கடை வாழைக்காய் சிப்ஸ் போல மொறுமொறுப்பாக வர வேண்டுமா? எளிய டிப்ஸ் இதோ...

வீட்டிலேயே டீக்கடை சுவையில் சிப்ஸ் செய்ய எளிய வழிகளும் அறிவியல் ரகசியங்களும்.
வாழைக்காய் சிப்ஸ் - Homemade Banana Chips
வாழைக்காய் சிப்ஸ் - Homemade Banana Chips
சேலம் சுபா

சேலம் சுபா. 15 வயதில் துவங்கிய இவரது எழுத்து பயணம் தொய்வின்றி தொடர்கிறது. 200 க்கும் மேற்பட்ட தன்னம்பிக்கை கட்டுரைகள், 20 க்கும் மேற்பட்ட சிறுவர் கதைகள், எண்ணற்ற நேர்காணல்கள், பரிசு பெற்ற சிறுகதைகள், கவிதைகள் , புத்தகமாக வெளிவந்த சிறுகதைத் தொகுப்பு என இவரது எழுத்துகளின் பரிமாணம் விரிவடைந்து கொண்டே வருகிறது. தற்போது கல்கி ஆன்லைனில் தொடர்ந்து வெளிவரும் கட்டுரைகள் இவரது எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரம். இவரது வயது கூடினாலும், இவரது எழுத்து அன்றும் இன்றும் என்றும் இளமையின் புத்துணர்வு தரும்.

Updated on: 

பொதுவாகவே சிப்ஸ் வகையறாக்கள் அனைவருக்கும் விருப்பமான ஒன்று. அதிலும் உருளைக்கிழங்கு மற்றும் வாழைக்காய் சிப்ஸ்கள் என்றால் கேட்கவே வேண்டாம். அதிலும் டீக்கடையிலும், , பேக்கரியிலும் கிடைக்கும் வாழைக்காய் சிப்ஸ் என்றாலே அதன் மொறுமொறுப்பும், அழகான மஞ்சள் நிறமும் தனி ருசிதான்.

ஆனால் அதையே நாம் வீட்டில் செய்தால் சரியாக வராமல் செம கடுப்புதான் வரும். வீட்டில் செய்யும்போது சில நேரங்களில் சிப்ஸ் எண்ணெய் அதிகமாகக் குடித்துவிடும் அல்லது ஆறியதும் மெத்தென்று மாறிவிடும். இதற்குக் காரணம் வாழைக்காயை நறுக்கும் முறை, ஈரப்பதம், எண்ணெயின் வெப்பநிலை ஆகியவற்றில் செய்யும் சிறிய தவறுகள்தான்.

இந்த தவறுகளை சரி செய்து ஆனால் அதே சுவையிலும், பதத்திலும் வீட்டிலேயே வாழைக்காய் சிப்ஸ் தயாரிக்கலாம். இதோ கடை ஸ்டைல் வாழைக்காய் சிப்ஸ் தயாரிக்கும் முறை.

தேவையான பொருட்கள்;

வாழைக்காய் – 2

உப்பு – தேவையான அளவு

மஞ்சள் தூள் – சிறிதளவு

மிளகாய்த்தூள் – ½ டீஸ்பூன் (தேவையெனில்)

எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையானது

செய்முறை;

முதலில் நன்கு முற்றாத, பச்சை நிறத்தில் இருக்கும் சரியான காய்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தோல் தடிமனாகவும், காய் உறுதியாகவும் இருக்கவேண்டும். பழுக்கத் தொடங்கிய வாழைக்காயை நிச்சயமாக பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

அடுத்து வாழைக்காயின் தோலை நீக்கிவிட்டு சிப்ஸ் கட்டர் மூலம் மெல்லிய வட்ட வடிவில் நறுக்கவும்.

நறுக்கிய துண்டுகளைத் தண்ணீரில் போட்டு வைக்கலாம். இது காயின் மேற்பரப்பில் உள்ள மாவுச்சத்தைக் குறைக்க உதவும். நறுக்கிய உடனே செய்ய வேண்டிய முக்கியமான வேலை இது. ஆனால் நீண்ட நேரம் ஊறவிடக்கூடாது. ஓரிரு நிமிடங்கள் கழித்து எடுத்து சுத்தமான பருத்தித் துணியில் பரப்பி ஈரப்பதம் முழுவதையும் நீக்க வேண்டும். இதுதான் மொறு மொறுப்பான சிப்ஸ் தயாரிப்பதில் முக்கியமான ரகசியம்.

வாழைக்காய் சிப்ஸ் - Homemade Banana Chips
வாழைக்காய் சிப்ஸ் - Homemade Banana Chips

கவனிக்க வேண்டிய அடுத்த ஸ்டெப் எண்ணெயின் வெப்பநிலை. கனமான கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் காய வைக்கவும். எண்ணெய் போதுமான அளவு சூடானதும் வாழைக்காய் துண்டுகளை ஒவ்வொன்றாகப் போடவும்.

