
காய்கறிகள் வறுவல் செய்யும்போது எண்ணெய் சூடாகும் சமயத்தில் சிறிது சர்க்கரை சேர்த்து வறுவல் செய்தால் அதன் சுவை அதிகமாக இருக்கும்.
முளைகட்டிய கொத்துக்கடலையை அரைத்து, மாவுடன் சேர்த்து செய்யப்படும் சப்பாத்தி மிகவும் நன்றாக இருக்கும்.
இட்லி, தோசைக்கு உளுத்தம் பருப்பு அரைக்கும்போது கொஞ்சம் பெருங்காயத்தை சேர்த்து அரைத்தால் இட்லியும், தோசையும் கம கமவென்று மணமாக இருக்கும்.
இட்லி சுடும்போது மாவில் கொஞ்சம் நல்லெண்ணெய் ஊற்றிக்கலந்து சுட்டால் இட்லி மிருதுவாக இருக்கும்.
குழம்பில் உப்பு அதிகமானால் சிறிது அரிசியை வறுத்து நைஸாக அரைத்து குழம்பில் கலந்தால் போதும்.
சமோசா செய்யும் முன் மைதா மாவை சலித்து துணியில் கொட்டி, இட்லிப்பானையில் ஐந்து நிமிடங்கள் வேகவைத்து பின்பு சமோசா செய்தால் மிருதுவாகவும், மொறு மொறுப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.
ஏலக்காயை ப்ரிட்ஜில் வைத்து பின்பு எடுத்து பொடி செய்தால் நன்கு பொடியாகும்.
பச்சைக் கொத்துமல்லித் தழையை பச்சையாகவே துவையல் அரைக்கும்போது, புளி போடுவதற்கு பதிலாக ஒரு துண்டு மாங்காயைப் போட்டு அரைத்தால் சுவையும், மணமும் அதிகமாகும்.
பச்சரிசியை வெந்நீரில் ஊறவைத்து ஆப்பத்துக்கு அரைத்தால் செய்யும் ஆப்பம் மொறு மொறுப்பாக இருக்கும்.
இரண்டு டம்ளர் உளுந்துடன் ஒரு கரண்டி சாதம் சேர்த்து அரைத்து வடை தட்டினால் உளுந்து வடை சுவையோ சுவை.
பச்சை மிளகாய் சேர்த்து சட்னிக்கு அரைக்கும்போது, முதலில் மிளகாயைத் துண்டுகளாக்கி வெந்நீரில் போடவும். சற்று ஆறியதும் எடுத்து அரைத்தால் மிளகாய் நன்கு மசிவதுடன் சட்னி வெகுநேரம் கெட்டுப் போகாமலும் இருக்கும்.
கீரைகள் சமைக்கும்போது ஒரு ஸ்பூன் எலுமிச்சைசாறு கலந்தால், கீரையின் பச்சை நிறம் மாறாமல் அப்படியே இருக்கும்.