
காலிஃப்ளவர் சீசன் இது. இந்த சமயத்தில் காலிஃப்ளவரை வாங்கி அடிக்கடி குருமா, மசாலா கறி, மசால் தோசை, காலிபிளவர் வறுவல், பொடித்தூவல், ரோஸ்ட் என செய்து சாப்பிடலாம்.
மசால் தோசைக்கு உருளைக்கிழங்கு வைத்து சாப்பிட்டு சலிப்பாக இருக்கிறதா? காலிபிளவர் மசால் தோசை செய்யலாம் வாருங்கள்.
காலிஃப்ளவர் மசால் தோசை:
தோசை மாவு 2 கப்
காலிபிளவர் 1 கப்
வெங்காயம் 1
தக்காளி 1
பூண்டு 5 பற்கள்
கொத்தமல்லி சிறிது
காரப்பொடி 1 ஸ்பூன்
கரம் மசாலா 1/2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் 1
உப்பு தேவையானது
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
காலிஃப்ளவர் பூக்களை சுத்தம் செய்து கொதிக்கும் நீரில் 15 நிமிடங்கள் போட்டு எடுக்கவும். பிறகு தண்ணீரை வடித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ரெண்டு ஸ்பூன் விட்டு கடுகு, சீரகம் போட்டு கடுகு பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நிறம் மாறியதும் தக்காளி, பொடியாக நறுக்கிய பூண்டு பற்கள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அத்துடன் நறுக்கி வைத்துள்ள காலிபிளவர் துண்டுகளையும் சேர்த்து தேவையான உப்பு, மஞ்சள் தூள் போட்டு கரம் மசாலா, காரப்பொடி சேர்த்து வதக்கவும். நன்கு சுருண்டு வந்ததும் பொடியா நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கவும்.
அடுப்பில் தோசைக் கல்லை வைத்து கல் சூடானதும் தோசை மாவு ஒரு கரண்டி அளவில் விட்டு மெல்லியதாக பரப்பி சுற்றிலும் எண்ணெய் விட்டு மிதமான சூட்டில் வேகவிடவும். வதக்கி வைத்துள்ள காலிபிளவர் மசாலாவை தோசையின் மையத்தில் வைத்து பரவலாக தேய்த்து தோசையை மூடி இருபுறமும் மெதுவாக மடித்து சிறிது நேரம் வேக வைத்து எடுக்கவும். தோசை முழுவதும் மசாலா சமமாக பரவி இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். சூடான காலிபிளவர் மசால் தோசை தயார்.
பூண்டு சட்னி:
பூண்டு ஒரு கைப்பிடி
காய்ந்த மிளகாய் 10
உப்பு தேவையானது
புளி நெல்லிக்காயளவு
இந்த பூண்டு சட்னி செய்ய நான்கு பொருட்களே போதும். பூண்டு, மிளகாயின் காம்பை எடுத்துவிட்டு இரண்டையும் சூடான தண்ணீரில் 15 நிமிடங்கள் நனைத்து வைக்கவும். பிறகு உப்பு, புளி சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்தெடுக்கவும். பூண்டின் தோலை உரிக்கத் தேவையில்லை.
வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு போட்டு பொரிந்ததும் சட்னியில் கொட்டவும். ஐந்தே நிமிடத்தில் ருசியான பூண்டு சட்னி தயார்.