
தயிரை மோராக்கும்போது ஆடை நீக்காமல் அப்படியே தண்ணீர் ஊற்றி மோராக்கக் கூடாது. மிக்ஸியில் இட்டு ஓடியதும் மேலாக உள்ள வெண்ணையை எடுத்துவிட்டு பின் மோராக்க உடலுக்கு நல்லது.
சட்னி தாளிக்கையில் கடுகு தாளித்து சட்னி மேல் ஊற்றி பரிமாறவும் முன் கிளற, சட்னி நீண்ட நேரம் நன்றாக இருக்கும். ரொம்ப கலக்கிவிட சட்னி விரைவில் புளித்து கெட்டுப்போகும்.
கொத்தமல்லி, புதினா போன்றவற்றில் சட்னி அரைக்கும் முன் இலேசாக வதக்கிவிட்டு அரைக்க பசுமை மாறாமல் இருக்கும்.நீண்ட நேரம் வதக்க நிறம் மாறி விடுவதுடன் சத்தும் வீணாகும்.
தேங்காயை ஓட்டை ஒட்டி ரொம்ப திருகக்கூடாது என்பதுபோல ஜாம், ஊறுகாய் மீந்ததை ஒட்ட காலியாகும் வரை உபயோகிக்க கூடாது. பாட்டிலின் சைடில் கறுப்பு படிந்து, பூஞ்சை ஏற்பட்டிருக்கும் வாய்ப்பு உள்ளது.
ஃப்ரிட்ஜில் நிறைய மாவு அரைத்து வைக்கக்கூடாது. அப்படி வைக்க வேண்டுமெனில் மாவிற்கு மொத்தமாக உப்பு போடாமல் தனித் தனி டப்பாவில் வைத்து மறுநாளுக்கு உள்ளத்திற்கு மட்டும் முதல் நாள் உப்பு போட்டு கரைத்து வைக்க மாவு புளிக்காமல் பதமாக இருக்கும்.
ஃப்ரிட்ஜில் சமைத்த உணவை தனியாகவும், ஃப்ரெஷ்ஷானதை தனியாகவும் வைக்க ஒன்றின் வாசனை மற்றதில் ஏறாமல், கிருமி வராமல் தடுக்கலாம்.
தோசைக்கும், சப்பாத்திக்கும் தனித்தனி கல்லை உபயோகிக்க வசதியாக இருக்கும்.
புளிக்காய்ச்சல் தயாரிக்கையில் புளிக்கரைசலை கெட்டியாக கரைத்து கொதிக்க வைக்கவேண்டும். நீண்ட நேரம் தண்ணியான கரைசல் கொதித்தால் சுவை மாறிவிடும்.
காபிக்கு இன்ஸ்டன்ட் தூள் போடுகையில் கப் பில் அப்படியே போடாமல் சிறிது தண்ணீரில் கரைத்து டிகாஷனாக பாலுடன் சேர்க்க சுவையாக இருக்கும்.
காளான் வாங்கியதும் சமைக்க வேண்டும். ஃப்ரிட்ஜில் வைத்து வைத்து சமைக்க கருத்து போய்விடுவது டன் உடலுக்கும் தீமை விளைவிக்கும்.
கேக் செய்யும்போது பாத்திரத்தை அடிக்கடி திறக்க கூடாது என்பது போல இட்லி வேக வைக்கும் போதும் அடிக்கடி திறக்கக் கூடாது. 7-10நிமிடத்தில் வேகவிட்டு எடுக்க சரியாக இருக்கும்.
எண்ணெய் கண்ட்டெய்னரை ஒருமுறை தீர்ந்ததும் கழுவி விட்டு பின் புதிய எண்ணெய் ஊற்ற வேண்டும்.கழுவாமல் ஊற்றிட காரல் வாசனை வரும்.
உப்பு, சீனி, குழம்பு தூள் போன்றவற்றை ஈரக்கையால் திறக்கக் கூடாது. சமைக்கையில் சின்ன டவல் வைத்துக் கொண்டு அதில் துடைத்து விட்டு பின் திறக்க பாத்திரமும் அழுக்காகாது. பொருளும் கெடாமல் இருக்கும்.
டீ போடும்போது பாலுடன் தூளை போட்டு பின் கொதிக்க விட டீத்தூள் கொதித்து நன்றாக இறங்கி வாசனையாக இருக்கும்.கொதிக்கும் முன் இறக்க நன்றாக இருக்காது.
முளைக்கட்டிய தானியங்களை ஆவியில் வேகவைக்க நிறம் மாறாமல் இருக்கும். நீண்ட நாள் முளைக்கட்டியதை உண்பதோ, ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதோ கூடாது.
இவை அனைத்தும் நான் வீட்டில் ரெகுலராக செய்வதை தொகுத்து எழுதியுள்ளேன். வேறு எதிலிருந்தும் எடுத்து எழுதவில்லை.