
தட்டை செய்யும்போது முழு மிளகு போடாமல் ஒன்றிரண்டாக தட்டிப்போட்டால், வாசனையாக இருக்கும்.
சீடை செய்யும்போது அது வெடிக்காமல் இருக்க, சீடையை ஊசியால் குத்திய பிறகு எண்ணெயில் போட வேண்டும்.
தேன்குழல் செய்யும்போது தேங்காய் எண்ணெய் ஊற்றிப்
பிசைந்து செய்தால், தேங்காய் எண்ணையில் பொரித்தது போல் தேன்குழல் வாசனையாக இருக்கும்.
முறுக்குக்கு மாவு வகைகளைக் கலந்து, ஒரு டீஸ்பூன் சூடான எண்ணெய் ஊற்றிக் கலக்க, முறுக்கு கடகடவென்று இல்லாமல் மொறு மொறுப்பாக இருக்கும்.
சீடை, தட்டை, முறுக்கு போன்ற பட்சணங்கள் செய்யும் போது சிறிது தேங்காய்ப்பால் விட்டு செய்தால் சுவை அள்ளும்.
கரைத்த பஜ்ஜி மாவை மிக்ஸியில் அடித்து பஜ்ஜி செய்தால் உப்பலாக வரும். மிருதுவாகவும் இருக்கும்.
கடலை மாவுடன் கொஞ்சம் சோளமாவு, கெட்டித் தயிர் சேர்த்துப்பிசைந்து பக்கோடா செய்தால் கர கரப்பு குறையவே குறையாது.
மிக்சருக்கு உப்பு, காரம் கலக்கும்போது, இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்துக் கலந்தால் சீராகப் பரவும்.
முறுக்கு செய்யும்போது கடலைமாவைக் குறைத்து, பொட்டுக்கடலைமாவைச் சேர்த்தால் முறுக்கு மொறு மொறுப்புடன் இருக்கும்.
ஓமப்பொடி செய்யும்போது, ஓமத்தை தண்ணீரில் ஊற வைத்து, அரைத்து, வடிகட்டி மாவில் போட்டுப் பிசையலாம். ஓமத்தை வறுத்துப்பொடித்தும் மாவில் சேர்க்கலாம்.
ரிப்பன் நாடா முறுக்கு செய்யும்போது அரிசி மாவு, கடலை மாவுடன் இரண்டு ஸ்பூன் உளுத்த மாவையும் சேர்த்தால், எண்ணெய் அதிகம் குடிக்காது. கரகரப்பாகவும் இருக்கும்.
எந்த வகை முறுக்குக்கு மாவு கலந்தாலும் ஒரு ஈடுக்குத் தேவையான மாவையே தண்ணீர் ஊற்றிப் பிசையவேண்டும். இவ்வாறு செய்வதால் முறுக்கு கடைசி ஈடுவரை சிவக்காது.