
கரம் மசாலா:
கரம் மசாலா தயாரிக்க தேவையான பொருட்கள்:
தனியா 1 கப்
சீரகம் 1/4 கப்
மிளகு 4 ஸ்பூன்
ஏலக்காய் 2
கிராம்பு 4
லவங்கப்பட்டை 6
நட்சத்திர சோம்பு 4
காய்ந்த பே இலைகள் 4
ஜாதிக்காய் பாதி
பெருஞ்சீரகம் 2 ஸ்பூன்
ஜாதிபத்ரி 2 இலைகள்
கருப்பு ஏலக்காய் 4
அடுப்பில் வாணலியை வைத்து வாணலி நன்கு சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்துக் கொள்ளவும். ஒவ்வொரு பொருட்களாக சேர்த்து சூடு வரும் வரை, மொறுமொறுப்பாகும் வரை வறுக்கவும். அடுப்பை பெரிதாக வைத்தால் விரைவில் சூடாகி பொருட்கள் கலர் மாறிப் போகும். இதனால் மசாலாவின் சுவையும் மாறிவிடும்.
முதலில் நட்சத்திர சோம்பு, இலவங்கப்பட்டை, கருப்பு ஏலக்காய், பச்சை ஏலக்காய் ஆகியவற்றை வறுக்கவும். அவை சூடாகும் பொழுது சீரகம், மிளகு, சோம்பு, கிராம்பு, பே இலைகள், ஜாதிக்காய், ஜாதி பத்ரி, பெருஞ்சீரகம் ஆகியவற்றை போட்டு நன்கு சூடாகும் வரை வறுத்தெடுக்கவும் இதனை தட்டில் கொட்டி ஆற விடவும். தனியாவை தனியாக வறுத்தெடுக்கவும். அனைத்தையும் மிக்ஸியில் போட்டு பொடிக்க மிகவும் மணமான கரம் மசாலா தயார். செய்வது எளிது. வீட்டிலேயே தயாரிப்பதால் செலவும் குறைவு.
சமையலில் மசாலாப் பொடிகளை சேர்ப்பது மணத்துடன் பசி உணர்வையும் தூண்டும். சமையலில் சேர்க்கப்படும் மசாலாக்கள் உணவில் சிறந்த மாயாஜாலங்களை உருவாக்கும். மணம், நிறம் கூடும். இதனை கலந்த சாதம், கிரேவிகள், சப்பாத்தி பூரி போன்ற டிபன் ஐட்டங்களுக்கு செய்யப்படும் சைடு டிஷ்களில் சேர்க்க சுவை கூடும். இந்திய மசாலாக்களின் நறுமணம் மற்றும் அதன் சுவையின் காரணமாக உலகின் தலைசிறந்த மசாலா கலவைகளில் ஒன்றாக இடம் பிடித்துள்ளது.
வறுத்தரைத்த இன்ஸ்டன்ட் பொடி:
தனியா 1 கப்
மிளகாய் 10
கடலைப் பருப்பு 2 ஸ்பூன்
துவரம் பருப்பு 4 ஸ்பூன்
மிளகு 2 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது
வெள்ளை எள் 1 ஸ்பூன்
கசகசா 1 ஸ்பூன்
ஒரு வாணலியில் தனியா, மிளகாய் இரண்டையும் சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளவும். பிறகு கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, மிளகு, சீரகம் சேர்த்து வறுக்கவும். கடைசியாக எள்ளையும், கசகசாவையும் சேர்த்து நன்கு சூடாகி எள் பொரிந்து வெடிக்கும் சமயம் இறக்கி விடவும். கறிவேப்பிலையை தனியாக வாணலியில் மொறு மொறுப்பாகும் வரை வறுத்து சேர்க்கவும். சூடு ஆறியது மிக்ஸியில் பொடிக்க வறுத்தரைத்த பொடி தயார்.
இந்தப் பொடியை தயார் செய்து வைத்துக்கொண்டால் வேலைக்கு செல்லும் பெண்கள் காலை அவசரத்தில் சாம்பார் செய்ய நேரமில்லாதபோது இந்தப் பொடியை 1 ஸ்பூன் போட்டு சிறிது நெய் விட்டு,பொடி உப்பு சேர்த்து சூடான சாதத்தில் கலந்து சாப்பிட ருசிக்கும். தொட்டுக்கொள்ள தயிரே போதும்.