கல்யாண வீட்டு ஸ்டைலில் இனிப்பு, புளிப்புடன் கூடிய அன்னாசிப்பழ பச்சடி எளிதாக செய்வது எப்படி?

பாரம்பரிய முறையில் மணக்க மணக்க அன்னாசி பச்சடி செய்வது எப்படி?
அன்னாசி பச்சடி - Pineapple pachadi recipe
அன்னாசிப்பழ பச்சடி - Pineapple pachadi recipe
கலைமதி சிவகுரு

கலைமதி சிவகுரு, 1983-ல் நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரியில் பட்டம் பெற்றவர். இவரது படைப்புகள் மங்கையர் மலர், தேவதை, தினத்தந்தி குடும்ப மலர் இதழ்களில் வெளியாகிப் பரிசுகள் பெற்றுள்ளன. தற்போது கல்கி குழுமத்தில் எழுதுகிறார். சமையல், ஆன்மிக வாசிப்பு, தையல் கலையில் ஆர்வம் கொண்டவர்.

Updated on: 

கல்யாண வீட்டில் செய்யப்படும் அன்னாசிப்பழ பச்சடியின் சுவையே வாயில் வைத்ததும் கரையும் வகையில் இனிப்பு, லேசான புளிப்பு, தேங்காயின் மணம் மற்றும் மிளகாயின் மென்மையான காரம் ஆகியவை ஒன்றோடொன்று இணைந்திருக்கும் சுவைதான்.

அதை நாம் வீட்டில் செய்ய எவ்வளவு தான் போராடினாலும் சரியாக வருவதில்லை. அதை மிகவும் அற்புதமாக செய்ய அசத்தலான செய்முறை மற்றும் அவ்வாறு வர தேவையான பொருட்கள் பற்றி இங்கே காண்போம்.

தேவையான பொருட்கள்:

நன்கு பழுத்த அன்னாசிப்பழத் துண்டுகள் _ 2 கப் (நடுத்தண்டு நீக்கி, சிறிய சதுர துண்டுகளாக நறுக்கியது)

மஞ்சள்தூள் – ¼ டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – ½ டீஸ்பூன்

வெல்லம் (பொடித்தது) – 3 முதல் 4 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தண்ணீர் – ½ கப்

துருவியதேங்காய் – ½ கப்

சீரகம் – ½ டீஸ்பூன்

பச்சைமிளகாய் – 2

கடுகு – ¼ டீஸ்பூன்

கெட்டியான, புளிக்காத தயிர் – ¾ கப் (நன்கு கடைந்தது)

தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

கடுகு – ½ டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 2 (கிள்ளியது)

கறிவேப்பிலை – 1 கொத்து

செய்முறை:

ஒரு அடிகனமான பாத்திரத்தில் நறுக்கிய அன்னாசித் துண்டுகள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு மற்றும் ½ கப் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் வேகவிடவும். பழம் நன்கு மிருதுவாக வெந்து, தண்ணீர் வற்றும் வரை வேக வேண்டும். பழம் வெந்ததும் பொடித்த வெல்லத்தைச் சேர்த்துக்கிளறவும். வெல்லம் கரைந்து பழத்துடன் சேர்ந்து லேசான பாகு பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

மிக்ஸியில் தேங்காய், சீரகம், பச்சை மிளகாய் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிகவும் நைஸாக அரைக்கவும். கடைசியில் ¼ டீஸ்பூன் கடுகைச் சேர்த்து ஒரே ஒருமுறை (Pulse) மட்டும் சுற்றி எடுக்கவும். அரைத்த விழுதை வெந்த அன்னாசிப் பழக்கலவையில் சேர்த்து, அடுப்பை மிகவும் குறைந்த தீயில் வைத்து 2 நிமிடங்கள் மட்டும் கிளறவும். தேங்காயின் பச்சை வாசனை போனால் போதும்; அதிக நேரம் கொதிக்க விடக்கூடாது. பின்னர் அடுப்பை அணைத்து, கலவையை முழுமையாக ஆறவிடவும்.

அன்னாசி பச்சடி - Pineapple pachadi recipe
அன்னாசிப்பழ பச்சடி - Pineapple pachadi recipe

கலவை நன்கு ஆறிய பிறகு நன்கு கடைந்த கெட்டித் தயிரைச் சேர்த்து மெதுவாகக்கிளறவும். பின்னர் தாளிப்பு கரண்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து பச்சடியில் கொட்டி மூடி வைக்கவும்.

இனிப்பு, புளிப்பு மற்றும் சுவை சமமாக வர முக்கிய டிப்ஸ்கள்:

1) அன்னாசிப்பழம் அதிகம் புளிப்பான காயாக இல்லாமல், நன்கு பழுத்த, வாசனை நிறைந்த அன்னாசிப்பழத்தை பார்த்து வாங்கவேண்டும். பழத்தின் நடுவில் இருக்கும் கடினமான தண்டுப்பகுதியை முழுமையாக நீக்கி விட வேண்டும். இல்லை எனில் பச்சடி நார் நாராக இருக்கும். அன்னாசிபழத்துண்டுகள் முழுமையாக வெந்த பிறகே வெல்லம் சேர்க்கவேண்டும். இல்லை என்றால் பழம் வேகாமல் கடினமாகிவிடும்

2) பச்சடிக்கு புளிக்காத, ஃபிரெஷ்ஷான கெட்டித் தயிர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அன்னாசிப்பழத்தில் இயற்கையான புளிப்பு இருப்பதால், புளித்த தயிர் சேர்த்தால் சுவை மாறிவிடும். தயிரை

மிக்ஸியில் அடிக்காமல், கரண்டி அல்லது விஸ்க் கொண்டு கட்டி இல்லாமல் கடைந்து சேர்க்கவும். அன்னாசி-தேங்காய் கலவை சூடாக இருக்கும் போது தயிரை தயிரை ஊற்றினால் பச்சடி நீர்த்துப் போகும். மேலும் தயிர் திரிந்து விடும். முழுமையாக ஆறிய பிறகே தயிரை சேர்க்க வேண்டும்.

3) தேங்காய் அரைக்கும் போது கடைசியாக கால் டீஸ்பூன் கடுகு சேர்த்து ஒரு சுற்று மட்டும் அரைப்பதுதான் கல்யாண வீட்டு பச்சடிக்கு தனித்துவமான மணத்தையும் லேசான காரத்தையும் கொடுக்கும். கடுகை அதிகம் அரைத்தால் கசப்புத்தன்மை வந்துவிடும். மேலும் கட்டாயம் தேங்காய் எண்ணெயில் தாளிக்கவும்; அதுவே அன்னாசி மற்றும் தேங்காயின் மணத்தை முழுமையாக வெளிக்கொண்டு வரும்.

இதையும் படியுங்கள்:
கல்யாண பந்தி சுவையில் கமகமக்கும் புளிக்காய்ச்சல்… எண்ணெய் பிரிய இந்த 4 டிப்ஸ் பாருங்க! 
அன்னாசி பச்சடி - Pineapple pachadi recipe