
செட்டிநாட்டு உணவு வகைகள் எப்பொழுதுமே மிக பிரபலமானவை. சுவை அதிகமாக வித்தியாசமாக நாவை சுண்டி இழுக்கும் வகையில் இருக்கும் உணவுகள் என்பதால் அனைவரும் செட்டிநாட்டு உணவுகளை அதிகம் விரும்பி விரும்புவார்கள் அந்த வகையில் ஒரு செட்டிநாட்டு உணவு வகை இங்கு. இதன் பெயர் கோலா மசாலா கறி . வாருங்கள் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
கோலா மசாலா கறி
தேவை:
கோலா தயாரிக்க
கடலை மாவு - ஒரு கப்
மஞ்சள் தூள் -ஒரு டீஸ்பூன்
வரமிளகாய்- 4
கொத்தமல்லித்தழை - அரைக்கட்டு பூண்டு - ஐந்து பல்
நெய்- மூன்று டேபிள்ஸ்பூன்
இஞ்சி- அரை அங்குலம்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்துமல்லித்தழையை சுத்தம் செய்து மிக்சியில் விழுதுபோல் அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவை சலித்து அதனுடன் தேவையான உப்பு, அரைத்த விழுது, உருக்கிய நெய் சேர்த்து சிறிது நீர் தெளித்து சப்பாத்தி மாவு போல் பிசையவும். இதை ஆறு சமபாகமாக பிரித்து நீளவாக்கில் குழல் போல் உருட்டி ஆவியில் வேக வைக்கவும். (உருண்டைகளாகவும் செய்யலாம்) வெந்தவுடன் ஆறியதும் சிறு துண்டுகளாக நறுக்கி சூடானநெய்யில் பொரித்து தனியே எடுத்து வைக்கவும்.
இப்போது மசாலா செய்முறை பார்ப்போம்.
தேவை:
பெரிய வெங்காயம் -இரண்டு
கரம் மசாலா - ஒரு டீஸ்பூன்
பெரிய தக்காளி - இரண்டு
கடுகு கருவேப்பிலை தாளிக்க
தேங்காய் துருவல்- ஒரு டீஸ்பூன் எண்ணெய் - இரண்டு டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
செய்முறை:
வெங்காயத்தையும் தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் எண்ணெயை காயவைத்து வெங்காயம், தக்காளியை ஒவ்வொன்றாக போட்டு வதக்கி கரம் மசாலாவையும் சேர்த்து வதக்கவும். இதனுடன் சிறிது தண்ணீர், தேவையான உப்பு சேர்த்துக் கிளறி நன்கு கொதித்த உடன் பொரித்து வைத்திருக்கும் கூளாக்களை போட்டுக்கிளறவும். தாளிக்கும் கரண்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலையை தாளித்துக்கொட்டி தேங்காய் துருவல் தூவி மசாலா மேல் கொட்டி சூடாக பரிமாறவும். இதில் கோலாவின் வித்தியாசமான ருசி சேர்வதால் சூடான சாதம் சப்பாத்தி போன்றவைகளுக்கு வெகு ருசியாக இருக்கும்.