
விநாயகர் சதுர்த்தி என்பது இந்துக்களின் முக்கியமான விழாக்களில் ஒன்றாகும். இது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது.
விநாயகர் சதுர்த்திக்கு செய்யப்படும் முக்கிய ரெசிபிக்களில் ஒன்று கொழுக்கட்டைை. பூரண கொழுக்கட்டை, பிடி கொழுக்கட்டை, பால் கொழுக்கட்டை, காரக்கொழுக்கட்டை, எள்ளு கொழுக்கட்டை என கொழுக்கட்டைகள் நிறைய உள்ளன. அத்துடன் எள்ளுருண்டை, பொரி உருண்டை, பாயாசம், வடை போன்றவையும் செய்யப்படுவதுண்டு.
பூரண கொழுக்கட்டை:
அரிசி மாவு 1 கப்
தேங்காய் 3/4 கப்
வெல்லம் 3/4 கப்
ஏலக்காய் தூள் 1/2 ஸ்பூன்
தேங்காய்த் துருவலை வாணலியில் போட்டு லேசாக வதங்கியதும், அதில் பொடித்த வெல்லம் சேர்த்து சுருளக் கிளறவும். தண்ணீர் விடத் தேவையில்லை. அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கிளற வெல்லம் இளகி நன்கு கிளறி வரும். நன்கு சுருளக் கிளறியதும் ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து இறக்கவும். தேங்காய் பூரணம் தயார்.
எள் பூரணத்திற்கு எள்ளை வெறும் வாணலியில் வெடிக்க விட்டு ஒன்றிரண்டாக பொடித்துக் கொண்டு வெல்லத்துடன் கலந்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றினால் போதும் எள் பூரணம் தயார்.
மேல்மாவிற்கு:
வாணலியில் ஒரு கப் தண்ணீர் விட்டு ஒரு சிமிட்டு உப்பு, 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு கொதிக்கவிடவும். நடுக்கொதி வந்ததும் அரிசி மாவை சேர்த்துக் கிளறி இறக்கவும். சூடு ஆறியதும் கட்டிகள் இல்லாமல் கையால் நன்கு பிசைந்து சொப்புகள் செய்து அதில் பூரணத்தை ஒரு ஸ்பூன் அளவில் வைத்து, பூரணம் வெளியே வராமல் மூடி, இட்லி தட்டில் வைத்து ஆவியில் பத்து நிமிடங்கள் வேகவிட்டு எடுக்க கொழுக்கட்டை தயார்.
லட்டு:
விநாயகருக்கு மிகவும் பிடித்தமான இனிப்புகளில் லட்டும் ஒன்று.
கடலை மாவு 1 கப்
சர்க்கரை 1 கப்
நெய் 1/2 கப்
ஏலக்காய் தூள் 1/2 ஸ்பூன்
முந்திரி, திராட்சை, கல்கண்டு - சிறிதளவு
கடலைமாவை வாணலியில் போட்டு நெய்விட்டு பொன்னிறமாக வாசம் வரும் வரை வறுக்கவும். சர்க்கரை மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும். பின்பு நெய்யை சிறிது அடுப்பில் வைத்து இளக்கி, அதில் விட்டுக் கலந்து, வறுத்து பொடித்த முந்திரி, திராட்சை சேர்த்து, சிறிதளவு கல்கண்டும் போட்டு விரும்பிய அளவில் லட்டுகளாக பிடிக்கவும்.
சுண்டல்:
விநாயகர் சதுர்த்தி அன்று பொதுவாக கொண்டைக்கடலை சுண்டல் செய்து நிவேதனம் செய்யப்படும்.
கொண்டைக்கடலை 1 கப்
உப்பு தேவையானது
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
பெருங்காயத்தூள் 1/4 ஸ்பூன்
தேங்காய்த் துருவல் 2 ஸ்பூன் கறிவேப்பிலை சிறிது
சர்க்கரை 1/2 ஸ்பூன் ருசியை கூட்ட
தாளிக்க:
கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல் 1, நல்லெண்ணெய் 2 ஸ்பூன்
கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊறவைத்து மறுநாள் குக்கரில் ஊறிய கொண்டை கடலை, தேவையான உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து இரண்டு விசில் விட்டு வேகவைத்து எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கிள்ளிய மிளகாய் வற்றல், சிறிது கருவேப்பிலை சேர்த்து கடுகு பொரிந்ததும் வேகவைத்த கொண்டைக்கடலையை சேர்த்துக் கிளறவும். அதில் பெருங்காயத்தூள், தேங்காய்த் துருவல், கடைசியாக சிறிது சர்க்கரை தூவி கலந்து இறக்க விநாயகர் சதுர்த்திக்கு தேவையான கொண்டைக்கடலை சுண்டல் தயார்.
வெற்றிலை, பாக்கு, பழங்களுடன் செய்து வைத்துள்ள பிரசாதங்களையும் சேர்த்து விநாயகருக்கு படைக்க நம் விக்னங்கள் எல்லாம் அகன்று வாழ்வில் சந்தோஷம் என்றும் நிலைக்கும்.