு அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கொள்ளு போட்டு லேசாக வறுத்து இறக்கி, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி 1 மணிநேரம் ஊறவைக்க வேண்டும்.
பின்னர் கொள்ளுவை கழுவி, குக்கரில் போட்டு, அடுப்பில் வைத்து, 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 6-7 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக்கொள்ளவும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், மல்லி, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து வதக்கி, பின் அதில் வேகவைத்துள்ள கொள்ளு சேர்த்து, கொத்தமல்லி தூவி 2 நிமிடம் நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்கவேண்டும். பிறகு அதனை மிக்ஸியில் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து, முக்கால் பதத்தில் அரைத்தால், கொள்ளு மசியல் ரெடி.
வாழைப்பூ மசியல் தேவை:
வாழைப்பூ - ஒரு கப் (நறுக்கியது)
துவரம்பருப்பு - கால் கப்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
புளி - நெல்லிக்காய் அளவு
எண்ணெய் - தேவைக்கேற்ப
கடுகு - கால் டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
பச்சைமிளகாய் - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
புளியை ஒரு கப் தண்ணீரில் கரைக்கவும். பின் இந்த புளித் தண்ணீரில் உப்பு போட்டு, வாழைப்பூவை சேர்த்து வேகவைக்கவும். அதன்பின் துவரம்பருப்பில் மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் குழைய வேகவிடவும்.
வாழைப்பூ வெந்தவுடன் அதில் வெந்த துவரம்பருப்பை அதில் சேர்க்கவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள், சிறிதளவு துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய், பச்சைமிளகாய், கறிவேப்பிலை இவற்றைத் தாளித்து வாழைப்பூ கலவையில் சேர்த்து நன்றாகக் கொதித்ததும் இறக்கவும். இப்போது சுவையான வாழைப்பூ மசியல் தயார். இதனை சாதத்தில் பிசைந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
வெந்தய மசியல் தேவை:
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
கடலைப்பருப்பு– அரை கப்
துவரம்பருப்பு– அரை கப்
உளுத்தம்பருப்பு கலவை – அரை கப்
காய்ந்த மிளகாய் – 6
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
புளி – 50 கிராம்
கடுகு– கால் டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு, நல்லெண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், கொடுக்கப்பட்டுள்ள மூன்று வகை பருப்புகள், வெந்தயம், பெருங்காயத்தூள் போட்டு சிவக்க வறுக்கவும். பிறகு, வறுத்தவற்றுடன் மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் குழைய வேகவிடவும்.
ஆவி போனதும் குக்கர் மூடியைத்திறந்து, கரைத்து வடிகட்டிய புளிக் கரைசல், உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு கறிவேப்பிலையைப் போட்டு இறக்கி, பரிமாறவும். சுவையான வெந்தய மசியல் தயார்.