தென்கொரியாவில் மிகவும் பிரபலமான ‘ஜப்சே’ பாரம்பரியம் மிக்க உணவு வகையாகும். இதை பிறந்தநாள், திருமணம், விடுமுறை நாட்கள் போன்ற விசேஷ சமயங்களிலே செய்யப்படுகிறது. சக்கரைவள்ளி கிழங்கின் மாவினால் செய்யப்படுவதுதான் கிளாஸ் நூடுல்ஸ். அத்துடன் இனிப்பு மற்றும் காரமான சாஸ்களை சேர்த்து தயாரிக்கப்படுவதே ஜப்சேவாகும்.
ஜப்சே கிளாஸ் நூடுல்ஸ் செய்ய தேவையான பொருட்கள்:
கிளாஸ் நூடுல்ஸ்-1 பாக்கெட்.
சிறிதாக வெட்டி வைத்த பூண்டு-1 தேக்கரண்டி.
ஸ்பிரிங் ஆனியன் -1 தேக்கரண்டி.
சில்லி பிளேக்ஸ்-1 தெக்கரண்டி.
வெள்ளை எள்ளு-1 தேக்கரண்டி.
மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.
உப்பு-1/2 தேக்கரண்டி.
எள் எண்ணை- 3 தேக்கரண்டி.
வினிகர்- 1 தேக்கரண்டி.
சோயா சாஸ்- ½ தேக்கரண்டி.
தக்காளி சாஸ்- 1 தேக்கரண்டி.
வறுத்து பொடி செய்யப்பட்ட கடலை-1 தேக்கரண்டி.
பொடியாக வெட்டப்பட்ட கேரட்- தேவையான அளவு.
பொடியாக வெட்டப்பட்ட வெள்ளரி- தேவையான அளவு.
ஜப்சே கிளாஸ் நூடுல்ஸ் செய்முறை விளக்கம்:
கிளாஸ் நூடுல்ஸ் என்று சூப்பர் மார்க்கெட்டில் கேட்டால் கிடைக்கும். இது பார்ப்பதற்கு சேமியா போன்றே இருக்கும். அதை கொதிக்க வைத்த தண்ணீரில் போட்டு எடுக்க வேண்டும்.
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் வாங்கி வைத்திருக்கும் கிளேஸ் நூடுல்ஸை தேவையான அளவு போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்து குளிர்ந்த நீரில் போட்டு வைத்து கொள்ளவும். பிறகு சிறிது நேரத்தில் வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும்.
இப்போது இதற்கான ஸ்வீட் ஸ்பைஸி சில்லி சாஸை செய்ய வேண்டும். அதற்கு முதலில் ஒரு பவுலில், சிறிதாக வெட்டி வைத்த பூண்டு ஒரு தேக்கரண்டி,ஸ்பிரிங் ஆனியன்-1 தேக்கரண்டி, சில்லி பிளேக்ஸ்-1 தேக்கரண்டி, வெள்ளை எள்ளு-1 தேக்கரண்டி, மிளகாய் தூள்-1 தேக்கரண்டி, உப்பு-1/2 தேக்கரண்டி, சுடவைத்த எள் எண்ணை -3 தேக்கரண்டி நன்றாக கலக்கி விட்டு பிறகு வினிகர் 1 தேக்கரண்டியை சேர்க்கவும், சோயா சாஸ் ½ தேக்கரண்டி, தக்காளி சாஸ்-1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக கலக்கி விடவும். இப்போது சுவையான சாஸ் தயார்.
இப்போது இதில் ஏற்கனவே செய்து வைத்திருக்கும் கிளாஸ் நூடுல்ஸை சேர்த்து நன்றாக கிண்டவும். பிறகு கேரட், வெள்ளரி ஆகியவற்றை நீளமாக வெட்டி அதில் சேர்க்கவும். அத்துடன் வறுத்து பொடி செய்யப்பட்ட கடலை-1 தேக்கரண்டியை சேர்த்து நன்றாக கிளறி விடவும். அவ்வளவுதான் கொரியன் கிளேஸ் நூடுல்ஸ் தயார்.
ஜப்சே அதன் அழகான கிளேஸ் நூடுல்ஸ்காகவே பெயர் போன உணவாகும். பார்ப்பதற்கே கண்களை கவரக்கூடியதாக இருப்பதனால் தென் கொரிய மக்களுக்கு மிகவும் பிடித்த உணவாகும். இப்போது இந்த ' ஜப்சே' உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக உள்ளது.