அவியல் குழைந்து நீர்த்துப் போகுதா? கல்யாண வீட்டுப் பதத்தில் வர 6 எளிய டிப்ஸ்!

காய்கள் தனித்தனியாகவும் மசாலா ஒட்டியும் வர சமையல் நுணுக்கங்கள் இதோ.
அவியல்
அவியல் Gemini image
கல்பனா ராஜகோபால்

கல்பனா ராஜகோபால், பள்ளிப் பருவம் முதலே தமிழ் வாசிப்பிலும் கவிதையிலும் ஈடுபாடு கொண்டவர். இவரது கவிதைக்கு டாக்டர் அப்துல் கலாமிடமிருந்து வாழ்த்துக் கடிதம் பெற்றுள்ளார். மங்கையர் மலர் வெள்ளி விழா மலரில் வெளியான இவரது கவிதை பரிசு வென்றது. பணி ஓய்வுக்குப் பின் கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார்.

Updated on: 

கேரள நண்பர்களின் வீட்டில் விருந்து என்றாலே, அவர்களின் பாரம்பரிய உணவான அவியல் தான் முக்கிய இடம் வகிக்கும். நாமும் அதை விரும்பிக் கேட்டு உண்போம்.

கேரளாவின் பாரம்பரிய உணவான அவியல், தமிழ்நாட்டிலும் பல வீடுகளில் விரும்பிச் செய்யப்படும் ஒரு சுவையான உணவு. கல்யாண விருந்து என்றாலும், பண்டிகை நாட்கள் என்றாலும் அவியலுக்கு எப்போதுமே தனி இடம் உண்டு.

ஆனால், வீட்டில் அவியல் செய்யும்போது சிலருக்கு காய்கறிகள் குழைந்து போய்விடும். அதிகப்படியான தண்ணீர் சேர்ந்து அவியல் நீர்த்தும் போய்விடும்.

ஹோட்டல் அல்லது கல்யாண வீட்டு அவியல் போல காய்கள் தனித்தனியாகவும், மசாலா நன்றாகப் படிந்தும் வர அவர்கள் கடைப்பிடிக்கும் சில எளிய ரகசியங்கள் என்னென்ன என்று பார்க்கலாமா?

அவியலின் சிறப்பு

பலவிதமான காய்கறிகள், தேங்காய், தயிர், சீரகம், பச்சை மிளகாய் என ஆரோக்கியமான பொருட்கள் சேர்வதால் சுவையிலும் சத்திலும் அவியல் சிறந்தது.

1. காய்கறிகளை ஒரே அளவில் நறுக்குதல்!

அவியல் செய்வதற்கு முருங்கைக்காய், கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, பூசணிக்காய், வாழைக்காய் போன்ற காய்களைப் பயன்படுத்துவோம். நமது விருப்பத்திற்கு ஏற்ப வேறு காய்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.

காய்கறிகளை நீளவாக்கில் ஒரே அளவில் நறுக்குவது மிகவும் முக்கியம். அப்போதுதான் எல்லாக் காய்களும் ஒரே நேரத்தில் வெந்து வரும். பொரியலுக்கு நறுக்குவது போல் மிகவும் சிறியதாக நறுக்கக் கூடாது. சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்க வேண்டும். அப்போதுதான் காய்கள் சீக்கிரமே வெந்து குழையாமல் இருக்கும்.

2. காய்கறிகளை ஒவ்வொன்றாக வேக வைக்கும் முறை!

நறுக்கிய எல்லாக் காய்களையும் ஒரே நேரத்தில் பாத்திரத்தில் கொட்டி வேகவிடக் கூடாது. முதலில் கேரட், பீன்ஸ், முருங்கைக்காய், சேனைக்கிழங்கு போன்ற காய்களைச் சேர்த்து வேகவிட வேண்டும். இவை ஓரளவு வெந்ததும் வாழைக்காய், உருளைக்கிழங்கு போன்றவற்றைச் சேர்க்கலாம். பூசணிக்காய் போன்ற தண்ணீர் நிறைந்த, சீக்கிரம் வேகக்கூடிய காய்களை இறுதியில் சேர்க்க வேண்டும்.

3. தண்ணீரின் அளவு!

அவியல் நீர்த்துப் போவதற்கு அதிகப்படியான தண்ணீர்தான் முக்கியக் காரணம். காய்கறிகளை வேகவைக்கும்போது மூடி போட்டு, மிதமான தீயில் ஆவியில் வேகவிட வேண்டும். காய்கறிகளில் இருக்கும் ஈரப்பதமே வேகுவதற்குப் போதுமானதாக இருக்கும் என்பதால் அதிகத் தண்ணீர் தேவையில்லை.

4. தேங்காய் அரைப்பதில் இருக்கிறது ரகசியம்!

ஒரு கப் துருவிய தேங்காய், 2 அல்லது 3 பச்சை மிளகாய், ஒரு டீஸ்பூன் சீரகம் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் விடாமல் மிகவும் நைசாக அரைக்காமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். தேங்காய் விழுதில் இருக்கும் சிறிதளவு கொரகொரப்புதான் அவியலுக்கு நல்ல பதத்தைக் கொடுக்கும்.

