
அல்வா செய்யும்போது மிக கெட்டியாகும் வரை கிளறிக்கொண்டே இருக்கக்கூடாது. அடைமாவு பதத்தில் எடுத்தால், ஆறும்போது அல்வா சரியான பதத்தில் இருக்கும்.
பருப்பு பாயசம் செய்யும்போது, பால் திரிந்து போகாமல் இருக்க பருப்பை நன்றாக வேக வைத்துக்கொண்டு அதில், தண்ணீரில் நன்றாகக் கரைத்த வெல்லத்தை ஊற்றிக் கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதிவந்தவுடன் இறக்கிய பிறகு அதில் காய்ச்சிய பசும்பால் சேர்க்க வேண்டும். இவ்வாறு செய்யும்போது பால் திரிந்து போகாது.
வெஜிடபிள் பிரியாணி செய்யும்போது, பெரிய வெங்காயத்தை பிரியாணி வேகும்போது சேர்க்காமல், பிரியாணி முழுமையாக வெந்ததும், வெங்காயத்தை மெலிதாக நறுக்கி, எண்ணெயில் வறுத்துச் சேர்த்துக்கலந்தால், சுவை அதிகமாக இருக்கும்.
உருளைக்கிழங்கை அரைமணி நேரம் உப்பு நீரில் ஊற வைத்து, வேகவைத்தால் சீக்கிரமாக வெந்துவிடும்.
எலுமிச்சைப் பழம் சாதம் செய்யும்போது, சாதம் சூடாக இருக்கக் கூடாது. அப்படிச் செய்தால், கொஞ்சம் கசப்புத்தன்மையுடையதாக மாறிவிடும். சாதம் ஒரளவு ஆறிய பின் செய்தால் தான் எலுமிச்சை சாதத்தின் சுவையும் மணமும் கூடும். கசப்புத்தன்மையும் இருக்காது.
துவரம் பருப்பை வேகவைக்கும்போது சிறிய தேங்காய்த் துண்டை நறுக்கிப்போட்டால், பருப்பு விரைவில் வெந்து பக்குவமாக இருக்கும்.
கறிவேப்பிலையை வாழை இலையில் மூடி வைத்தால் சீக்கிரம் வாடாமல் இருக்கும்.
கண்ணாடிப் பாத்திரங்களை சுண்ணாம்பு கரைத்த நீரில் கழுவி எடுத்தால் கறைகள் அகன்றுவிடும். புதிது போலவும் இருக்கும்.
தட்டை மாவில் வேர்க்கடலை, எள், தேங்காய், கறிவேப்பிலை, உப்பு, காரம் சேர்த்துப் பிசைந்து தட்டியதும் ஒரு சில இடங்களில் ஊசியால் குத்தி விட்டு எண்ணெயில் போடவும்.இதனால் எண்ணெய் எல்லா இடங்களிளிலும் சீராகப் பரவி, தட்டை நன்றாக வெந்து கரகரப்பாக இருக்கும்.
சாம்பார் பொடிக்கு அரைக்கும் போது, அத்துடன் கொஞ்சம் கல் உப்பு போட்டு அரைத்தால் பூச்சிகள் அண்டாது. சாம்பார் செய்யும்போது மறக்காமல் உப்பின் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
ஊறுகாய் ஜாடியில் ஃ பாயில் பேப்பரை வைத்துப் பிறகு மூடினால், ஊறுகாயில் பூஞ்சைக்காளான் படியாது.