
முருங்கைக் கீரையில் இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், விட்டமின் ஏ, சி, இ மற்றும் பி விட்டமின்கள் நிறைந்துள்ளன. இவை நினைவாற்றலை மேம்படுத்தும்; சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் சிறந்த மூலிகையாகும். இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், எலும்பு ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. இதனை தினமும் சமையலில் பல வடிவங்களில் சமைத்து சேர்க்கலாம்.
முருங்கைக் கீரை பொரியல்:
முருங்கைக்கீரை 2 கப்
தக்காளி 1
வெங்காயம் 1
பச்சை மிளகாய் 2
உப்பு தேவையானது
தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல்
முருங்கைக் கீரையை ஆய்ந்து நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல் 1 கிள்ளிப் போட்டு கடுகு பொரிந்ததும் நறுக்கிய தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து சிறிது வதக்கி, சுத்தம் செய்த முருங்கைக்கீரையும் போட்டு தேவையான உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து ஐந்து நிமிடங்கள் சமைக்க முருங்கைக்கீரை பொரியல் தயார். விருப்பப்பட்டால் தேங்காய் துருவல் சிறிது சேர்க்கலாம்.
முருங்கைக் கீரை துவையல்:
முருங்கைக் கீரை 2 கப்
உளுத்தம் பருப்பு 2 ஸ்பூன்
தேங்காய்த் துருவல் 2 ஸ்பூன்
உப்பு தேவையானது
புளி சிறிய நெல்லிக்காயளவு
மிளகாய் வற்றல் 4
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல் சேர்த்து பொன் கலரில் வறுத்தெடுக்கவும். முருங்கைக் கீரையை சிறிது தண்ணீர் தெளித்து வதக்கி உப்பு, புளி, தேங்காய்த் துருவல் சேர்த்து அரைக்க மிகவும் ருசியான துவையல் தயார். இதனை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். தயிர் சாதத்திற்கும் தொட்டுக் கொள்ளலாம்.
முருங்கைக்கீரை அடை:
முருங்கைக்கீரை 1 கப்
தோசை மாவு (அ) அடை மாவு 3 கப்
முருங்கைக் கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். இதனை தோசை மாவு அல்லது அடை மாவில் கலந்து வார்க்க மிகவும் சத்தான மற்றும் ருசியான முருங்கைக்கீரை அடை அல்லது தோசை தயார். விருப்பப்பட்டால் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி அதனையும் சேர்த்து கலந்து வார்க்கலாம்.
கீரை சாதம்:
முருங்கைக்கீரை 1 கப்
சின்ன வெங்காயம் 10
தக்காளி 1
பூண்டு 4 பற்கள்
காரப்பொடி 1/2 ஸ்பூன்
உப்பு தேவையானது
வடித்த சாதம் 3 கப்
தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம்
முருங்கைக் கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். சின்ன வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சாதத்தை உதிர் உதிராக வடித்து கொள்ளவும்.
வாணலியில் கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு தாளித்து கடுகு பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். அத்துடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள முருங்கைக் கீரையும் சேர்த்து தேவையான உப்பு, காரப்பொடி போட்டு சிறிது தண்ணீர் தெளித்து வதக்கவும்.
அடுப்பை மிதமான சூட்டில் வைத்து இரண்டு நிமிடம் கழித்து நன்கு வதங்கியதும் அடுப்பை அணைத்து விடவும். உதிர் உதிராக வடித்த சாதத்தை அதில் போட்டு கலந்து கிளறி சாப்பிட மிகவும் ருசியான மற்றும் சத்தான கீரை சாதம் தயார். இதற்கு அப்பளம் அல்லது தயிர் பச்சடி தோதாக இருக்கும்.
முருங்கைக் கீரை பொடி:
முருங்கைக்கீரை அதிகம் கிடைக்கும் சமயங்களில் அதனை சிறிது நிழலில் நன்கு காயவைத்து உப்பு சேர்த்து பொடி செய்து வைத்துக் கொண்டால் செய்யும் சாம்பார், ரசம், பொரியல் ஆகியவற்றில் கடைசியாக ஒரு ஸ்பூன் சேர்க்க ருசியும் மணமும் கூடும். சத்தும் கிடைக்கும்.
முருங்கைக்கீரை சூப் செய்யலாம். இட்லிக்கு பொடி தயாரிக்கும் பொழுது முருங்கைக் கீரையையும் காயவைத்து பொடி பண்ணி சேர்க்கலாம். முருங்கைக் கீரையை தண்ணீர்விட்டு கொதிக்க வைத்து அந்த நீரைப் பருக உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை நீக்கிவிடும். முருங்கைக் கீரையை வாரத்திற்கு இரண்டு நாட்களாவது உணவில் சேர்த்து வர உடல் ஆரோக்கியமுடன் திகழும்.