

அல்வா சாப்பிட எல்லோருக்கும் விருப்பம்தான். அதுவும் வீட்டிலேயே செய்து கொடுத்தால் அதில் சுவையும் ஆரோக்கியமும் இரட்டிப்பு ஆகும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் அல்வாதான் இந்த கோதுமை அல்வா. கோதுமையை ஊறவைத்து ஆட்டி பாலெடுத்து செய்யும்போது கிடைக்கும் சுவை இந்த எளிய செய்முறையிலும் கிடைக்கும். செய்வதற்கும் மிகவும் எளிதான ஒன்று…
கோதுமை அல்வா:
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – 1 கப்
பொடித்த வெல்லம் – 2 கப்
தேவைக்கு ஏற்ப மாறுபடும்
ஏலக்காய் தூள் – 1 ஸ்பூன்
முந்திரி பருப்பு – 10
திராட்சை – 10
பாதாம் – 10
வெள்ளை எள் – 1 ஸ்பூன்
நெய் – ½ கப்
ரீஃபைண்ட் ஆயில் – ½ கப்
செய்முறை:
முதலில் அடுப்பில் வாணலியை வைத்து சிறிது நெய் ஊற்றி, அதில் கோதுமை மாவை சேர்த்து நன்கு மணம் வரும் வரை வறுக்கவும். வறுத்த மாவை ஒரு தட்டில் ஆறவிடவும்.
மீண்டும் வாணலியில் சிறிது நெய் ஊற்றி, அதில் முந்திரி, பாதாம் ஆகியவற்றை பொடித்து போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
பிறகு அதே வாணலியில் திராட்சையை சேர்த்து லேசாக வறுத்து எடுக்கவும். அதன் பின் வெள்ளை எள்ளைப் போட்டு வறுத்து எடுக்கவும்.
ஒரு கப்பில் ரீஃபைண்ட் ஆயிலும், நெய்யும் சேர்த்து, ஒரு ஸ்பூனால் நன்கு கலந்து வைக்கவும். அடி கனமுள்ள பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, அதில் பொடித்த வெல்லத்தை சேர்த்து நன்கு கரையவிடவும்.
வெல்லம் நன்றாக கரைந்ததும், வறுத்த கோதுமை மாவை தண்ணீரில் தோசை மாவு பதத்தில் கரைத்துக்கொண்டு, சிறிது சிறிதாக வெல்ல நீரில் சேர்க்கவும்.
பின்னர் நெய் மற்றும் ஆயில் கலவையை சேர்த்து, மிதமான தீயில் வைத்து இடையிடையே கிளறவும். அல்வா நன்கு திரண்டு வரும்போது, ஏலக்காய் தூளைச்சேர்த்து கிளறவும்.
இறுதியாக, பொரித்த முந்திரி, பாதாம், திராட்சை ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி, அடுப்பில் இறக்கி வைக்கவும். பிறகு நெய் தடவிய தட்டில் வெள்ளை எள் தூவி, அல்வாவை பரப்பி, துண்டுகளாக நறுக்கவும்.
சுவையான கோதுமை அல்வா ரெடி!