அதிகமான துண்டுகளை ஒரே நேரத்தில் போடக்கூடாது. அப்படிச் செய்தால் எண்ணெயின் வெப்பநிலை குறைந்து சிப்ஸ் அதிக எண்ணெயை உறிஞ்சலாம்.

இதையும் படியுங்கள்:
கொள்ளு சரியாக முளைக்காததற்குக் காரணம் இதுதான்! 2 முக்கிய டிப்ஸ் & மசாலா சுண்டல் ரெசிபி!!
வாழைக்காய் சிப்ஸ் - Homemade Banana Chips

இப்போது கடை ரகசியமான உப்பு தண்ணீருக்கு வருவோம். ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீர், உப்பு, சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்துக் கரைத்துக்கொள்ளவும். வாழைக்காய் ஓரளவு வெந்து கொண்டிருக்கும்போது மிகக் குறைந்த அளவில் இந்தக் கலவையை எண்ணெயில் சேர்க்கலாம். ஆனால் இதில் அதிக கவனம் வேண்டும். ஏனெனில் சூடான எண்ணெயில் தண்ணீர் சேர்க்கும்போது எண்ணெய் சிதற வாய்ப்புள்ளது. எனவே இந்த முறையைப் பயன்படுத்தும்போது மிகுந்த கவனம் தேவை. இதைத் தவிர பாதுகாப்பான மாற்றாக, சிப்ஸ்களை பொரித்து எடுத்து உடனே உப்பைத் தனியாகத் தூவியும் சுவை தரலாம்.

மேலும் மொறுமொறுப்பாகப் பொரிப்பதற்கு வாழைக்காய் துண்டுகள் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் கிளறிவிட வேண்டும். எண்ணெய் குமிழ்கள் குறைந்து சிப்ஸ் மொறுமொறுப்பாக மாறியதும் எண்ணெயிலிருந்து எடுத்து வடிகட்டியில் போடவும். சிப்ஸ் சூடாக இருக்கும்போதே தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள் பரவலாகத் தூவினால் சீராக இருக்கும்.

சிப்ஸ் எண்ணெய் குடிக்காமல் இருக்க இந்த 5 குறிப்புகள் உங்களுக்கு உதவும். வாழைக்காயை ஒரே சீரான மெல்லிய அளவில் நறுக்க வேண்டும். நறுக்கிய துண்டுகளில் துளியும் ஈரம் இருக்கக்கூடாது.

எண்ணெய் மிகவும் குறைந்த சூட்டிலோ, புகை வரும் அளவுக்கு அதிகமான சூட்டிலோ இருக்காமல் மிதமான சூட்டில் இருப்பது அவசியம்.

எண்ணெய் காய்ந்ததும் கடாயில் அதிக அளவு வாழைக்காயை ஒரே நேரத்தில் போடக்கூடாது.

பொரித்த சிப்ஸை டிஷ்யூ பேப்பர் அல்லது எண்ணெய் வடிகட்டும் வலையில் பரப்பி ஆற விடவேண்டும்.

வாழைக்காய் சிப்ஸ் நீண்ட நேரம் மொறுமொறுப்பாக இருக்க சிப்ஸ் முழுமையாக ஆறிய பிறகுதான் காற்றுப் புகாத டப்பாவில் சேமிக்க வேண்டும். சூடாக இருக்கும்போதே மூடி வைத்தால் உள்ளே நீராவி உருவாகி சிப்ஸ் மெத்தென்று மாறிவிடும்.

சிப்ஸ் எண்ணெய் குடிப்பதற்கு வாழைக்காயில் உள்ள ஈரப்பதமும், பொரிக்கும் எண்ணெயின் வெப்பநிலையும் முக்கியக் காரணிகள். பொரித்த பிறகு சிப்ஸ் ஆறும்போது அதன் உள்ளே உருவாகும் அழுத்த மாற்றங்களும் எண்ணெய் உறிஞ்சுதலைப் பாதிக்கும்.

பாட்டி காலத்து சமையல் நுணுக்கமும், இந்தச் சின்ன சின்ன அறிவியல் ரகசியங்களும் தெரிந்து கொள்வதுடன் கொஞ்சம் பொறுமையும் இருந்தால் நாமும் வீட்டிலேயே மொறுமொறுப்பாகப் பேக்கரி ஸ்டைல் வாழைக்காய் சிப்ஸ் எளிதாக தயாரித்து பாராட்டு பெறலாம்.

இதையும் படியுங்கள்:
அவியல் குழைந்து நீர்த்துப் போகுதா? கல்யாண வீட்டுப் பதத்தில் வர 6 எளிய டிப்ஸ்!
வாழைக்காய் சிப்ஸ் - Homemade Banana Chips