அவியல்
அவியல்Gemini image

5. சரியான நேரத்தில் தயிர் சேர்ப்பு!

காய்கறிகள் முக்கால் பதம் வெந்ததும் அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து, அதனுடன் உப்பும் சேர்த்து மெதுவாகக் கிளற வேண்டும். எல்லாம் நன்றாகக் கலந்து வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, நன்றாகக் கடைந்த புளிப்பில்லாத தயிரைச் சேர்த்துக் கலக்க வேண்டும்.

தயிர் சேர்த்த பிறகு அவியலைக் கொதிக்கவிடக் கூடாது. அப்படிச் செய்தால் தயிர் திரிந்துவிடும்.

6. சுவைக்கூட்டும் தேங்காய் எண்ணெய்!

அவியலுக்கு மணமும் சுவையும் கொடுப்பதில் தேங்காய் எண்ணெய்க்கு முக்கியப் பங்கு உண்டு. அடுப்பை அணைத்த பிறகு ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை மேலே ஊற்றவும். பின்னர் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து மூடி வைக்கவும். தேங்காய் எண்ணெயின் மணம் அவியலில் நன்றாக இறங்கும்.

இந்த ரகசியங்களை கடைப்பிடித்து நம் வீட்டிலேயே கேரளத்து அவியல் எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

வீட்டிலேயே சுவையான அவியல் – எளிய செய்முறை

தேவையான பொருட்கள்:

கேரட் – 1 

பீன்ஸ் – 5 

முருங்கைக்காய் – 1 

வாழைக்காய் – 1 

சேனைக்கிழங்கு – 100 கிராம்

உருளைக்கிழங்கு – 1 

மாங்காய் – சிறிய துண்டு

தயிர் – ½ கப்

மஞ்சள்தூள் – ¼ டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

தேங்காய் எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்

அரைக்க:

துருவிய தேங்காய் – 1 கப்

பச்சை மிளகாய் – 3 

சீரகம் – 1 டீஸ்பூன்

இதையும் படியுங்கள்:
கல்யாண வீட்டு மோர்க்குழம்பு ருசி ரகசியம்! வீட்டில் இப்படி வைங்க!
அவியல்

செய்முறை:

முதலில் காய்கறிகளை நன்றாகக் கழுவி, நீளவாக்கில் ஒரே அளவில் நறுக்கி வைக்கவும்.

ஒரு அகலமான பாத்திரத்தில் கேரட், பீன்ஸ், முருங்கைக்காய், சேனைக்கிழங்கு ஆகியவற்றைப் போட்டு மஞ்சள்தூள், உப்பு சேர்க்கவும்.

மூடி போட்டு மிதமான தீயில் வேகவிடவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் தெளித்துவிடவும். பாதியளவு வெந்ததும் வாழைக்காய், உருளைக்கிழங்கு சேர்க்கவும்.

காய்கறிகள் முக்கால் பதம் வெந்ததும் தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றைச் சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்த விழுதைச் சேர்த்துக் கிளறி, சிறிது நேரம் வேகவிடவும். தேவைப்பட்டால் மட்டும் சிறிதளவு தண்ணீர் தெளிக்கவும்.

இறுதியாக மாங்காய் துண்டுகளையும் சேர்த்து வேகவிடவும். காய்கறிகள் நன்றாக வெந்ததும் அடுப்பை அணைக்கவும்.

இறுதியாக நன்றாகக் கடைந்த தயிரைச் சேர்த்துக் கலக்கவும். மேலே தேங்காய் எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை சேர்த்து பத்து நிமிடம் மூடி வைக்கவும். சுவையான அவியல் தயார்!

இதையும் படியுங்கள்:
கொள்ளு சரியாக முளைக்காததற்குக் காரணம் இதுதான்! 2 முக்கிய டிப்ஸ் & மசாலா சுண்டல் ரெசிபி!!
அவியல்

சமையல்காரர்கள் சொல்லும் முக்கியமான குறிப்புகள்!

காய்கறிகள் குழையாமல், அவியல் கெட்டியான பதத்தில் அருமையாக இருக்க இந்த மூன்று விஷயங்களைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

1. காய்கறிகளை அடிக்கடி கிளறக் கூடாது.

2. அதிகத் தண்ணீர் சேர்க்கக் கூடாது.

3. மிதமான தீயில் வேகவிட வேண்டும்.

இவை மூன்றும்தான் அவியலின் சுவையைக் கூட்டும் ரகசியங்கள்.

அவியலைச் செய்தவுடன் பரிமாறாமல் 10 நிமிடங்கள் மூடி வைத்தால் தேங்காய், தயிர், தேங்காய் எண்ணெயின் சுவை காய்கறிகளில் நன்றாகக் கலந்து சுவையை அதிகரிக்கச் செய்யும்.

வீட்டில் செய்யும் அவியல் இனி தண்ணீராகவோ குழைந்தோ போகாது; காய்கறிகளின் நிறமும் வடிவமும் மாறாமல், தேங்காய் எண்ணெய் மணத்துடன் விருந்துப் பதத்தில் சுவையாக வரும்.