
இடியாப்பத்திற்கு இனிப்பான தேங்காய் பாலுக்கு மாற்றாக முதன்மையாக தேர்வாக வெஜிடபிள் பாயா இருக்கிறது. இனிப்பு சுவை பிடிக்காதவர்கள், மென்மையான காரச் சுவையும் , பலவித காய்கறிகளின் மனமும் கொண்ட பாயாவை இடியாப்பத்துடன் சேர்த்து சாப்பிட விரும்புவார்கள்.இது இடியாப்பத்திற்கு மட்டுமல்ல ,ஆப்பம் பரோட்டா, சப்பாத்தி, தோசைக்கு கூட தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும். பாயாவில் பலவகைகள் இருந்தாலும், ருசியான வெஜிடபிள் பாயாவை தமிழ்நாட்டு முறையில் செய்வது எப்படி என்பதை இங்கு பார்ப்போம்.
வெஜிடபிள் பாயாவிற்கு தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் - 3
தக்காளி - 150கிராம்
உருளைக் கிழங்கு (வேக வைத்தது) - 100 கிராம்
பச்சை மிளகாய் - 3 கீறியது
இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 1கப்
பட்டை - 1
ஏலக்காய் - 2
கிராம்பு - 2
மிளகு - 1 தேக்கரண்டி
சோம்பு -1 தேக்கரண்டி
கசகசா - தேக்கரண்டி
முந்திரி - 6
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
நெய் - 1/2 மேஜை கரண்டி
எண்ணெய் - 1/2 மேஜை கரண்டி
புதினா&மல்லித்தழை - 1 கைப்பிடி
உப்பு - தேவையான அளவு
வெஜிடபிள் பாயா செய்முறை:
சூடான வாணலியில் 1தேக்கரண்டி நெய்யை விட்டு சோம்பு , கசகசா, முந்திரி, மிளகு ஆகியவற்றை இட்டு மிதமான தீயில் வறுக்கவும். வறுபடும் வரை கரண்டியால் கிளறிக் கொண்டே இருக்கவும். நெய்யில் மசாலா மணம் வரத் தொடங்கும்.
இப்போது அதனுடன் தேங்காய் துருவல் மற்றும் நறுக்கிய மல்லித்தழை மற்றும் புதினா இலைகளில் பாதியளவு மட்டும் போட்டு ஒரு நிமிடம் மட்டும் வதக்கவும். அதன் பின்னர் அடுப்பை அனைத்து விட்டு , வாணலியில் உள்ள பொருட்களை ஆற விடவும்.
சூடு ஆறியதும் வாணலியில் வதக்கிய பொருட்களை மிக்ஸியில் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். தற்போது வாணலியில் 1 தேக்கரண்டி நெய்யை விட்டு பட்டை , கிராம்பு , ஏலக்காய் ஆகியவற்றை லேசாக மணம் வரும் வரை வதக்கவும்.
அதன் பின்னர் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தை நிறம் மாறும் வரை வதக்கவும் அதனுடன் கீறிய பச்சை மிளகாயையும் சேர்த்து வதக்கவும்,
பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளியையும் இட்டு வதக்கவும்.
வேக வைத்த உருளைக் கிழங்கை நறுக்கி இந்த கலவையில் சேர்த்து இரண்டு நிமிடங்கள் பிரட்டி விடவும்.
இப்போது மஞ்சள் தூள் , மல்லித்தூள் , இஞ்சி விழுது ஆகியவற்றை சேர்க்கவும்.
இப்போது அரைத்து வைத்த கலவையை வாணலியில் சேர்த்து மிதமான தீயில் இரண்டு நிமிடங்கள் கிளறி விட்டு அதனுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து , கரம் மசாலாவையும் சேர்த்து 5 நிமிடங்கள் வேக வைக்கவும்.
தேவையான அளவு உப்பை சேர்த்துக் கொள்ளவும், வெஜிடபிள் பாயா தயாராகும் தருணம் வந்ததும் , அதில் ஒரு தேக்கரண்டி நெய்யை மேலே விட்டு, மீதமுள்ள நறுக்கிய புதினா , கொத்தமல்லி இலைகள் தூவி, அடுப்பை அணைத்து விட்டு வாணலியின் மீது தட்டை போட்டு 5 நிமிடங்கள் மூடி விடவும் .
சுவையான வெஜிடபிள் பாயா தயார். இதில் உருளைக் கிழங்கிற்கு பதில் விருப்பத்திற்கு ஏற்ப மீல்மேக்கரை பயன்படுத்திக் கொள்ளலாம். காரத்திற்கு ஏற்ப ஒரு பச்சை மிளகாயை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.